இயற்கை வழி வேளாண்மையின் வழிகாட்டி கோமதிநாயகம் மறைவு


இயற்கை வேளாண்மை மூலவர்களில் ஒருவரான புளியங்குடி கோமதிநாயகம் அகவை முதிர்ச்சியின் காரணமாக 28ம் தேதி இரவு 10 மணியளவில் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தவர்

கடந்த 1975ஆம் ஆண்டு முதல் உழவர்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றியவர். ஆசிரியராக தனது வாழ்வைத் தொடங்கி வேளாண்மையின் பக்கம் வந்து மாபெரும் பங்களிப்பைச் செய்தவர். அவரது நண்பர்கள் வேலுமுதலியார், அந்தோணிசாமி ஆகியோருடன் தென்மாவட்டங்களில் இயற்கைவேளாண்மையை ஊக்குவித்து வளர்த்தவர்.அவருடன் நான் பயணித்த நேரங்கள் நெஞ்சுக்கு நிறைவும், ஊக்கத்தையும் கொடுத்தவை. அண்ணாரி்ன் மறைவுக்கு நெஞ்சார்ந்த புகழஞ்சலி.(திரு.பாமயன் அவர்கள்)

 

இந்த தருணத்தில் கோமதிநாயகத்துடன்  கடந்த 2004-ம் ஆண்டு தாளாண்மை இதழுக்காக திரு.பாமயன் மேற்கொண்ட நேர்காணலை தமது முகநூலில் பாமயன் மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார். அந்த பதிவை அப்படியே ஆரோக்கிய சுவை இணையதளத்தில் வெளியிடுவதன் வாயிலாக வேளாண் பெருமக்களின் இந்த துயரமான தருணத்தில் நாமும் இணைகின்றோம்.   

நேர்காணலை மீண்டும் நினைவு கூர்வோம் 

ஆசிரியப் பணியில் தன் வாழ்வைத் தொடங்கினாலும் வேளாண்மையே சிறந்தது என்று கருதி, தானும் ஈடுபட்டு தனது இரண்டு மைந்தர்களையும் அதில் ஈடுபடுத்தியவர். ‘எதைச் செய்கிறோமோ, அதைத்தான் சொல்ல வேண்டும்’ என்பவர். நல்ல எழுத்தாளர்; சிறந்த வேளாண்மைச் சிந்தனையாளர் கோமதிநாயகம். அவருடன் சில துளிகள்...

தொழில்நுட்ப மேம்பாடு அவசியம் 

பொதுவாக விவசாய சங்கம் என்றாலே உரங்களுக்கு மானியம் கேட்பது, கடன் கேட்பது என்ற பொருளியல் வகைப்பட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தியே இருக்கும். உங்களது அமைப்பு மட்டும் எப்படி இவ்வாறு மாறுபட்டு தொழில்நுட்பத்தை மையப்படுத்தித் தொடக்கமாயிற்று?

நான் ஒரு ஆசிரியர். எனக்கு பொதுவுடமை இயக்க்த்தின் பல முன்னணித் தலைவர்களுடன் நெருக்கமான நட்பு உண்டு. அதனால் பல்வேறு உழவர் போராட்டங்களைப் பற்றி நிறைய நேரடியாக அறிய முடிந்தது. பொதுவாக அனைத்து உழவர் போராட்டங்களிலும் பயனைவிட உழவர்களுக்கு பாதிப்புதான் அதிகமாக இருந்தது. ஒரு விவசாயி போராட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டாலோ அல்லது தண்டிக்கப்பட்டாலோ அவருடைய விவசாயம் உடனடியாகப் பாதிக்கப்படுகிறது. தண்ணீர் பாய்ச்ச முடியாது; மாடுகளைப் பராமரிக்க முடியாது. எனவே கடும் பொருள் இழப்பு ஏற்படுகிறது. ஆனால் பிற ஒருங்கிணைக்கப் பட்ட தொழிலாளர் போராட்டங்களில் இப்படிப்பட்ட பாதிப்புகள் அதிகம் கிடையாது. 

கியூபாவின் வேளாண்மை வல்லுநர் காத்தரின் மர்ஃபி, அந்தோணிசாமியுடன் கோமதிநாயகம்

(படத்தில் இருப்பவர் கியூபாவின் வேளாண்மை வல்லுநர் (ஃபிடல் காஸ்ட்ரோவுடன் பணியாற்றியவர்) காத்தரின் மர்ஃபி, அந்தோணிசாமியுடன் கோமதிநாயகம்)

