காயத்ரி மஹால் உணவு திருவிழாவும் பத்மா கார்டன்ஸ் மிளகாய் பஜ்ஜியும் ..


திருப்பூரில் உணவு திருவிழா என்றதுமே மனசு சென்னை பெசன்ட் நகர் பீச்சில் நடந்த உணவு திருவிழாவின் பழைய நினைவுகளை ருசிக்க ஆரம்பித்துவிட்டது. பல மாநில /நாடுகளின்   உணவுகளை  சுட சுட...  வேட்டையாடிய தருணங்கள் மீண்டும் திரும்புகிறது என்ற நினைப்பில் சனி இரவே ... குடும்பத்தோடு நாளைக்கு போறோம் என முடிவு செய்தாகிவிட்டது. "எதையும் பிளான் பண்ணி பண்ணனும்" என்கின்ற பாடி சோடா தத்துவத்தின் படி...  சரியா பன்னிரண்டு மணிக்கு கிளம்பி காயத்ரி மஹால் போறோம் 

Must Read:சென்னையில் 14ம் தேதி பாரம்பர்ய மருத்துவ பயிற்சி…

அங்கே வித விதமான செட்டிநாடு ,வட இந்தியா ,ஆந்திரா ,கர்நாடகா,சைனீஸ்,பர்மா, தாய்லாந்து கான்டினென்டல் , உணவு வகைகளை ருசிக்க ருசிக்க  ஒரு புடி புடிக்கிறோம்... அப்படியே சாயந்திரம் நாலரை மணிக்கு அங்கிருந்து கிளம்பி பத்மா கார்டன் பொருட்காட்சி வந்து மிளகாய் பஜ்ஜியை கடி கடின்னு கடிக்கிறோம் என்பதுதான் எங்களின் அதி பயங்கர  மாஸ்டர் பிளானாக இருந்தது.

விடிஞ்சாச்சு.... அலாரம் வச்சு எழுந்தாச்சு ....  ரெண்டு தடவை பல் விளக்கியாச்சு ... காலைல பிரேக் பாஸ்ட் ?  " அங்கே போய் சாப்பிட வயித்தில இடம் வேணாமா ?  இந்தாங்க ஒரு ஆப்பாயில் மட்டும் போதும் " என்ற வீட்டம்மணியின் ராஜ தந்திரத்தை மெச்சியபடி .. அதிகம் தண்ணீர் கூட குடிக்காமல் வயிற்றுக்குள் போதிய ஸ்டோரேஜ் வசதிகளை செய்து கொண்டு பப்பரக்கா என கொளுத்தும்  வெயிலில் மனைவி... மகள் சகிதம் கிளம்பியாயிற்று .

திருப்பூர் உணவு திருவிழா

காயத்ரி மஹால் உள்ளே ஏகப்பட்ட கார்கள் ..... உள்ளே நுழையும் போதே "இந்த பொறப்புத்தான் நல்ல ருசிச்சு சாப்பிட கிடச்சுது " என இசைஞானியின் இசை வரவேற்க ..... ஒரு மாதிரி ஜிகினா  கனவுகளுடன் ஸ்டாலுக்குள் நுழைந்தால் ... "கருப்பட்டி....  கருப்பட்டி ... கருப்பட்டி " என ஒரு கூவிக்கொண்டிருந்த ஒரு சேட்டன் எங்களை கண்டதும்  "சாரே! சுக்கு,மிளகு சேர்த்த கருப்பட்டி வாங்கிக்கணும் .... நன்னாயிட்டு ஜீரணம் ஆகும்"  என்றார்.

நான் தலையை சொரிந்தபடி அவர் அருகே சென்று "சேட்டா " ஜீரணம் ஆக முதல்ல ஹெவியா லஞ்ச் சாப்பிடணும்... அதுக்கப்புறம் இதை வாங்கிக்கிறோம் என பார்வையால் பிரியாணியயும், சிக்கன் ஐட்டங்களையும் துழாவ.... பின்புதான் உரைத்தது... அங்கிருந்த ஸ்டால்கள் எதுவும் சூடான  உணவை விற்பனை செய்பவை அல்ல... உணவு சமைப்பதற்கான பொருட்களை  விற்பனை செய்பவை என்று .PACKED  ஸ்னாக்ஸ் .... நெய் ,கருப்பட்டி, சத்து மாவு ,சில்லி மாவு என அன்றைய தினத்திற்க்கான பல்பு அங்கிருந்து பிரகாசமாய் எரிய தொடங்கியது.

Must Read: புற்றுநோய் செல்களை அழிக்க வேப்பம் பூ சாப்பிடலாம்…

வீட்டம்மினி இதையும் ஏன் விடுவானேன் என கருப்பட்டி,தேங்காய் சிப்ஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா   என பர்சேஸில் இறங்க... என் பர்ஸின் கனம் பப்ஜி ஆடும் போனின்  பேட்டரி போல சர்ர்ர்ர் என குறைய ஆரம்பித்தது. இதில் ஆறுதலான விஷயம் என்னவெனில் வெளியில் அவ்வளவு எளிதில் கிடைக்காத ஏராளமான புதுவகை ஸ்னாக்ஸ் இங்கு கிடைத்ததுதான்... தேங்காயில் வறுக்கப்பட்ட ஸ்வீட்/கார சிப்ஸ் வகைகள், சாக்கலேட் , ரோஸ் வாட்டர் பர்பி வகைகள்.. போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை. பசி கண்ணை கட்ட ஆரம்பிக்க, வெளியே FOOD கோர்ட் இருக்கிறது என்கின்ற அசரீரி காதில் தேவ காணமாய் ஒலிக்க ... எப்படி அதை கவனிக்க மறந்தோம் என வெளியில் ஓடி வந்தோம். வெளியே ஒரு பெண்மணி ஒரே ஒரு தட்டில் கொஞ்சம் பக்கோடாக்களை பரப்பி வைத்து கொண்டிருக்க... " அக்கா  இங்க எங்க FOOD கோர்ட் இருக்கிறது என வினவ ... "இதுதாங்க அது" என்றார்.... நான் சந்தேகத்துடன் அவரை பார்க்க...   "பாருங்க சார் .... நீங்க நம்பனும்னு "FOOD கோர்ட்" னு போர்டு கூட எழுதி போட்டிருக்கோமே " என்றார்.  பல்பு இன்னும் உக்கிரமாய் எரிய ஆரம்பித்தது.

படம், செய்தி நன்றி; மனோகர் சண்முகம்  முகநூல் பதிவு 

#FoodFestival    #TirupurFoods   #FoodExpo  

 


Comments


View More

Leave a Comments