உணவு விஷயத்தில் இறையன்பு கறார் உத்தரவு… அரசு வட்டாரங்களில் நடக்கும் உண்மை நிலவரம் என்ன?


தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய ஒரு உத்தரவில், தாம் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் வரும்போது ஆடம்பர உணவு ஏற்பாடு செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். தமக்கு இரண்டு காய்கறிகளுடன், சாதாரண சைவ உணவே போதுமானது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பிருந்த எந்த ஒரு அதிகாரியும் செய்யத் துணியாத ஒரு உத்தரவு இது. 

உணவு உபசரிப்பு என்ற பெயரில் அரசு அலுவகங்களில் உயர் அதிகாரிகளுக்கு கவனிக்கும் செயல்பாடுக்கு தன்னளவில் இறையன்பு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஏன் இங்கே தன்னளவில் என்ற பதத்தை உபயோகிக்கிறோம் என்பது பலருக்கு புரிந்திருக்கலாம். 

அவர் தனக்கு இத்தகைய எளிமையான உணவு போதும் என்றுதான் சொல்லி இருக்கிறார். பல விதங்களில் முன்னுதாரணமாகத் திகழும் இறையன்பு இந்த விஷயத்திலும் தன்னை முன்னோடியாக அடையாளம் காட்டியிருக்கிறார். பிற அதிகாரிகளும் இதனை பின்பற்றினால் நன்றாகவே இருக்கும். இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் உணவு செலவு குறையும். 

பல விதங்களில் முன்னுதாரணமாகத் திகழும் இறையன்பு இந்த விஷயத்திலும் தன்னை முன்னோடியாக அடையாளம் காட்டியிருக்கிறார். பிற அதிகாரிகளும் இதனை பின்பற்றினால் நன்றாகவே இருக்கும். இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் உணவு செலவு குறையும். 

உயர் அதிகாரிகளை கவனிக்கின்றோம் என்ற பெயரில் நடக்கும் வசூல் வேட்டைகளும் குறையும். அதெல்லாம் இருக்கட்டும். உயர் அதிகாரிகளை அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் எப்படியெல்லாம் கவனிக்கின்றார்கள் என்று அரசு வட்டாரத்தில் விசாரித்தோம். 

ஒரு மாவட்டத்துக்கு தலைமை செயலாளரோ அல்லது துறை செயலாளரோ வரும்போது சென்னையில் இருந்தே சம்பந்தபட்ட அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து சம்பந்தபட்ட மாவட்டத்துக்கு ஒரு மெனு லிஸ்டே பறக்கும். பெரும்பாலான அதிகாரிகள் இது போன்றுதான் இருக்கின்றனர். 

ஆனால், அலுவலகப்பூர்வமாக இப்படி மெனு லிஸ்ட் அனுப்ப வேண்டும் என்ற உத்தரவெல்லாம் இல்லை. அதிகாரிகளாக ஏற்படுத்திக் கொண்ட பழக்கம்தான். யார் இதற்கு முதல் புள்ளி வைத்தது என்று தெரியவில்லை. 

அதிகாரிகளை கவனிப்பதற்கு உணவு செலவு என்று கணக்கும் எழுத முடியாது என்று அதிகாரிகள் வட்டாரத்தில்  சொல்கிறார்கள். பின்னர் எப்படித்தான் ஆடம்பர செலவுடன் அதிகாரிகளை கவனிக்கின்றனர்.  

வேறு எப்படி? வசூல் வேட்டைதான். மாவட்டத்துக்கு துறை ரீதியாக  உயர் அதிகாரி வருகிறார்கள் என்றால், அந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளிடம் வசூல் வேட்டை நடக்கும். அந்த வசூலைக் கொண்டு வருகின்ற அதிகாரிகளை உணவு, உபசரிப்பு என்று செமத்தையாக கவனிப்பார்கள். 

தலைமை செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள் வரும்போது இது போன்ற கவனிப்புகள் நடப்பது வழக்கம் உண்டு. எனவே, அதிகாரிகள் வருகை என்றாலே சில நேர்மையான அதிகாரிகள், வசூல் வேட்டையைத் தொடங்கி விடுவார்களே என்று அலறுவது உண்டு. சில நேரங்களில் அதிகாரிகளின் பெயரைச்சொல்லி போலியாக வசூல் வேட்டைகளும் நடப்பதுண்டு. சிலர் அந்த பணத்தை அபேஸ் செய்து விடுவார்கள். 

இதையும் படியுங்கள்; உணவு வீணாவதை தவிர்க்க சில எளிய வழிமுறைகள்

இது எதையும் தெரியாத அந்த உயர் அதிகாரி தம்முடைய செலவில் சாப்பிட்டுவிட்டு சென்று விடுவார். இறையன்பு போன்ற உயர் அதிகாரிகளும் தமிழக அளவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்களைப் பற்றியும் விசாரித்தோம். 

விக்ரம் கபூர் என்ற ஐஏஎஸ் அதிகாரி வெளிமாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது தமது பர்சனல் செக்ரட்டரியை அழைத்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விடுவாராம். அவர் கொடுக்கும் பணத்தில் மட்டுமே தமக்கு உணவு வாங்க வேண்டும் என்று உத்தரவிடுவார். இவரைப் போல டேவிதார் என்ற ஐஏஎஸ் அதிகாரியும் நடந்து கொள்வார் என்று சொல்கிறார்கள். இவர் இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். 

இன்னும் பல அதிகாரிகளும் இது போல சொந்தப் பணத்தில் சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் இறையன்புவின் உத்தரவு குறித்தும், அரசு வட்டாரத்தில் நடப்பது குறித்தும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயத்திடம் கேட்டோம். 

“இறையன்புவின் உத்தரவு உண்மையிலேயே வரவேற்க கூடிய ஒன்று. அதிகாரிகளுக்கு உணவுக்காக செலவு செய்ய வேண்டும் என்ற அதிகாரப்பூர்வ உத்தரவும் இல்லை. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மாவட்டங்களில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைகளில் சலுகை விலையில் உணவு வழங்கப்படுகின்றன. இல்லையெனில் இத்தகைய விருந்தினர் இல்லங்களில் சமைத்து வழங்கப்படுகிறது. 

ஆனால், இதையெல்லாம் மீறி உயர் அதிகாரிகளை குஷிப்படுத்துவதற்காக உணவு மட்டும் அல்ல, அதையும் மீறிக்கூட சிலர் செயல்படுகின்றனர். இத்தகைய செயல்களுக்கு இறையன்பு ஒரு தொடக்கப்புள்ளி வைத்திருக்கின்றார்,” என்றார். 

உணவு அவசியம்தான். ஆனால் ஆடம்பரம் அல்ல என்று இறையன்பு வைத்திருக்கும் தொடக்கப்புள்ளி தொடர வேண்டும். 

-ஆகேறன்

#IraiAnbu #TNChiefSecretary #IraiAnbuIAS #IraiAnbuOrderAboutFood

 

Comments


View More

Leave a Comments