உழவர்கள் அரசை அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு இயக்கமாக முடியவில்லை.  எனவே அதை எல்லாம் சிந்தித்துப் பார்த்தபோது உழவர்களுக்கு உண்மையான சொத்து அவர்களது தொழில்நுட்பம்தான் என்று அறிய முடிந்தது. ஏனெனில் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் கடுமையான பாதிப்பை எட்டியபோதிலும் அவர்களது தொழில்நுட்ப மேம்பாட்டினால் மீண்டும் வளமான வாழ்வை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. நம்நாட்டை ஒப்பிடும்போது அவர்களது நாடுகளில் இயற்கை வளங்கள் குறைவுதான். அதேபோல ஆப்பிரிக்கா  போன்ற நாடுகளில் இயற்கை வளங்கள் அளவற்று இருந்தாலும் அவர்களிடம் தொழில்நுட்ப மேம்பாடு இன்மையால் அவர்களால் முன்னேற முடியவில்லை. ஆக இதையெல்லாம் உற்று நோக்கி நாம் வாழும் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொடுப்பதற்கான அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கருதினேன். இதனடிப்படையில் ஒத்த கருத்துள்ள நண்பர்களுடன் கலந்துபேசி இந்த விவசாய சேவா நிலைத்தைத் தொடங்கினோம்.

நீங்கள் நன்கொடை ஏதும் வாங்குவதில்லையே ஏன்?

காந்தியடிகளின் விடுதலைப்போராட்ட வரலாற்றை பல முறை படித்திருக்கிறே.ன். விவேகானந்தர் போன்றவர்களின் கருத்துக்களையும் கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். அரசியல் ரீதியான விடுதலை பெறுவதற்கு முன்பு தற்சார்பு வாழ்க்கை முறை அவசியம் என்று புரிந்து கொண்டேன். ஒரு போராட் டத்தை நடத்துவதற்குக் கூட நாம் தற்சார்புள்ள வர்களாக இருக்க வேண்டும், இல்லையெனில் போராட்டம் இடையில் தொய்வடைந்துவிடும். தற்சார்புதான் மக்கள் முன்னேற்றத்திற்கான அடிப்படை. இது உழவர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். எனவே சொந்தக் காலில் நிற்க வேண்டும் யாரிடமும் நன்கொடை வாங்கக் கூடாது என்று வரையறை செய்து கொண்டோம். 

இதையும் படியுங்கள்: பாமயனின் பொதிகைச்சோலையில் முதல் அறுவடை....

இக்கருத்தை நண்பர்களுடன் சேர்ந்து புகழ்பெற்ற சர்வோதயத் தலைவரான மறைந்த திரு ஏ.பி.சி. வீரபாகு அவர்களிடம் விளக்கிக் கூறினோம். அவர் இதற்கொரு முழுமை கொடுத்து 13.7.1975ஆம் நாள் விவசாய சேவா நிலையத்தைத் தொடங்கி வைத்து கருத்தாழமிக்க உரை நிகழ்த்தினார். அவ்வுரை பின்னர் நாங்கள் மேற்கொண்ட பல செயல்பாடுகளுக்கு அடித்தளமாக இருந்தது.

தொடக்கத்தில் எப்படிப்பட்ட பணிகளைச் செய்தீர்கள்?

உழவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், அவர்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தெளிப்பான்கள் ஆகியவை தடங்கல் இல்லாமல் உரிய நேரத்தில் கிடைக்கும்படியாகச் செய்தோம். இதன் மூலம் தினசரி சுமார் 15000 ரூபாய்க்கு வணிகம் நடந்தது. 1975ஆம் ஆண்டு அது ஒரு பெரிய தொகை. தொடக்கத்தில் உறுப்பினர்களிடம் சந்தா வாங்கினோம். ஐம்பது உறுப்பினர்கள் இருந்தனர். சங்க உறுப்பினர்களின் பம்ப்செட்களை பராமரிக்க ஒரு மெக்கானிக் இருந்தார். எழுத்தர் ஒருவர், அலுவலக உதவியாளர் ஒருவர் என்று மூன்று ஊழியர்கள் இருந்தனர். சங்கத்திற்கு நல்ல வருமானம் வந்தது. ஆனால் விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் நலிவடைந்து வந்தது.

ஏன் இந்தப் பணிகளை நிறுத்தினீர்கள்?

இடுபொருட்களின் விலை அதிகமாகிக்கொண்டே வந்தது. பூச்சித் தாக்குதலும் நோய்த் தாக்குதலும் அதிகமாகிக் கொண்டே போயிற்று. விளைபொருட்களுக்கான விலை கிடைக்கவில்லை. இதனால் செலவு கூடி வருமானம் குறைந்தது. எனவே நாங்கள் செல்லும்பாதையில் மாற்றம் தேவை என்று உணரத் தொடங்கினோம். இதனால் சங்கச் செயல்பாடுகளை மாற்றியமைத்தோம். விதை, உரம் போன்றவற்றை விற்பதை நிறுத்திவிட்டு தொழில்நுட்ப மேம்பாட்டை மட்டும் மையமாக வைத்து இயங்கத் தொடங்கினோம்.

