தேரிக்காட்டு முந்திரி, மலைமட்டி பாரம்பர்யத்துடன் இயற்கை விளை பொருட்கள்…


பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள், கொட்டைகள் உண்ண வேண்டும் என்று அறிவுறுத்துகின்றோம். ஆனால், இயற்கையாக விளைந்த பழங்கள், காய்கறிகள், இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட உலர் பழங்கள், கொட்டைகள் உண்ண வேண்டும் என்ற பழக்கம் அரிதாக மிகச்சிலரிடமே இருக்கின்றன. 

அதற்கு காரணம் உண்மையிலேயே இயற்கையான பாரம்பர்ய மிக்க பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இயற்கை ஆர்வலரும், பயண காதலருமான பசுமை சாகுல் தனது முகநூலில் இப்படியான பாரம்பர்யமான இயற்கை விளை பொருட்களை பற்றி எழுதி வருகிறார். அதனை பெரும்பாலான வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அவரது கட்டுரைகள் தொடர்ந்து இங்கு பதிவு செய்யப்படுகிறது. 

தேரிக்காட்டு முந்திரி

நம் ஊர்களில் விற்கப்படும் முந்திரி பருப்பு அனேகமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. அதில் எண்ணைத்தன்மை அதிகமிருக்கும். பார்க்க பளபளப்புடனும் இருக்கும் அவை ஒட்டு ரக மரத்தில் விளையும் முந்திரி அது.

Must Read: தரம், குறைந்த விலை, சுவை மூன்றிலும் அசத்தும் தி.நகர் பாய் கடை

நம் நாடன் முந்திரி தூத்துகுடி மாவட்டம் உவரி பகுதிகளில் விளைகிறது. கடற்கரையை ஒட்டிய செம்மண் தேரி காட்டில் நாட்டுரக கொல்லாய் மரத்திலிருந்து பறித்தெடுக்கப்படும் முந்திரி பிற்பாடு எங்கள் ஊரில் மதிப்புகூட்ட படுகிறது.

தேரிக்காட்டு முந்திரி

பச்சை முந்திரியை கொட்டையை தீ அடுப்பில் வைத்து சுட்டு தோட்டை உடைத்து பின்னர் வறுத்து.... பெண் தொழிலாளர்கள் மூலம் பருப்பின் மேல்தோலை கைகளால் உறித்து கிடைக்கும் முந்திரி பருப்பே சத்தானது... சுவையானது. பலரும் இத்தொழிலை இயந்திரமயமாக்கி விட்டாலும் ஒருசிலர் மட்டும் இன்னமும்  பாரம்பரிய முறையில் சுட்டு உடைக்கிறார்கள். தேரிக்காட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு  பாரம்பரிய முறையில் உரித்து எடுக்கப்படும் முந்திரி மட்டுமே நம் பசுமை அங்காடியில் பல வருடமாக கோலோச்சுகிறது.

மலைமட்டி வாழை

கன்யாகுமரி மாவட்டம் வாழை விவசாயத்திற்கு பெயர் பெற்றது.50 க்கும் மேற்பட்ட ரகங்களை இங்கு காணமுடியும். அதிலும் மட்டி என்னும் ரகம் எங்கள் மண்ணுக்கே உரித்தானது.குட்டியூண்டு இருக்கும் மட்டி பழம் சுவையும் சத்தும் நிறைந்தது. எங்க ஊர் தாய்மார்கள் தாய்ப்பாலுக்கு அடுத்து மட்டி பழத்தை பிசைந்து ஊட்டிதான் குழந்தையை வளர்ப்பார்கள். மட்டி பழம் சிறப்பு வாய்ந்த ஒரு ரகம் என்றால்... அதனினும் சிறப்பு வாய்ந்தது இந்த மலைமட்டி.பார்க்க சிகப்பு நிறத்தில் இருக்கும் இதை சிகப்பு மட்டி அல்லது செம்மட்டி என்றும் சொல்வார்கள்.

மலைமட்டி வாழைப்பழம்

மலைப்பகுதிகளில் மட்டுமே அபூர்வமாக காணப்படும் இந்த ரகத்தில் எண்ணிலடங்கா சத்துக்கள் அடங்கி இருக்கிறது.  ஒருவாரம் வரை அழுகி போகாமல் தாக்கு பிடிக்கிறது. நாளடைவில் இதன் தோல் கருத்தாலும் உள்ளே பழம் அப்படியே சாப்பிடும் பருவத்தில் இருக்கும்.

Must Read: இளைய தலைமுறைகளிடம் இயற்கை வழிகாட்டல்…

பேச்சிப்பாறையை ஒட்டிய மலை கிராமங்களில் ஒருசிலர்  பயிரிட்டு வந்தார்கள். இப்போது இதை பயிரிடுவது மிகவும் குறைந்து விட்டது.கடந்தவார மலைபயணத்தில் காணி பழங்குடி நண்பரிடமிருந்து இரண்டு மலைமட்டி குலைகளை வாங்கி ஜீப்பில் போட்டு கொண்டுவந்து என் அங்காடி வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளித்தேன்.எங்கள் மாவட்ட மக்களுக்கே இப்படி ஒரு இனம் இருப்பது அனேகம் பேருக்கு தெரியாது. இந்த அபூர்வ ரகத்தை பரவலாக்கும் நோக்கில் எனக்கு தெரிந்த விவசாய நண்பரிடன் இரண்டு மலைமட்டி கன்றுகளும் கொடுத்திருக்கிறேன்.அழிந்து போகாமல் இந்த அபூர்வ இனத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எமது அவா.

-பசுமை சாகுல்

#TerikaduMundri #OrganicMundri  #MalaiMattiBanana #MalaiMatti #OrganicBanana


Comments


View More

Leave a Comments