காய்ச்சலில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?


ஊரெங்கும் சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி என பாடாய்ப்படுத்தி வருகிறது. வயது பேதமில்லாமல் பலசாலி என்றும் பாராமல் எல்லோரையும் பதம்பார்க்கும் இந்தச் சூழலில் இந்தப் பதிவு அவசியம் என்று நினைக்கிறேன். ஆனாலும் இப்போது வரும் காய்ச்சலின் தீவிரம் அதிகமாகவே காணப்படுகிறது. இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பரவுவதாகவும், அதற்கென சிறப்பு முகாம்களையும் தமிழக அரசு நடத்துகிறது. அரசு எடுக்கும் முயற்சிகளை வரவேற்போம்

Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை

அதேநேரத்தில் இதுபோன்ற சூழலில் நமது பாரம்பரிய மருத்துவத்தின்மூலம் மிக எளிய முறையில் இந்த காய்ச்சலை விரட்டலாம். ஒன்று முதல் மூன்று நாட்கள் பாதிப்பு இருக்கும் என்றாலும் தீவிர நிலைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆளைப்பொறுத்து நாட்கள் வித்தியாசப்படலாம். 

முதலில் காய்ச்சலை விரட்ட வேண்டுமென்றால், பத்து மிளகை எண்ணெய் விடாமல் வறுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து காலை, மாலை, மதியம், இரவு என குடிக்கலாம். இது எளிமையான வைத்தியம். 

காய்ச்சலுக்கு இயற்கை வைத்தியம்

இதேபோல் இன்னொரு வைத்தியம் மிக எளிதாக மீண்டு வர உதவும். கறிவேப்பிலை சிறிது, நாலைந்து மிளகு, சீரகம் கால் அல்லது அரை ஸ்பூன், சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து வெந்நீர் விட்டு  வடிகட்டி தேன் சேர்த்துக் குடித்தால் காய்ச்சலின் தீவிரம் சட்டென குறையும். 

காலை, இரவு நேரங்களில் அமுக்கரா சூரணத்தை பால் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிடுவது, சுக்கு மல்லி தேநீர், பப்பாளி இலை கசாயம் போன்றவை அருந்துவதும் பலன் தரும். காலை, இரவு வேளைகளில் இட்லி, இடியாப்பம் சாப்பிடுவது நல்லது.

பகல் வேளையில் ரசம் சாதம், மல்லித்துவையல் (தனியா) சாப்பிட வேண்டும். ரசம் கண்டதிப்பிலி ரசமாக இருந்தால் நல்லது. இது மிக எளிதாக காய்ச்சல், சளி, உடல் வலியிலிருந்து மீண்டு வர உதவும். மூச்சு விட சிரமப்பட்டால் முருங்கை விதையை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பருப்பை சாப்பிடுவது நல்லது.

- எம்.மரிய பெல்சின் (9551486617)

#FeverCure  #FeverMedicine #FeverPattiVaithiyam  #FeverNatureCure 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 


Comments


View More

Leave a Comments