முட்டை , மாமிசம், மீன் சாப்பிட்டால் ரத்தத்தில் க்ளூகோஸ் ஏறுமா?


கிளினிக்கில் ரத்த க்ளூகோஸ் அதிகமாக இருக்கும் டயாபடிஸ் நோயாளிகளாக இருந்தாலும் சரி. பிரஷர் அதிகமாக இருக்கும் நோயாளிகளாக இருந்தாலும் சரி அவர்கள் என்னிடம் கூறுவது

"சார்..சுகர்னு தெரிஞ்சதுமே மட்டன் சாப்புடறதை நிறுத்தட்டேன்."

"முட்டை சாப்புடறதில்லை. நிறுத்திட்டேன்"

"என்னைக்காவது ஒரு நாள் மீன் மட்டும் சாப்டுவேன். மட்டன் துளியும் கிடையாது"

Must Read: ஆன்றோர்களின் பார்வையில் சிறப்பாக முன்மொழியப்பட்ட புத்தகங்கள்

இப்படியாக பல்வேறு மாடுலலேசன்களில் தாங்கள் சாப்பிட்டு வந்த  நான் வெஜ் உணவுகளை நிறுத்தி விட்டதாகக் கூறுவதைக் காண்கிறேன். இன்னும் பலர் மட்டன் சாப்பிட்டதை குற்ற உணர்ச்சியுடன்

"சார்.. இன்னைக்கு விருந்துல கொஞ்சம் மட்டன் சாப்ட்டேன்" என்கிறார்கள்

பிறப்பில் இருந்து மரக்கறி உண்ணும் உணவுமுறையில் (LACTO VEGETARIANS BY BIRTH)   இருப்பவர்களையும் தங்களின் விருப்பத்தின் பேரில் மாமிச உணவை விடுத்து மரக்கறி  உணவு முறைக்கு மாறியவர்கள்( LACTO VEGETARIANS BY CHOICE)  குறித்து எனக்கு யாதொரு பிரச்சனையும் இல்லை.உணவு சார்ந்து தங்களது முடிவுகளை எடுக்கும் உரிமை அவரவர்க்கு உண்டு. இது அவர்களின் சொந்த முடிவு. அதை நாம் மதிக்க வேண்டும்.

மாமிசம் உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமா?

ஆனால் சமூகத்தில் தோற்றுவிக்கப்பட்ட மூடநம்பிக்கையால் மாமிச உணவுகளை நிறுத்தி அல்லது குறைத்து உண்ணும் போக்கு , மாமிசம் சாப்பிடுவதை குற்ற உணர்ச்சியுடன் அணுகும் போக்கு  பலரிடம் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவும் அந்த எண்ணங்களை சிறிது சரிசெய்யவுமே இந்தப் பதிவு.

ரத்த க்ளூகோஸ் அளவுகள் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளை சாப்பிட்டால் தான் மிகுதியாக ரத்தத்தில் ஏறும். தானியங்கள் ( அரிசி, கோதுமை , மைதா, சிறுதானியங்கள் ), இனிப்பு நிறைந்த சீனி , நாட்டு சர்க்கரை , வெல்லம், கருப்பட்டி என்று சாப்பிட்டால் ரத்த க்ளூகோஸ் அளவுகள் மிகவும் ஏறும்.

முட்டை , மாமிசம் ( அது பறவையினம், கால்நடை எதுவாயினும்),மீன்கள் என்று எதை சாப்பிட்டாலும் ரத்த க்ளூகோஸ் அளவுகள் ஏறுவதில்லை.நீரிழிவு இருக்கும் ஒருவர் தான் உண்ணும் அரிசி/ கோதுமை அளவைக் குறைத்து அதற்கு ஈடாக  முட்டையோ மாமிசமோ சாப்பிட்டால் அதனால் நீரிழிவு நோயருக்கு பயனே அன்றி பாதகம் அன்று.

உதாரணமாக ஒரு நீரிழிவு நோயர் காலை உணவாக மூன்று தோசை அல்லது நான்கு இட்லி சாப்பிடும் இடத்தில் அவர் ஒரு தோசையும்  இரண்டு  முட்டையும் சாப்பிடுவாராயின் அல்லது மூன்று தோசைக்கு/நான்கு இட்லிக்கு பதிலாக  மூன்று முட்டைகள் சாப்பிடுவாராயின் அவருக்கு அதனால் நன்மையே ஆகும்.மதிய உணவில் சோறு உண்ணும் அளவைக் குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக ஒரு முட்டை அல்லது இரண்டு துண்டு மீன் அல்லது மாமிசம் சாப்பிடுவாராயின் அதனால் அவருக்கு நன்மை. 

