புற்றுநோய் செல்களை அழிக்க வேப்பம் பூ சாப்பிடலாம்…
இயற்கை ஆர்வலரும், மூலிகை மருத்துவருமான திரு.மரியபெல்சின் அவர்கள் நமது இணையதளத்தில் தொடர்ந்து பல தகவல்களை வழங்கி வருகின்றார். அவர் அளித்துள்ள மருத்துவக் குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
வேப்பம்பூ
குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிப்பதோடு புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மை படைத்தது வேப்பம்பூ. அதுமட்டுமின்றி வாதம், பித்தம், கபம் போன்றவற்றுக்கு நல்லதொரு நிவாரணியாக செயல்படும் வேப்பம்பூவை துவையல், ரசம் அல்லது பச்சடி செய்து சாப்பிடலாம்.
Must Read: தேரிக்காட்டு முந்திரி, மலைமட்டி பாரம்பர்யத்துடன் இயற்கை விளை பொருட்கள்…
இப்போது ஊரெங்கும் பூத்துக்கிடக்கும் இந்த வேப்பம்பூவை இலவசமாக பறித்து பயன்படுத்திக்கொள்ளலாம். அந்தவகையில் நேற்று மரம் ஏறி வேப்பம்பூ பறித்து இரவில் வேப்பம்பூ துவையல் செய்தேன். சிறிது புளி, காய்ந்த மிளகாய், உளுந்து, கறிவேப்பிலை போன்றவற்றை நல்லெண்ணெய் விட்டு வதக்கி சூடு ஆறியதும் மிக்சியில் அரைத்தேன். அதனுடன் கூடுதலாக பெருங்காயப்பொடி, உப்பு, வெல்லம் சேர்த்து தயாரித்த இந்த துவையல் சாப்பிட சுவையாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.
தோல் நோயைப் போக்கும் சோற்றுக்கற்றாழை
சோற்றுக் கற்றாழை தோல் நோயைப் போக்குவதில் சிறப்பான பங்காற்றுகிறது என்பதை எனது அனுபவத்தில் அறிந்துகொண்டேன்.சமீபத்தில் எனக்கு கைகால் மற்றும் மூட்டு இணைப்பு பகுதியில் அரிப்பு ஏற்பட்டது. தொடை இடுக்கிலும்கூட அதன் பாதிப்பு காணப்பட்டது. இதற்கு இயற்கை வைத்தியத்தில் இருந்து கொஞ்சம் விலகி வேறொரு சிகிச்சை எடுத்ததால் பிரச்சினை வேறு வடிவம் எடுத்தது.
இந்தநிலையில், சோற்றுக்கற்றாழையின் ஜெல்லைத் தடவியதில் நல்ல நிவாரணம் கிடைத்தது. கூடவே, குளியல் சோப்புக்குப் பதில் நானே தயாரித்த கார்போக அரிசி, கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு, ஆவாரம்பூ, கோதுமை, பூலாங்கிழங்கு சேர்த்து அரைத்த கலவையை உடல் முழுவதும் பூசிக் குளித்தேன். இப்போது குளியலுக்கு அந்த பூசு மஞ்சளைத்தான் பயன்படுத்துகிறேன். வீட்டில் உள்ளவர்களும் முழுமையாக மாறிவிட்டார்கள்.
மிளகு கசாயம் குடித்தால் காய்ச்சல் தீரும்
இப்போதோ உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது. தெரிந்த ஒருவருக்கு திடீர் காய்ச்சல். ஒருநாள் இரவு, மறுநாள் காலைக்குள் அதை சரிசெய்தாகிவிட்டது. மூணு தடவை மிளகு கசாயம், ரெண்டு தடவை அமுக்கரா சூரணம், நிறைய தண்ணீர், கஞ்சிச்சோறு, இட்லி என நாம் சொன்ன ஆலோசனைப்படி சரியாகிவிட்டது.
Must Read: தரம், குறைந்த விலை, சுவை மூன்றிலும் அசத்தும் தி.நகர் பாய் கடை
ஆனால், அவர்களது வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு பரவ அதே சிகிச்சை. ஆனால், இப்போது வரக்கூடிய காய்ச்சல் எல்லாம் உடல் வலியை ஏற்படுத்துகிறது. அதற்கு அமுக்கரா சூரணம் நல்ல பலன் தருகிறது. ஆகவே முன்னெச்சரிக்கையாக இருங்கள் .சூட்டைக் கிளப்புவதால் இந்த பிரச்சினை என்று நினைக்கிறேன். பருவகால மாறுபாடுகளால் இதுபோன்று வர வாய்ப்புள்ளது. நிறைய தண்ணீர் குடியுங்கள்.
மூக்கடைப்பு சரியாக சுட்ட மஞ்சள் கிழங்கு
மூக்கடைப்பு, மூக்கில் சளி ஒழுகுதல், மூச்சுவிட சிரமப்படுதல், தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரலி மஞ்சளை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்ததில் நல்ல பலன் கிடைத்ததாக பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள். மஞ்சளின் மகத்துவம் நாம் எல்லோரும் அறிந்ததே. மஞ்சள் கலந்த நீரை வீட்டின் முகப்பில் தெளிப்பது, மஞ்சள் கலந்த நீரை அருந்துவது எல்லாமே நலம் தரும்.
பச்சை மஞ்சள் அதாவது பொங்கல் பண்டிகையின்போது குலையுடன் விற்கப்படும் அந்த பச்சை மஞ்சளுடன் சிறிது இஞ்சி, எலுமிச்சை, கிராம்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடித்தவர்களும் பலன் பெற்றிருக்கிறார்கள். கையில் இருப்பதை விட்டுவிட்டு எது எதையோ தேடி ஏன் அலைய வேண்டும். பச்சை மஞ்சள் இல்லாதவர்கள் காய்ந்த மஞ்சளைப் பயன்படுத்தலாம்.
(திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)
#PattiVaithiyam #CureForCold #CureForFever #CureForCancer #SkinCare
Comments