
கரும்பு வெல்லம்… நன்னாரி வேர்… ஏலக்காய்… கலவையில் ஜாங்கிரி டீ
ஜாங்கிரி டீ!’ முதன் முறையாக இந்த பெயரைக் கேள்விப்பட்டவுடன் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. கேரள மாநிலம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்திற்குள் இருக்கிறது அந்த அழகிய அருவி. ’தூவானம் அருவி’ என அதற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள். அந்த அருவிக்கு செல்வதற்கு நடைப்பயணம் (Trek) மேற்கொள்ளும் வசதியும் உண்டு! கிட்டத்தட்ட மூன்று கி.மீ. தூர நடைபயணம்! பயணம் தொடங்கும் இடத்தில் வனச்சரக அலுவலகம் மற்றும் அழகிய தேநீர் கடை ஒன்றும் இருக்கிறது.
அந்த தேநீர் கடையில் கிடைக்கும் சாயா மாற்றும் காபி ரகங்கள் அப்பகுதியின் சிறப்பு. தேநீரோ… காபியோ… இரண்டிலும் மூலிகை வாசம் குழைத்துப் பரிமாறுகிறார்கள். சிலர் தேநீர் அல்லது காபி குடித்துவிட்டு தூவானம் அருவி நோக்கி நடைபயணத்தைத் தொடங்குகிறார்கள். சிலர் அருவி நோக்கி சென்றுவந்த களைப்பு நீங்க, நடைப்பயணம் முடிந்தபிறகு பருகுகிறார்கள். எப்படியாகினும் உற்சாகத்திற்கு பஞ்சமில்லை!
’சுக்கு காபி… பால் சேர்ந்த மூலிகை காபி… பால் சேர்க்காத மூலிகை தேநீர், ஜாங்கிரி டீ… இப்படி நிறைய இருக்கு… உங்களுக்கு என்ன வேணும்…’ என கடைக்காரர் கேட்க, சட்டென எனது பதில் ’ஜாங்கிரி டீ…’ என வெளிவந்தது! வித்தியாசமான பெயரைக் கேட்டவுடன் ஜாங்கிரி, தேநீர் காம்பினேஷனில் ஏதாவது கொடுக்கப் போகிறார்களோ என்று தோன்றாமல் இல்லை! நிச்சயம் இனிப்புடன் தொடர்புடையதாகவே ‘ஜாங்கிரி’ எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கும் என்ற எண்ணத்துடன், அதன் தயாரிப்பு முறைகளை கவனிக்கலானேன்.
அழகிய கூடாரம் அது! ஓங்கி உயர்ந்திருக்கும் மரத்தை சுற்றி தட்டி அமைத்து, மண் திட்டுகள் போல இருக்கைகளை மெழுகி, அழகாய் அந்தக் தேநீர் கடையை உருவாக்கியிருக்கிறார்கள். அதுவும் பானங்களைத் தயாரிக்க பாரம்பரிய மண் அடுப்பு! பார்த்தவுடன் ஏதாவதொரு மூலிகை தேநீரை பருகிவிட வேண்டும் எனும் ஆவலை அந்த தேநீர் கடை தூண்டிவிடுகிறது!
Also Read: இந்தியாவின் இனிப்பு பாரம்பர்யத்தில் சிக்கி மிட்டாய் (Chikki)
கரும்பு வெல்லம்… நன்னாரி வேர்… ஏலக்காய்… ஆகிய மூன்றும் ஜாங்கிரி தேநீரின் முக்கிய அங்கத்தினர்! கொதிகலனில் கொதிக்கும் தண்ணீரில், பொடித்த கரும்பு வெல்லத்தையும், இடித்த நன்னாரி வேரையும், உடைத்த ஏலத்தையும் கலந்து, கொதிக்க வைத்து சூடாக ஒரு கண்ணாடிக் குவளையில் பரிமாறுகிறார்கள். மழைச்சாரல் மற்றும் சூழந்திருக்கும் உயர்ந்த மரங்களால் உண்டாகும் குளிர்மையான சூழலுக்கு இதமாக சூடான ஜாங்கிரி டீ பருகுவது தனி சுகம் தான்! பால் கலக்காத கட்டன் சாயா ரகம் அது! நாவை குளிர்வித்து உடலுக்கு குதூகலத்தை அளிக்கும் சுவையை ஜாங்கிரி டீ வழங்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
கையில் தேநீர் கோப்பையை வைத்துக்கொண்டு, சில நிமிடங்கள் அங்கிருக்கும் நீரோடையை ஆசைதீர ரசிக்கலாம். மரங்கள் சூழ்ந்திருக்கும் அப்பகுதியில் தாவிப் பாயும் அழகிய சிறு பறவைகளை கண்டு மெய் மறக்கலாம். ‘
Grizzled giant squirrel’ எனும் பெரிய அணில் ரகங்களை அவ்விடத்தில் சர்வ சாதாரணமாக பார்க்கலாம். தூரத்தில் யானைகள் தெரிகின்றனவா என்றும் உற்று நோக்கலாம். இவையெல்லாம் ஜாங்கிரி டீ பருகிக்கொண்டே என்பது எவ்வளவு சிறப்பு! மண் குழைத்து அமைத்த திண்ணைகளில் அமர்ந்தோ… மரங்களால் கட்டப்பட்ட வட்ட நாற்காலிகளில் அமர்ந்தோ தேநீர் ரகங்களைப் பருகலாம்! இல்லை மெதுவாக ஒரு ‘வாக்’ சென்றும் பருகலாம்! இயற்கையும் தேநீரும் எவ்வளவு அழகு!
Also Read: டெங்கு காய்சலுக்கு தீர்வு தரும் கிவி பழம்...
தூவானம் அருவிக்கு நடைப்பயணம் செல்வதற்கு முன்பு ஒருமுறை… சென்று வந்த பிறகு ஒருமுறை… என இருமுறை சுவைமிக்க ஜாங்கிரி தேநீரை சுவைத்தது ‘ஜாங்கிரி’ அனுபவம்!..
மொத்தத்தில் ஜாங்கிரி டீ, நடுக்காட்டின் உற்சாக பானம்!
-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)
#ThoovanamFalls #JangriTea #ChinnarTea
Comments