இன்னும் சொல்லப்போனால்  மாமிசம்/ மீன் / முட்டையில்  அனைத்து அமினோ அமிலங்களும் நிறைந்த புரதச்சத்து கிடைக்கிறது.  நாம் உண்ண வேண்டிய உணவில் தலையாய ஊட்டச்சத்து "ப்ரோட்டீன்" எனும் புரதச்சத்து ஆகும்.  அந்த புரதச்சத்து கிடைக்கும் விசயங்களான மாமிசம் , முட்டை , மீன் போன்றவற்றை நிறுத்துவதால் நீரிழிவு நோயருக்கோ ரத்த கொதிப்பு நோயாளிக்கோ யாதொரு பயனும் இல்லை.

இன்னும் முட்டை மீதும் கோழி மீதும் கால்நடை மாமிசம் மீதும் கொழுப்பு என்ற பூதத்தைக் கூறி அச்சமூட்டப்படுகிறது. இது தவறு. முட்டையை வெள்ளைக் கரு மட்டும் உண்ணும்  பழக்கம் பரவியுள்ளது. முட்டையினால் இதய அடைப்பு ஏற்படுகிறது என்றும் முட்டையினால் மூளை ரத்த நாள அடைப்பு ஏற்படுகிறது என்றும் இதுவரை எந்த ஆய்வும் கூறவில்லை.

Must Watch: சளி, இருமலை தடுக்கும் யூகலிப்டஸ் இலைகள்

எனவே முட்டை என்றால் அது முழு முட்டை தான். மஞ்சள் கருவில் நமக்குத் தேவையான புரதம் மற்றும் பல முக்கிய ஊட்டச் சத்துகள் உள்ளன. ஒரு நீரிழிவு நோயரும் ரத்த கொதிப்பு நோயரும் இனிப்பு / எண்ணெயில் வறுத்த உணவுகள் / தானியங்களினால் வரும் மாவுச்சத்தை கட்டுக்குள் வைக்காமல் முட்டையின் மஞ்சள் கருவை நிறுத்தி வைப்பதால் பயனுண்டோ?

இறைச்சி உண்பதால் சர்க்கரை அளவு அதிகரிக்குமா?

 

இன்னும் பலர்  கோழி என்றால் நாட்டுக் கோழி உண்பார்கள். நான்கு கால் உயிரினங்களின் மாமிசத்தை சாப்பிட்டால் தவறென்று ஒரு கருத்தை வைத்திருப்பார்கள். ஆனால் நல்ல புரதச்சத்தை குறைந்த மாவுச்சத்தில் வழங்கும்  கோழி - அது நாட்டுக் கோழியோ ப்ராய்லர் கோழியோ ,இதர பறவையினங்களின் இறைச்சி,  நான்கு கால் உயிரினங்களின் இறைச்சி அவரவர் விருப்பம் போல வாங்கி உண்ணலாம்.

இன்னும் கூறுகிறேன் சிக்கனுடன் பிரியாணி/சோறு தினமும் உண்பது வேறு  சிக்கனை மட்டும் அல்லது சோறைக் குறைத்து சிக்கனை உண்பது வேறு கால்நடைகளின் மாமிச பிரியாணியை/ சோறை அடிக்கடி உண்பது வேறு  கால்நடை மாமிசத்தை மட்டும் அல்லது கால்நடை மாமிசத்தை உண்டு அதற்கு ஈடாக சோறைக் குறைத்து உண்பது வேறு.

முட்டை பரோட்டா அடிக்கடி உண்பது வேறு . முட்டைகளை மட்டும் தனியாக தினமும் உண்பது வேறு. மேற்சொன்ன விளக்கங்களை நன்றாக சிந்தித்து தங்களுக்கு உகந்த உணவு சார்ந்த முடிவுகளை எந்த முன்முடிவுக்கும் இடம் தராமல் எடுங்கள்

-டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை

 

#BloodSugar #NonVegFood  #DiabetesFood #ProteenRichFoods


Comments


View More

Leave a Comments