கோடைகால சளித்தொல்லைகளில் இருந்து விடுபடுவது எப்படி?
தொண்டை வலி, மூக்கு அடைத்துக்கொண்டிருப்பதால் மூச்சுவிடுவதில் சிரமம், தலையில் நீர் தேங்கியிருப்பதால் தலைபாரம், மண்டைவலி என கடந்த சில நாட்களாக பேசக்கூடிய பலர் சொல்கிறார்கள். பருவகால மாற்றத்தின் விளைவாக இத்தகைய பிரச்சினைகள் வீறு கொண்டிருக்கலாம். கோடைகாலத்தின் தொடக்ககாலம் என்பதால் இதுபோன்ற பிரச்சினைகள் வருவது இயல்பு என்றாலும் கொரோனாவுக்குப் பிறகு சளி தொடர்பான பிரச்சினைகள் கொஞ்சம் வீறு கொண்டு எழுகிறது.
எந்த பிரச்சினை வந்தால் என்ன? எல்லாவற்றுக்கும் வழி இருக்கிறது. தொண்டை வலி, எச்சில் விழுங்குவதில் சிரமம், இடைவிடா இருமலால் அவதிப்படுபவர்கள் ஒரு கிராம்பை தீயில் வாட்டி அதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும். சளித்தொந்தரவு இருந்தால் இரவில் பூண்டுப்பால் அருந்துவது நல்லது.
பூண்டுப்பால் செய்முறை பலதடவை சொன்னாலும் இப்போதும் சொல்கிறேன். 10, 15 பூண்டுப்பற்களை உரித்து 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக்கொள்ளவும். பால் + நீர் பாதியாக வற்றியதும் தலா ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், மிளகுப்பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கடைய வேண்டும். அதன்பிறகு தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவு தூங்கப்போவதற்கு முன் அருந்தினால் மூக்கடைப்பில் தொடங்கி, நெஞ்சுச்சளி, கபம், மலச்சிக்கல் சரியாகும்.
Must Read: சென்னையில் 27ம் தேதி பெண்களுக்கான இயற்கை வாழ்வியல் பயிற்சி
மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் ஆடாதொடை கசாயம் குடிக்கலாம். முருங்கை விதைகளை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் சுவாசக்கோளாறு, ஆஸ்துமா தொந்தரவுகளும் தீரும். தலைபாரம் இருந்தால் தலைக்கு குளிப்பதற்கு முன் ஒரு ஸ்பூன் ஓமத்தை வறுத்து பொடியாக்கி உச்சந்தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அல்லது குளித்து நன்றாக தலையை உலரவைத்த பிறகு மிளகைப் பொடியாக்கி ஒரு மெல்லிய துணியில் கட்டி தலையில் தேய்த்தால் மண்டை நீர் விலகும். நல்லவேளை அல்லது நாய்வேளை செடியை எடுத்து நசுக்கி தலையில் வைத்துக் கட்டி வந்தால் தலையில் தேங்கியிருக்கும் நீர் இறங்கும்.
(திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)
#PoonduMilk #PattiVaithiyam #CureForCold
Comments