நெல்லை சந்திரவிலாஸ் உணவகத்தில் தொடரும் அதே பாரம்பர்ய சுவை….


திருநெல்வேலி ஜங்ஷன் சாலைகுமரன் கோவிலருகே  உள்ள சந்திரவிலாஸ் ஓட்டலில் அண்மையில் சாப்பிடச் சென்றிருந்தோம். உள்ளே நுழைந்தவுடனையே , பழங்காலத்து மேஜை -பழங்காலத்து இருக்கைகள்- கை கழுவும் இடம்-  பழங்காலத்து சர்வர்கள் - என்று 80 ஆண்டுகளின் பழமை மாறாமல் அப்படியே வைத்திருப்பதை காணமுடிந்தது. 

பரிமாறுவதற்கு தட்டுக்கள் கிடையாது வாழை இலைதான். மாறாமல் இருப்பது  இருக்கைகளும் சுவர்களும்  மட்டுமல்ல இட்லிகளும் அதன் சுவையும்தான்.  அப்படியே  80 வருடத்திற்கு பின்னோக்கிய திருநெல்வேலி மணத்துடனே இருக்கின்றது.

Must Read: சென்னை, கோவையில் நடைபெற்ற 2 வேளாண் நிகழ்வுகளின் பதிவு…

நாங்கள் 5 பேர் சப்பாத்தி -ரொட்டி - இட்லி- ஆனியன் ஊத்தப்பம் -தோசை - காபி என்று சாப்பிட்டுவிட்டு பில் கேட்க , இன்னமும் அந்த காலத்து பாணியிலேயே ஒரு சின்ன துண்டு பேப்பரில் ரூ.280 என்று எழுதிக் கொடுத்தனர்.  பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டால்,  ஒரு ஆளுக்கே ரூ.200 வரும். ஆனால் 5 பேர் சாப்பிட்டு முடித்தும் கூட ரூ.280 தான்.

அந்த காபியை பற்றி சொல்லியே ஆகணும். நாக்கிலேயே சுவை ஒட்டியிருக்குதுன்னு சொல்வோமே அந்த சுவையை அன்றுதான் அனுபவித்தேன். அன்றைக்கு இரவு சாப்பிட்ட காபி மறுநாளும் நாக்கிலேயே நின்றது. 

நெல்லை சந்திரவிலாஸ்

தாமிரபரணி தண்ணி மணத்துடனும், சுவையுடனும், சாம்பாரும் மிளகாய்ச் சட்னியும், குருமாவும் ,  அப்படியே திருநெல்வேலி தாமிரபரணி தண்ணி சுவை, திருநெல்வேலி அல்வாவில் இருப்பது போலவே. 

முன்பெல்லாம் திருநெல்வேலி ஜங்ஷனுக்கு வியாபாரத்திற்கும் , பொருட்கள் வாங்குவதற்கும், வந்து விட்டு சினிமா பார்த்துவிட்டு ,  சந்திரவிலாஸ் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு செல்வதைத்தான் வழக்கமாக வைத்துள்ளார்கள் நம் தாத்தா காலத்து ஆட்கள். 

Must Read: ஆன்லைன் ஆர்டர் செய்து சாப்பிடும் முறையை தவிர்க்க முயலுங்கள்; எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அறிவுறுத்தல்

இந்தப் பதிவை படிக்கின்ற பழங்காலத்து ஆட்களுக்கு , இதனுடைய வரலாறும் சுவாரசியங்களும் நினைவிலாடலாம்.  ஓட்டல் முதலாளி உ.வே.சா வழித்தோன்றல் சாமிநாத அய்யர்! தமிழ்த்தாத்தா, உ.வே.சா., பிறந்த அதே நாள், நட்சத்திரம் மற்றும் கிழமையில் பிறந்தவர்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஓட்டல் , அந்த பழமையுடனே இன்னமும் இருக்கின்றது. இன்றைய இளய தலைமுறைகள், பழங்காலத்து திருநெல்வேலி சமையலையும் சுவையையும் அனுபவிக்க நினைத்தால் நிச்சயாய் இந்த ஓட்டலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

Nellai Life

#food #tirunelveli #hotel #chandiravilas #நிகழ்வுகள்

 


Comments


View More

Leave a Comments