புதுகோட்டை கோவில் பக்தர்களுக்கு பார்சல் அன்னதானம்


மனிதன் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான தேவைகளில் முதன்மையானது உணவு. ஆனால், இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்குமான சரிசம  மான உணவு அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லப்படுகிறது. 
எளிய மனிதர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு ஒருவேளை உணவாவது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அன்னதானத்திட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் நிதி உதவியுடன் நடைபெற்று வரும் அன்னதான திட்டம் அந்தந்த கோவிலை சுற்றி வசிக்கும் எளிய மனிதர்களுக்கு ஒரே வேளை பசியாற உதவுகிறது. 
கொரோனா காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கோவில்கள் அடைக்கப்பட்டதால் அன்னதான திட்டமும் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அன்னதானத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 
இந்த தருணத்தில் புதுக்கோட்டையில் உள்ள சாந்தநாத கோவிலில் கலவை சாதம் கொட்டலங்களாக தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கென கோவில் வளாகத்தில் உள்ள சமையலறையில் உணவு தயாரிக்கப்பட்டு பொட்டலம் போடப்படுகிறது. பக்தர்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி உணவுப் பொட்டலங்களை வாங்கி சென்று உண்டு மகிழ்கின்றனர். 
தமிழகத்தில் உள்ள பிற கோவில்களும் இதே நடைமுறையைப் பின்பற்றி எளிய மக்களுக்கான பசியைப் போக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
படம் நன்றி; மாலை மலர்