
திருநெல்வேலி கை சுத்து முறுக்கு… ஒரு நினைவலை..
எப்போதுமே எங்கள் வீட்டில் தட்டாமல் இருக்கும் ஒரு தின்பண்டம் என்றால் கை சுத்து முறுக்கு தான். காரணம் காரம் இல்லாததால் வயறை தொந்தரவு பண்ணாது.. எண்ணெயும் அதிகம் குடிக்காது என்பதே.
திருநெல்வேலியின் அனேக இடங்களில் கை சுத்து முறுக்கு குடிசைத்தொழில் போல பண்ணி கொண்டிருப்பதை பார்க்கலாம். பெரிய கூடத்தில் பத்து பதினைந்து பெண்கள் உட்கார்ந்து கொண்டு முறுக்கு சுற்றுவதை பார்க்க முடியும்.
கீழே பெரிய அலுமினிய சட்டியில் மாவு பிசைந்து வைக்கப்பட்டிருக்கும். பெண்கள் ஒரு சின்ன ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு மடியில் பெரிய அலுமினியம் தட்டு வைத்து அதில் மாவை எடுத்து ஐந்து சுற்று மூன்று சுற்று ஏழு சுற்று என கை சுற்றாக முறுக்கு சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
Must Read: ஷவர்மா ஏன் விஷமாகிறது? டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா விளக்கம்
பக்கத்தில் உள்ள அடுப்பில் பெரிய இருப்புச் சட்டியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்க சில பெண்கள் அவர்கள் சுற்றிய முறுக்கை வெந்தெடுப்பார்கள்.முறுக்கு வெந்தெடுக்க..வெந்தெடுக்க சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கும் .
அனேகமாக கல்யாண வீடுகள் தோறும் ஆயிரம் இரண்டாயிரம் என்று விற்பனையாகும் திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் அனேகமாக மறுவீடு பலகாரம் முறுக்கும்..லட்டும்தான்.
சில கடைகளில் மனசிருந்தால் வேகாத முறுக்கும் கொடுப்பார்கள். அரை வேக்காட்டில் இருக்கும் அந்த முறுக்கு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் .உடனே சாப்பிட்டு விடவேண்டும் அரைமணிநேரம் ஆனால் வலுத்து விடும் திருநெல்வேலியில்.. பாளையங்கோட்டை, டவுண் ஏரியாக்களில் நிறைய முறுக்கு கடைகளைப் பார்க்கலாம் ..இந்த கடைகளை பார்க்கும் போது எனக்கு என் ஆச்சி முறுக்கு சுற்றுவது நினைவுக்கு வரும்.அந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பமாக இருந்தபோது முறுக்கு சுற்றுவது ஒரு பெரிய வைபவமாக நடக்கும்.
முறுக்கு சுற்ற என்று 2 பெண்கள் வருவார்கள்.என் அத்தையும் நன்றாக முறுக்கு சுற்றுவார்கள். குத்து பருப்பு (உடைத்த வெள்ளை உளுத்தம்பருப்பு )இளம் வறுப்பாய் பருப்பை வறுத்து, திரித்து, இடித்த அரிசி மாவில் நாலுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஆச்சி கலந்து வைத்திருப்பாள் . கலந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சட்டியில் போடும் போதே வாசம் கமகமவென்று இருக்கும் .
தண்ணீரிலேயே கட்டி காயத்தை ஊறப் போட்டு வைத்திருப்பாள். அந்த தண்ணீரை ஊற்றி உப்பு, எள் அல்லது சீரகம் போட்டு பிசைவாள் ஆச்சி .வெண்ணை ,நெய் சேர்த்த நினைவில்லை ஆனால் சட்டியில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் 2 குழிக்கரண்டி எடுத்து ஊற்றிக் கொள்வாள். மாவை பக்குவமாக பிசைந்து 3 பாத்திரத்தில் போட்டு கொடுத்து விடுவாள். மாவு காயாமல் இருக்க ஈரத்துணியை வைத்து மூடிக் கொள்வார்கள். பெரிய அலுமினியம் தட்டைத் திருப்பிப் போட்டுக் கொண்டு அதில் முறுக்கு சுற்றுவார்கள்.மூன்று பேர் சுத்தி ஒருவர் வெந்தெடுப்பது என்று இருக்கும் .அதை அவர்களுக்குள் மாற்றிக் கொள்வார்கள். இரண்டு விரலிடுக்கில் மாவை வைத்துக் கொண்டு கையை திருப்பி திருப்பி முறுக்கு சுற்றுவதை பார்க்க மிகவும்
சுவாரசியமாக இருக்கும்.அதை விட படு சுவாரஸ்யமாக ஊர் விஷயங்கள் அனைத்தையும் முறுக்கு சுத்தும்போது அலசுவார்கள். ஒரு பக்கா மாவு அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ அரிசி மாவுக்கு 100 மிலி எண்ணெய் மட்டுமே குடிக்க வேண்டும் அதுவே சரியான பக்குவம் என்பாள் .அதாவது கிட்டத்தட்ட முறுக்கில் எண்ணெயே இருக்காது எத்தனை சாப்பிட்டாலும் உடம்புக்கு கெடுதலும் கிடையாது.
ஆச்சி செய்யும் போது நாங்கள் ஆவலாய் எதிர்பார்ப்பது வேகாத முறுக்கு.. அவள் பாஷையில் "வேகா பஜ்ஜி "என்பாள் முறுக்கு எப்படி பஜ்ஜி ஆனது என்று கேட்க கூடாது அது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் .
Must Read: புற்றுநோய் செல்களை அழிக்க வேப்பம் பூ சாப்பிடலாம்…
வேகா முறுக்கும் சுடும்போது நடுவே தரமாட்டாள் .எண்ணெய் குடித்து விடும் என்று... எண்ணெய் சட்டியை இறக்குமுன் கடைசியாகத்தான் வேகா முறுக்கு கிடைக்கும். இப்போதும் என் பிள்ளைகளுக்கு வேகா முறுக்கு என்றால் ரொம்ப இஷ்டம். அதனால் முறுக்கு மாவு வாங்கி அரை வேக்காட்டில் சுட சுட எடுத்துக் கொடுப்பேன்.
பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளாத கலையில் முறுக்கு சுற்றுவதும் ஒன்று என்று தோன்றும். பொதுவாக கடைக்கு கடை, இடத்திற்கு இடம், கை சுத்து முறுக்கு திருநெல்வேலியில் கிடைக்கும் என்றாலும் ...அன்று ஆச்சி செஞ்ச முறுக்கின் மணம் ..இன்னும் மனதிலேயே தங்கியிருக்கிறது.
மேலும் கடையில் வாங்கும் பொருட்களின் ஆயுள் காலம் நாலைந்து நாட்கள் மட்டுமே. ஆனால் அந்தக் காலத்து வீட்டு முறுக்கு. மாதக்கணக்கில் மணம் குறையாமலிருக்கும் ..அதற்கு காரணம் அந்த காலத்து செக்கு எண்ணெய்... தரமான மளிகை பொருட்கள் .எத்தனை இடத்து முறுக்கு சாப்பிட்டாலும் சரி.. ஆச்சி முறுக்கு இன்றும் என்னை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
#Kaimurukku #NellaiKaimurukku #Murukku #RiceMurukku
Comments