இயற்கைவழி வேளாண்மையில் நுழைந்த காலம் அப்போதுதானா?

ஆம். 1980-81களில் இயற்கை வேளாண்மை பற்றிய தகவல்கள் ஆங்காங்கே வரத் தொடங்கின. ஆனால் முழுமையான தொழில்நுட்ப வழிகாட்டல் கிடைக்கவில்லை. ஆனாலும் இறங்கினோம். அவ்வப்போது இயற்கை வேளாண்மை வல்லுநர்கள் வந்து கூறிய ஆலோசனைகள் எங்களுக்குப் பெரிதும் உதவியது. வெளியிடு பொருள் அதிகம்தேவைப்படாத தற்சார்பு வேளாண்மை பற்றி எங்களது கவனம் முற்றிலும் திரும்பியது.

இயற்கைவழி வேளாண்மையில் உங்களது தொடக்கம் எப்படி இருந்தது?

1982இல் நான் மட்டும் கால்டையை ஆதாரமாகக் கொண்ட இயற்கை வேளாண்மையச் செய்யத் தொடங்கினேன். நடைமுறையில் அதிக மனித உழைப்பு இதற்குத் தேவைப்படுவதை உணர்ந்தேன். காலப்போக்கில் பிரச்சனை குறைந்த செலவு குறைந்த நட்டம் இல்லாத ஒரு வேளாண்மையை நோக்கி எங்கள் பயணம் இருந்தது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டோம்.

இதையும் படியுங்கள்: கூவம் கரையோரம் அரிய வகை மூலிகைகள்… மூலிகை தோட்டம் அமைக்குமா அரசு?

சங்கத்தில் இப்போது எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன?

வேளாண்மை பற்றி வெளிவரும் பெரும்பாலான இதழ்களை வாங்கி வருகின்றோம். குறிப்பாக தொழில்நுட்ப மேம்பாட்டிற்கென வரும் இதழ்களை வாங்கி உழவர்களைப் படிக்கச் செய்கின்றோம். சங்கத்தை நடத்துவதற்கு ஒருவகையான சீட்டு நடத்துகிறோம். அதில் வரும் ஈவு தொகை மூலம் கட்டிட வாடகை, ஒரு பகுதி நேர ஊழியருக்கான சம்பளம் ஆகியவற்றை நிறைவு செய்து கொள்கிறோம். சங்கத்தில் தொடக்க காலத்தில் தீர்மானித்தபடி நன்கொடைகள் ஏதும் பெறக்கூடாது, அரசு மானியங்களை நிராகரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம்.

இதனால் சங்கத்திற்கு என்ன நன்மை?

எங்களது கருத்துக்களை நாங்கள் எங்கும் சுதந்திரமாக எடுத்துச் சொல்ல முடிகிறது. யாரையும் எளிதாக அணுக முடிந்தது. எங்களைக் கண்டு ஏதேனும் நன்கொடை கேட்டு விடுவார்களோ என் யாரும் அச்சப்படவில்லை. இதனால் அரசு அதிகாரிகள் எங்களிடம் நெருங்கி வந்தனர். இவர்கள் நன்கொடை வாங்க மாட்டார்கள் என்பதைத் தெரிந்து இருந்ததால் தயக்கமின்றி சங்கத்திற்கு பலரும் வருகை புரிந்தனர். அதிகாரிகள் மட்டத்திலும் இது எங்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தித் தந்தது.

உங்களது சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

ஆண்டு முழுவதும் மரம் நடும் பணியை அதிகப்படுத்த வேண்டும். வேளாண்மையை வெறுக்கும் இளைஞர் சமூகத்தை ஆர்வமுடன் வேளாண்மைக்குள் இறங்க வைத்து அவர்களை நாட்டிற்கும் தங்களுக்கும் பயனுள்ள ஆற்றலாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். வேளாண்மை என்பது வெறும் சாகுபடி நுட்பங்களை மட்டும் கொண்டதல்ல. அதையும் தாண்டி தற்சார்பு, சுதந்திரமான ஆரோக்கிய வாழ்வு, நல்ல மண், காற்று போன்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு, அமைதியான வாழ்வு போன்ற அனைத்தும் உள்ளடக்கிய ஒரு வாழ்க்கை முறையாகும். இதைக் கொண்டு இளைய தலைமுறைகளிடம் சேர்ப்பதுதான் எங்களது எதிர்காலத் திட்டம்.

செய்தி மற்றும் படங்கள் நன்றி; திரு.பாமயன் முகநூல் பதிவு 

#OrganicFarming  #RIPPuliyagudiGomathiNayagam #PuliyagudiGomathiNayagam 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 


Comments


View More

Leave a Comments