தரம், குறைந்த விலை, சுவை மூன்றிலும் அசத்தும் தி.நகர் பாய் கடை
சென்னையில் குறைந்த விலையில் அதே நேரத்தில் வயிற்றை பதம் பார்க்காத உணவுகள் வீட்டு சுவையில் கிடைக்கும் இடங்கள் மிகவும் அரிதானவை. சென்னையின் மையப்பகுதியான தியாகராய நகரில் பாய் கடை என்ற பெயரை பலர் உச்சரிக்க கேட்டிருக்கலாம். அசைவம், சைவம் என தனித்தனியே இரண்டு தள்ளு வண்டிகளை மட்டும் கொண்டு மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை வாடிக்கையாளர்களால் நிறைந்து காணப்படும் உணவகம்தான் தி.நகர் பாய் கடை.
Must Read:இளைய தலைமுறைகளிடம் இயற்கை வழிகாட்டல்…
தி.நகர் பாய் கடையில் எந்த மெனு விஷேஷமானது என்று கேட்டால், எல்லா மெனுவும்தான் என்று தைரியமாக சொல்ல முடியும். மிருதுவான புரோட்டா, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பொரிச்ச புரோட்டா அதற்கேற்ற சூடான சைடிஷ்கள் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு வகைகள் கிடைக்கும்.
மட்டன் கிரேவி , சிக்கன் பெப்பர் கிரேவி, நாட்டுக்கோழி கிரேவி என்று சைடிஷ்கள் விதவிதமாக வரிசை கட்டுகின்றன. இரண்டு புரோட்டாவை பிய்த்துப்போட்டு, சிக்கன் கிரேவி விட்டு சாப்பிட ஆரம்பித்தால், சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விட்டு, இன்னும் இரண்டு புரோட்டா, இன்னும் ஒரு கிரேவி என்று கேட்பீர்கள். அந்த அளவுக்கு தரமாக, ருசியாக புரோட்டாவும், சிக்கன் கிரேவியும் சூப்பர் காம்பினேஷனில் இருக்கிறது. நாட்டுக்கோழி கிரேவியும் பஞ்சுபோன்ற சிக்கனுடன், அதோடு கலந்த பெப்பர் கிரேவியும் நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டுபவை.
விலை எவ்வளவு என்று கேட்டால் நிச்சயமாக ஆச்சர்யப்படுவீர்கள். இரண்டு புரோட்டோ ஒரு சிக்கன் கிரேவி 120 ரூபாய்தான். கிரேவி வாங்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. நீங்கள் இரண்டு புரோட்டா, சிக்கன் குழம்பு மட்டும் கூட சாப்பிடலாம். வெறும் புரோட்டோ மட்டும் என்றால் 20ரூபாய் மட்டும்தான். 15 விதமான அசைவ டிஷ்கள் அருமையான சுவையில் சாப்பிடக்கிடைக்கின்றன.
அசைவம் வேண்டாம் என்றால், சைவத்துக்கும் அருகிலேயே ஒரு கடை வைத்திருக்கின்றனர். காளான் வறுவல், பன்னீர் பட்டர் மசாலா, காளான் கிரேவி என்று சைவத்தில் விதம், விதமான சைடிஷ்கள் அசத்தலாக இருக்கின்றன. சைவ சைட்டிஷ் ஒவ்வொன்றும் 50 ரூபாய் மட்டும்தான். புரோட்டோ, இட்லி, இடியாப்பம் எல்லாம் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
இரவு தூங்கப்போகும் முன்பு அருமையான டின்னர் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் தி.நகர் பாய் கடையை நிச்சயம் மிஸ்பண்ணமாட்டார்கள். தரம், சுவை,குறைந்த விலை என்ற மூன்று அம்சங்களிலும் திருப்தியாக இருக்கும் இடம் தி.நகர் பாய்கடை. தி.நகர் பக்கம் வந்தால் இந்த இடத்துக்கு போக மறந்து விடாதீர்கள்.
Must Read:கோடைகால சளித்தொல்லைகளில் இருந்து விடுபடுவது எப்படி?
தி.நகரில் ஜி.என்.செட்டி தெருவில் கண்ணதாசன் சிலையில் இருந்து பாண்டிபஜாருக்கு போகும் வழியில் பாய்கடை இருக்கிறது. கடையின் உரிமையாளர் சதாம். இவரது சொந்த ஊர் விருதுநகர். உணவை நடுத்தர மக்கள் வாங்கி ருசிக்கும் வகையில் விற்பனை செய்கிறார். இங்கு உண்ணும் வாடிக்கையாளர்கள் உணவை பற்றி பிறரிடம் கூறும் போது நாள்தோறும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தி.நகர் பாய்கடை உரிமையாளர் சதாம் மொபைல் நம்பர்; 75500 08390
-ஆகேறன்
#TnagarBaiKatai #StreetFoodAtTnagar #ChennaiStreetFood #NonVegStreetFood
Comments