பழங்களை அதன் சாதக பாதகங்கள் அறிந்து உண்ண வேண்டியது முக்கியம்


1.பழங்கள் நல்லதா? கெட்டதா?

 பழங்கள் நல்லவை. ஆம். தானியங்கள் , செயற்கை உணவுகள் , சீனி , சர்க்கரை , குளிர்பானங்கள் இவற்றையெல்லாம் ஒப்பிடுகையில் பழங்கள் நன்மையானவை. பழங்களில் இருக்கும் ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரை , க்ளூகோஸ் மற்றும் சுக்ரோஸ் எனும் சர்க்கரையை விட நல்லது. 

ஃப்ரக்டோஸ் எனும் இந்த சர்க்கரை நமது இன்சுலின் சுரப்பை க்ளூகோஸ் அளவுக்கோ சுக்ரோஸ் அளவுக்கோ அதிகமாக்குவதில்லை. எனவே காமன் மேன் டயட்டில் இருக்கும் ஒருவர் , தான் உண்ணும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளான இட்லி , தோசை , சோறு போன்றவற்றிற்கு பதிலாக பழங்கள் சிறிது சேர்ப்பாராயின் அது அவருக்கு நன்மையே செய்யும்  

2. பழங்கள் நல்லது செய்கின்றன என்று கூறுகிறீர்கள்  பிறகு ஏன் பேலியோவில்  பழங்கள் இல்லை?

 பேலியோ என்பது குறைந்த மாவுச்சத்து நிறை கொழுப்பு உணவு முறையாகும். பேலியோவில் நாம் எடுக்கும் மாவுச்சத்து ( carbohydrates) அளவு 40 கிராமிற்கு மேல் செல்லக்கூடாது என்பதே முதல் விதி. 

Must Read: மது, புகையை விட நினைப்பவர்கள் இனிப்புகள் ஏன் சாப்பிடக்கூடாது தெரியுமா?

இந்த விதிப்படி நாம் எடுக்கும் ஒவ்வொரு உணவுக்கும் மாவுச்சத்து பார்த்து உண்ண வேண்டும். நாம் பேலியோவில் மாவுச்சத்து குறைவான பழங்களான கொய்யா காய் , வெள்ளரிக்காய், நெல்லிக்காய் மற்றும் அவகாடோ போன்றவற்றை உண்ணச் சொல்கிறோம். 

 ஆனால்  இதை விடுத்து வேறு பழங்கள் சாப்பிட்டால் தினசரி மாவுச்சத்து உண்ணும் அளவுகள் கண்டிப்பாக 40 கிராமிற்கு மேல் செல்லும். மேலும் பழங்களின் க்ளைசீமிக் இண்டெக்ஸ் எனும் அளவைப்பொறுத்து அவற்றில் இன்சுலினை தூண்டும் சர்க்கரை இருக்கிறது என்று அர்த்தம். 

பழங்கள் எப்படி சாப்பிட வேண்டும்?

 

நாம் அதிக க்ளைசீமிக் இண்டெக்ஸ் உள்ள பழங்களை தின்று இன்சுலின் சுரப்பை தூண்டுவது , பேலியோவின் அடிப்படை விதிகளை தகர்த்து விடும். காரணம் பேலியோவில் எவ்வளவுக்கு எவ்வளவு இன்சுலின் சுரப்பை மட்டுப்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும் நேரத்தில் தான் கொழுப்பு எரியும். 

3.பழங்கள் மட்டும் உண்டு வாழும் ஃப்ரூட்டேரியன் டயட் (Fruitarian Diet)  உண்டு வாழ்வது சரியானதா?

பழங்கள் நல்லது தான். அவற்றில் இருக்கும் சர்க்கரை நல்ல சர்க்கரை தான். இருப்பினும் பழங்களையே மூன்று வேளையும் உண்டு வாழ்வது என்பது  உடலுக்கு சிறந்ததல்ல. காரணம் பழங்களில் நம் உடலுக்கு தினசரி தேவையான கொழுப்பு சத்து மற்றும் புரதம் இல்லை. நமது தினசரி   தேவையான 50 முதல் 60 கிராம் புரதச்சத்து கூட பழங்களை முழு நேர உணவாக உண்டால் கிடைக்காது. மேலும் நமக்கு தேவையான அடிப்படை கொழுப்பு நாம் உண்ணும் பெரும்பான்மை பழங்களில் இல்லை. 

4. நான் பேலியோவில் இல்லை . எனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. நான் பழம் உண்ணலாமா? 

நீங்கள் காமன் மேன் உணவு முறையில் இருக்கிறீர்கள். தினமும் மூன்று வேலையும் அதிக மாவுச்சத்துள்ள உணவுகளான இட்லி தோசை என்று எடுப்பதைக்காட்டிலும்  காலை உண்ணும் நான்கு இட்லியில் இரண்டு குறைத்து உண்டுவிட்டு 11 மணியளவில் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்

மீண்டும் மதிய உணவில் சோறு உண்பது குறைத்து விட்டு காய்கறிகள் அதிகம் உண்ணலாம்.  மாலை வேளையில் பஜ்ஜி/ பக்கோடா என்று திண்பதற்கு பதில் கொஞ்சம் ஆப்பிள் உண்ணலாம்.  இரவு உணவில் நான்கு தோசைக்கு பதில் இரண்டு உண்ணலாம்.  தூங்கும் முன்பு அரை வாழைப்பழம் சாப்பிட்டு படுக்கலாம்.

