இயற்கையாவே கொழுப்பை குறைக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
ஆரோக்கியற்ற உணவு முறைகளால் நம் உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் சேருகின்றன. கெட்ட கொழுப்பு அல்லது உயர் கொழுப்பு காரணமாக பல உடல்நலக் கோளாறுகள் உருவாகின்றன. உயர் கொழுப்பு காரணமாகத்தான் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுகின்றன. இது தவிர உயர் கொழுப்பு காரணமாக இதய நோய்கள் ஏற்படுகின்றன என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உயர் கொழுப்பை குறைக்க வேண்டுமெனில் அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டியது ஒரு வழிமுறை என்றாலும் கூட, நாம் சாப்பிடும் உணவுகளில் சில மாற்றங்களை மேற்கொண்டாலே நமது கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று மருத்துவர்கள், நுண்ணூட்ட சத்து வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இறைச்சிகள், பால் ஆகிய நிறைவுற்ற கொழுப்பு கொண்ட உணவுப் பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொழுப்பு அமிலம் கொண்ட உணவுகள், கொழுப்பு (விலங்கு உணவுகள், இறைச்சி மற்றும் சீஸ் ஆகியவற்றில் உள்ளது) கொண்ட உணவுகள் உடல் பருமன் / கட்டுப்பாடற்ற எடை அதிகரிக்க காரணமாகின்றன.
கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க நமக்கு இயற்கையாக கிடைக்கும் சில உணவுகளை போதுமான அளவு உட்கொள்ள வேண்டும். .
முழு தானியங்கள்
ராகி, பழுப்பு அரிசி, சோளம் ஓட்ஸ் போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. அவை ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதில் முழு தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. மைதா உள்ளிட்ட வெள்ளை உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணைய்கள் ஊட்டச்சத்து குறைவாகவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இதயத்திற்கும் கேடானவை. எனவே அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
குறைவான கொழுப்பு கொண்ட புரதம்
தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி, மீன், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் முட்டைகள் ஆகியவற்றில் குறைவான கொழுப்பு உள்ளது. இவற்றில் புரதம் அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, சில மீன்கள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை அதிகம் கொண்டுள்ளன.
இதையும் படியுங்கள்; இந்த 5 அறிகுறிகள் உங்கள் உடலில் நீர் சத்து இல்லை என்பதற்கான எச்சரிக்கைகளாகும்
பழம் மற்றும் காய்கறிகள்
பழம் மற்றும் காய்கறிகளிலும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன, மேலும் சில வகையான நார்ச்சத்துகள் உங்கள் கொழுப்பை குறைக்க உதவும். சில கொழுப்புகள் குடலில் இருந்து ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுவதைத் தடுக்க நார் சத்து உதவுகிறது. பீன்ஸ், பட்டாணி மற்றும் பயறு போன்ற பருப்பு வகைகளில் இந்த வகையான நார்ச்சத்து அதிகம் உள்ளன. சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கத்தரிக்காய், வெண்டை, ப்ரோக்கோலி, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் கொடிமுந்திரி ஆகியவை ஆரோக்கியம் தருபவை.
நட்ஸ் அல்லது கொட்டை வகைகள்
கொட்டைகள் நிறைவுறா கொழுப்புகளைக் கொண்டுள்ளன. நிறைவுற்ற கொழுப்புகள் குறைந்த அளவே உள்ளன. இவை உங்கள் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும். கொட்டை வகைகளில் நார்ச்சத்துகள் உள்ளன. புரதம், வைட்டமின் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம், பிற தாவர ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கொட்டைகளை உண்பதன் வாயிலாக நீங்கள் அடிக்கடி நொறுக்கு தீனிகள் உண்பதை குறைக்க முடியும்.
ஓட்ஸ் மற்றும் பார்லி
ஓட்ஸ் மற்றும் பார்லி ஆகியவை பீட்டா குளுக்கன் எனப்படும் ஒரு வகை நார்ச்சத்து நிறைந்த தானியங்கள். ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக தினமும் 3 கிராம் பீட்டா-குளுக்கன் கொண்ட உணவுகளை உண்பதால், கொழுப்பைக் குறைக்க முடியும். நீங்கள் பீட்டா குளுக்கனை சாப்பிடும்போது, இது ஒரு ஜெல்லை உருவாக்குகிறது, இது குடலில் உள்ள கொழுப்பு நிறைந்த பித்த அமிலங்களுடன் பிணைக்கிறது. இது உங்கள் இரத்தத்தில் குடலில் இருந்து உறிஞ்சப்படும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் ரத்த கொழுப்பையும் குறைக்கிறது.
ஆரோக்கியமான எண்ணெய்கள்
ஆலிவ் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய்கள் நிறைவுறா கொழுப்பைக் கொண்டிருக்கின்றன. இவை கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. கொழுப்பின் அளவைக் குறைப்பதில் முக்கியமானது ஆரோக்கியமற்ற கொழுப்புகளை உட்கொள்வதை குறைக்க வேண்டும். வெண்ணெய், சீஸ் மற்றும் நிறைவுற்ற அல்லது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை குறைந்த அளவு மட்டும் உட்கொள்ளுங்கள். ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்களைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் மற்றும் ஆளி விதை போன்ற உணவுகளை உட்கொள்ளவும்.
-பா.கனீஸ்வரி
Comments