கோழி கறியை வித விதமான ருசியில் வழங்கும் உணவகம்
அது என்னப்பா சாமுத்திரிகா லட்சணம்னா.... பெண்களுக்கும் பட்டுப் புடவைக்கும் தான் சொல்லனுமா. அருமையான நாட்டுக்கோழிக்கு சொல்லக்கூடாதா. ஏன் சொல்லக்கூடாது சொல்லலாம், அப்பேர்ப்பட்ட சுவை அமைந்தால் கண்டிப்பா சொல்லலாம்.
நம்ம பக்கெட் லிஸ்ட்ல ரொம்ப நாளா போகணும்னு காத்திருந்த கடை தான் திருப்பூர் நாட்டுக்கோழி விருந்து. நண்பர் கார்த்திக் கடையோட நாட்டுக்கோழி சுவையை பத்தி பலரும் பாராட்டிட்டாங்க அதனாலயே என்னமோ நம்ம நாக்கும் மேட்டங்காடு பக்கமா திரும்பிகிச்சு... அதை சரி செய்ய கிளம்பி போய் விட்டோம்.
Must Read: வார இறுதியில் நடைபெறும் 2 ஆரோக்கிய பயிற்சிகளை மறவாதீர்
தலைவாழை இலையை போட்டு ஓரத்தில ஒப்புக்கு உப்ப வச்சு அகர முதல.... அதாவது நாட்டுக்கோழியில முதல்ல ருசிக்க வேண்டியது நாட்டுக்கோழி சாறு (சூப்)... கொஞ்சம் உப்பு மிளகு தூக்கலா போட்டு துவம்சம் பண்ற ருசியில அதுவும் மண்குடுவையில் வந்துச்சு பாருங்க...ultimate.
அடுத்ததா ஆக்கி வச்ச மண் சட்டியில இருந்து அகப்பையில மூட்டி எடுத்த நாட்டுக்கோழி மிளகு வறுவல்... தேவைக்கேற்ப மசாலாவை மட்டும் போட்டு அப்படியே ஒரு மிளகு பிரட்டலோட ஒரு வறுவல்... அப்படியேவும் சாப்பிடலாம் சாப்பாட்டோட பெரட்டியும் சாப்பிடலாம்.

அடுத்தாப்புல இன்னொரு மண்சட்டில இருந்து வந்துச்சு பாருங்க நம்ம மிளகாய் கறி அதான்ங்க நாட்டுக்கோழி சிந்தாமணி... சமைக்கத் தெரியாதவன் சமைச்சாவே சிந்தாமணி செமையா இருக்கும்.... ஆனா, அதிலேயே ஊறிப்போன மனுஷங்களோட கை பக்குவம் சொல்லவாவேனும்.., தாறுமாறு தான்... ஆமாங்க நாட்டுக்கோழி சிந்தாமணி வேற ரகம் அம்புட்டு ருசி சொல்லவே வேண்டாம்.
நாட்டுக்கோழி சமைச்ச மண் சட்டியில தம்மா துண்டு வடிச்ச சோத்த போட்டு, அகப்பையில அப்படிக்கா ஒரு புரட்டு இப்படிக்கா ஒரு புரட்டு புரட்டி எடுத்து கொடுத்த வடசட்டி சோறு நாக்குல தாண்டவம் அடிச்சு. நாட்டுக்கோழி எலும்ப தனியா தரம் பார்த்து பிரிச்சு அதுல வச்சு தண்ணி குழம்பு தனித்துவம் தான்.
கூடக் கொடுத்த மட்டன் குழம்பு மனமாத்தான் இருந்தது ஆனால் மனசு தான் நாட்டுக்கோழி பக்கமே மேஞ்சிட்டு இருந்தது. கூட வந்தவங்க எலும்பு கடிச்ச சத்தத்திலேயே புரிஞ்சது நாட்டுக்கோழி அக்மார்க் குவாலிட்டினு.
Must Read: ஆற்காடு மக்கன்பேடாவை சுவைக்க மறக்காதீர்கள்
எலும்பு கடிச்ச வாய்க்கு ரசம் காட்டாம விட்டால் தெய்வ குத்தம் ஆயிடும்.அதனால கொஞ்சோண்டு சாப்பாட்டுக்கு தக்காளி ரசம் தம்மா துண்டு சாப்பாட்டுக்கு பச்ச புளி ரசம் அப்படின்னு ரெண்டையும் ருசி பார்த்துட்டு...,கோழி முட்டைய அடைகாத்த மாதிரி.., இலை-யோரமா கொஞ்சூண்டு கறிய தயிர் சோத்துக்கு அடைகாக்கிறது கொஞ்சம் கஷ்டமான வேலை தான்...
அப்படி அடகாத்த சிந்தாமணி கறிய. சின்ன வெங்காயமும் மஞ்சள்தூளும் போட்டு தாளிச்ச தயிர் சோத்தோட சாப்பிட்டா.... பேஷ் பேஷ் இதைத்தான் எதிர்பார்த்தேங்கிற மாதிரி ஒரு பரம திருப்தி.
ஒரு கோழி தான்.... சூப், சிந்தாமணி, மிளகு வறுவல், தண்ணி குழம்பு இப்படி வகைவகையா பிரிச்சு வக்கனையா ஆக்கி போட்டா இதைவிட சிறப்பான சாமுத்திரிகா லட்சணம், வேற எதுவும் தோணல. இந்த தரமான விருந்துக்கு திருப்பூர் நாட்டுக்கோழி விருந்து 2 ரயில்வே கேட்டு, பழைய ராமகிருஷ்ணாபுரம். என்ற முகவரியை அணுகலாம்.
#foodreview #restaurantreview #Tiruppūrnāṭṭukkōḻiviruntu
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, தேன்சாப்பிடும் முறை
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More