இப்படி தானியங்கள் வழி வரும் மாவுச்சத்தை குறைத்து விட்டு அதை பழங்கள் வழி சிறிது நிரப்பலாம். ஆனால் இது நீரிழிவில் இருந்து ஒருகாலும் உங்களை விடுவிக்காது. கொஞ்சம் சுகர் கண்ட்ரோல் ஆகும்.  ஆனால் ஒரு காலும் நீரிழிவில் இருந்து விடுதலை அடைய முடியாது. இருப்பினும் மூன்று வேளையில் அதிகமாக உண்ணும் மாவுச்சத்தை குறைப்பதால் பயன் ஏற்படும்.

5. பழம் தின்றால் சுகர் குணமாகும் என்கிறார்களே? இது உண்மையா ? 

உண்மை இல்லை. நிச்சயம் பழங்களை கூடை கூடையாக தின்று நீரிழிவை குறைக்க முடியாது. காரணம் பழங்களில் கூட சுக்ரோஸ் எனும் கெட்ட சர்க்கரை கலந்துதான் இருக்கிறது. 

பழங்கள் எப்படி சாப்பிட வேண்டும்?

பழங்களை முழு நேர உணவாக உண்ணும் போது . காலை அரைக்கிலோ ஆப்பிள்  மதியம் அரைக்கிலோ ஆரஞ்சு இரவு அரைக்கிலோ வாழைப்பழம் என்று உண்போம் இவற்றில் இருக்கும் மாவுச்சத்து கட்டாயம் நமது இன்சுலின் சுரப்பை அதிகமாக தூண்டும். 

இத்தனை அதிகமாக பழங்கள் திண்ணும் போது நமது உடலில் இந்த ஃப்ரக்டோஸ் எனும் இனிப்பு , ட்ரைகிளசரைடுகளாக மாறி கல்லீரலில் சேரும். இதனால் ஃபேட்டி லிவர் எனும் கல்லீரல் கொழுப்பு நோய் வரும். இது ஆபத்தானது. நீரிழிவு ஆரம்பத்தில் சிறிது கட்டுக்குள் வந்ததைப்போல் தெரிந்தாலும் சிறிது நாட்கள் கழித்து சர்க்கரை அளவுகள் இல்லை மீறிச்செல்லும்.

6. நீரிழிவு நோய் உள்ள எனக்கு பழம் உண்பது சிறந்ததா? பேலியோ சிறந்ததா?  விளக்கவும் ப்ளீஸ்.. 

நீரிழிவு உள்ள ஒரு நபருக்கு கண்டிப்பாக குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறையான பேலியோ உணவு முறை தான் சிறந்தது. பழங்களில் தினசரி அடிப்படை தேவையான கொழுப்பு மற்றும் புரதம் இல்லை.  ஆனால் பேலியோவில் இரண்டும் உள்ளது. மேலும் தினசரி உண்ண வேண்டிய மாவுச்சத்து அளவுகள் பழங்களை சேர்த்து உண்பதால் அதிகமாகத்தான் செய்யும். ஆகவே பேலியோ கடைபிடிக்கும் மக்கள் பழங்களை தவிர்ப்பது சிறந்தது 

7. யாரெல்லாம் பழங்கள் உண்ணலாம் ?

சாக்லேட், பிஸ்கட்டுகள் , குளிர்பானங்கள் இவற்றை விட பழங்கள் சிறந்தவை. ஆகவே குழந்தைகளை வளர்க்கும் போதே காய்கறிகளும் பழங்களும் உண்ணுமாறு வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் ஸ்நாக்சாக பழங்கள் கொடுக்கலாம்.

Must Read: தொப்பை குறைய; மூட்டுவலி நீங்க, தூக்கம் வர மூன்று விஷயங்களை மட்டும் செய்யுங்கள்

உடல் பருமன்/ நீரிழிவு / ரத்தக்கொதிப்பு / ஃபேட்டி லிவர்/ PCOD போன்ற எந்த நோய்களும் இல்லாதவர்கள் தினமும் காலை மாலை ஸ்நாக்சாக பழங்கள் எடுக்கலாம்  நீரிழிவு நோய்க்கு மாத்திரை எடுத்து காமன் மேன் உணவு முறையில் இருக்கும்   ஒருவர், அவர் தனது தானிய உட்கொள்ளுதலை தவிர்க்கும் பொருட்டு அல்லது குறைக்கும் பொருட்டு பழங்களை உண்பாராயின் அது அவருக்கு நன்மை தரும். 

ஆனால் பழங்களைப்பொறுத்த வரை அதிக க்ளைசீமிக் இண்டெக்ஸ் உள்ள பழங்களான மா, பலா , வாழை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு , ஆப்பிள் கொய்யா , வெள்ளரி , அவகாடோ போன்ற பழங்களை சிறிதளவு  உண்ணலாம்.

முடிவுரை

பழங்கள் தானியங்களை விட சிறந்தவை  காமன் மேன் உணவு முறையில், பழங்களை ஸ்நாக்சாக பயன்படுத்தலாம் பழங்கள் ஒருபோதும் நீரிழிவை குணப்படுத்தாது. முழுவதும் கட்டுக்குள் வைக்காது. சிறிது கட்டுக்குள் வைக்கும். ஆனால் அதற்கு தானியங்களை குறைத்து உண்ண வேண்டும். 

எடை குறைப்பு நிலையில் / நீரிழிவு போன்ற நோய் இருப்பவர்களுக்கு  பேலியோவில் பழங்கள்  கிடையாது.  மெய்ண்டெணன்ஸ் பேலியோவில்  சிறிது பழங்கள் உண்ணலாம்  பழம் உண்ணும் டயட்டா? பேலியோவா? எது நீரிழிவிற்கு சிறந்தது ? என்று கேட்டால் சந்தேகமின்றி பேலியோ எனும் குறைமாவு ஆரோக்கிய கொழுப்பு உணவு முறை தான். 

- Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை

#HowtoeatFruits  #BenefitsofFruits  #WheneatsFruits


Comments


View More

Leave a Comments