அசத்தும் சுவையால் மனதில் நின்ற மிக்ஸ் வெஜ் ஊறுகாய்


தில்லி ஊறுகாய் 

மிக்ஸ்வெஜ் ஊறுகாய் 

தில்லிசுவையில் ஊறுகாய்

தில்லியை விட்டு வரும்போது எதையெல்லாம் மிஸ் பண்ணுவீங்க என்று கேட்டிருந்தார் நண்பர் இளங்கோவன் முத்தையா. இப்போது சாப்பிடும்போது தோன்றியது - மிக்ஸ் வெஜ் ஊறுகாய்.நீங்கள் ஹோட்டலுக்குப் போனால் உணவுகளை பார்சல் வாங்குவீர்கள்.  ஊறுகாய் மட்டும் வாங்கி வருவீர்களா? நான் வாங்கி வருவேன்.

எங்கள் பகுதியில் இருக்கிற ஒரு கடைக்குப் பெயர் பராந்தா பாயின்ட். (பரோட்டா பாய்ன்ட்.) இங்கே விற்கும் பரோட்டா வகைகள் குறித்து ஏற்கெனவே பதிவு எழுதியிருக்கிறேன். ஆனியன் பராந்தா, மேத்தி பராந்தா, ஆலு பராந்தா, பனீர் பராந்தா என பல வகைகள் இருக்கும். 

Must Read: அதிக குர்குமின் உள்ள மஞ்சள் சிறந்தது ஏன் தெரியுமா?

வெங்காயம், வெந்தயம், உருளைக் கிழங்கு, பனீர், கீரை போன்றவற்றை மாவுக்குள் பொதித்து, சப்பாத்தி போல உருட்டிச் செய்வது. வடக்கத்தியர்கள் இதற்கு சைட் டிஷ் ஏதும் இல்லாமலே சாப்பிடுவார்கள். அல்லது ஊறுகாய் இருந்தால் போதும்.

ஆமீனா ஊருக்குப் போனால், நான் தனியாக இருந்தால் இரவுகளில் சாப்பிட நாடுவது இந்தக் கடைதான். சுமார் 25 ஆண்டுகளாகப் பழக்கம். ஒரு காலத்தில் எப்படி சின்னக் கடையாக இருந்ததோ அப்படியேதான் இன்றும் இருக்கிறது. ஆனால் ஸ்விக்கி, ஸொமாட்டோ புண்ணியத்தில் வியாபாரம் செமையாக நடக்கிறது. 

அந்தக் கடைக்கார இளைஞர் அன்று எப்படி இருந்தாரோ இன்றும் அப்படியே இளைஞர் போலவே இருக்கிறார். எப்போதும் அதிர்ந்து பேசாத, எப்போதும் சிரித்துப் பேசுகிற மனிதர் என்பது இன்னொரு சிறப்பு.

இந்த ஊரில் ஊறுகாய்கள் பலவகையாக இருக்கும். சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியே ஊறுகாய் கடைகள் என்று சிலர் எழுதுகிறார்களே... அவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். இங்கே எல்லாப் பகுதிகளிலுமே தள்ளுவண்டிகளில் பக்கெட்டுகளில் வைத்துக் கொண்டு விற்பார்கள். நம்ம ஊர் ஊறுகாய் வகைகளோடு ஒப்பிட்டால் விலையும் குறைவு. 

மிக்ஸ் வெஜ் ஊறுகாய்

மிக்ஸ் வெஜ் ஊறுகாயில் பல காய்களும் உண்டு - காரட், காலிபிளவர்,  கோவைக்காய், மாங்காய், எலுமிச்சை.... பச்சை மிளகாய்.  நான் குறிப்பிட்ட பராந்தா பாயின்ட் கடையில் கிடைக்கும் மிக்ஸ்வெஜ் ஊறுகாய் சிறப்பாக இருக்கும். சிவப்பாக இருக்கும், மிளகாய் விதைகளும் நிறைய இருக்கும். ஆனால் காரம் அதிகம் இருக்காது. எண்ணெயில்தான் மிதக்கும், ஆனால் கை கழுவும்போது எண்ணெய்ப் பிசுக்கே இருக்காது. (கடுகு எண்ணெயாக இருக்கலாம்.) அந்தக் கடைக்கு சாப்பிடப் போனால், ஊறுகாய் கிண்ணத்தை பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்வது என் வழக்கம். பார்சல் வாங்கும்போது, ஊறுகாய் கொஞ்சம் அதிகமா வைங்க என்று சொல்வதும் என் வழக்கம். அவரும் தட்டாமல் செய்வார்.

மிக்ஸ்வெஜ் ஊறுகாய் ஆர்வத்தில், தள்ளுவண்டிகளில் கிடைக்கும் ஊறுகாய்களை வாங்கிப் பார்த்தேன். ஆனால் அந்தக் கடை ஊறுகாயின் சுவை வரவில்லை.

Must watch: நெஞ்சு சளிக்கு தீர்வு தரும் இந்த ஒரு இலை போதும்...

நம் ஊரின் தயாரிப்புகளும் பிடிக்கும் என்றாலும், அதிக காரம் எனக்கு ஒத்துக் கொள்ளாது. அதனாலும் இந்த ஊறுகாய் பிடித்துப்போனது.

ஒருநாள், “நீங்கள் ஊறுகாய் எங்கிருந்து வாங்குகிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன். எதுக்கு கேக்கறீங்க என்று கேட்டார். “எனக்கும் வேண்டும். எங்கே வாங்கறீங்கன்னு சொன்னா வாங்கிக்குவேன்” என்றேன். “அவ்வளவுதானே... அடுத்த தடவை வாங்கும்போது உங்களுக்கும் சேர்த்து வாங்கித் தர்றேன்” என்றார்.

அதேபோல, அடுத்த முறை ஐந்து கிலோ ஊறுகாய் புட்டி வாங்கும்போது அதிலிருந்து ஒரு கிலோ எடுத்து டப்பாவில் போட்டுக் கொடுத்தார்.  இதென்ன, டாப்ஸ் பிராண்ட் ஊறுகாயா என்று கேட்டேன்.  ஆமாம், நான் எப்போதும் அதுதான் வாங்குகிறேன் என்று சொன்னார். என்ன விலைக்கு வாங்கினாரோ அதே விலைக்குத்தான் எனக்கும் கொடுத்தார்.

அந்த ஒரு கிலோ தீர்ந்த பிறகு, மறுபடி சொன்னேன். ஒரு கிலோ புட்டியே வரவழைத்துக் கொடுத்தார். இன்னும் ஒரு 50-100 கிராம்தான் மீதம் இருக்கிறது.

தமிழ்நாடு வந்த பிறகு Tops பிராண்ட் மிக்ஸ் வெஜ் ஊறுகாய் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். கிடைக்காவிட்டால் ஊறுகாய் இழப்பு. அப்படியே கிடைத்தாலும், அந்த இளைஞரின் புன்னகை முகத்தை இனி பார்க்க முடியாது. 

நன்றி;-Shahjahan R (புதியவன்) முகநூல் பதிவு 

#mixvegpickle  #pickle  #vegpickle #delhitastypickle    

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments