அதிக வேலை, குறைந்த சம்பளம் போர்கொடி தூக்கிய ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்கள்
பிரபல உணவு விநியோக செயலி நிறுவனமான ஸ்விக்கியின் ஊழியர்கள் வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்கக் கோரி சென்னையில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், சென்னை மாநகரில் ஆன்லைன் உணவு விநியோக சேவை பாதிக்கப்பட்டது. KFC, சப்வே, ஆம்பூர் ஸ்டார் பிரியாணி மற்றும் பீட்சா ஹட் உட்பட நகரத்தில் உள்ள பல உணவகங்கள் ஸ்விக்கி வாயிலாக உணவு விநியோகம் மேற்கொள்ளவில்லை.
ஸ்விக்கியின் உணவு விநியோக ஊழியர்கள் கடந்த 20ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஷிப்ட் நேரம் அதிகரிப்பு ஆனால், ஊதியம் உயரவில்லை என்று ஸ்விக்கி ஊழியர்கள் சொல்கின்றனர். உணவு விநியோகத்தின மூலம் கிடைக்கும் வருவாயை சேமிக்க முடியாதபடிக்கு செலவினங்கள் அதிகரிப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வாகனங்களுக்கான எரிபொருள் செலவுகளை ஸ்விக்கி நிறுவனம் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுப்பதாகவும் ஊழியர்கள் குமுறுகின்றனர்.
Must Read:ரோசெல்லா தேநீர் செரிமானத்திற்கு உதவும், மன அழுத்தத்தைக் குறைக்கும்
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஸ்விக்கி ஊழியர் ஒருவர், மாதந்தோறும் ரூ.12,000 சம்பாதித்தோம். ஆனால், ரூ.7,000 - ரூ.8,000 மட்டுமே வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடிந்தது. மேலும், “எரிபொருள் மற்றும் வாகனச் செலவையும் சேர்த்தால், எங்களால் சம்பாதிக்க முடியாது. இப்போது புதிய முறையால் ரூ. 7,000 கூட.கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது” என்று சொல்கின்றார்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 16 மணி நேரம் உழைத்து 30 ஆர்டர்களுக்கு மேல் டெலிவரி செய்யாவிட்டால் முன்பு போல் சம்பாதிக்க முடியாது என்று இன்னொரு ஊழியர் சொல்கிறார். நாளொன்றுக்கு பெட்ரோலுக்கு 400 முதல் 500 ரூபாய் வரை செலவாகும் என்றும், ஷிப்ட்டில் அதிக நேரம் வேலை செய்தாலும் எதையும் மிச்சப்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், “முன்பு, 12 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டோம். இப்போது, கிட்டத்தட்ட 17 மணிநேரம் வேலை செய்யும்படி சொல்கின்றனர். புதிய ஊதியக் கட்டமைப்பால், எங்களுக்கு தினசரி மற்றும் வாராந்திர ஊக்கத்தொகை கூட கிடைக்கவில்லை” என்றும் இன்னொரு ஸ்விக்கி ஊழியர் வேதனை தெரிவிக்கிறார்.
டெலிவரி நிர்வாகிகள் தங்கள் தினசரி இலக்கை அடைய 30 உணவு டெலிவரி ஆர்டர்களை முடிக்க வேண்டும். ஆனால் அவர்களில் பலர் 17 மணி நேரம் உழைத்தால் ஒழிய அந்த இலக்குகளை முடிக்க முடியாது என்று நினைக்கிறார்கள். "டார்கெட்டை முடிக்க வேண்டும் என்றால், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாது. நாங்கள் நாள் முழுவதும் களத்தில் இருக்க வேண்டும்,”என்று மற்றொரு நிர்வாகி கூறினார். |
பழைய ஊதியக் கட்டமைப்பை அமல்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யலாம் மற்றும் வாராந்திர மற்றும் தினசரி ஊக்கத்தொகைகள் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு சிறந்த சுகாதார காப்பீட்டை அளிக்க வேண்டும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Must Read: சித்த மருத்துவத்தில் வெளிசிகிச்சையுடன், உள சிகிச்சையும் முக்கியம்...
வேலைநிறுத்தத்தம் குறித்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ள ஸ்விக்கி நிறுவனம்,”புதிய ஊதிய விகிதம் டெலிவரி நிர்வாகிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கும். ஆர்டர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் அவர்கள் சிறப்பாக சம்பாதிக்க உதவும். "Swiggy இன் டெலிவரி நிர்வாகிகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் அல்லது எவ்வளவு காலம் வேலை செய்கிறார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் டெலிவரி நிர்வாகிகளுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம் புதிய முறையை அவர்கள் நன்றாகப் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம். விரைவில் டெலிவரி சேவை மீண்டும் தொடங்கும்." என்று தெரிவித்துள்ளது.
-பா.கனீஸ்வரி
#SwggyDeliveryAffected #SwggyDeliveryWorkersStrike #SwggyDeliveryStrike #SwggyDeliveryChennai

Comments
View More