30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருப்பைவாய் பரிசோதனை செய்வது அவசியம்…


64 வயது பெண்மணி சிறுநீர்கடுப்பு எனச் சொல்லி 20நாட்களுக்கு முன் வந்திருந்தார். பெண் என்பதால் மாதசுழற்சி உதிரப்போக்கு குறித்து கேட்டேன்.அதெல்லாம் நின்று 15வருடம் ஆச்சு.இப்ப அதில் எந்த பிரச்னையும் இல்லை என்றார்.

சிறுநீர் கழிக்கும்போது வலி,எரிச்சல் இருக்கு,சிலநேரம் ரத்தம் கலந்து வருது என்றார். சிறுநீரே சிவப்பா இருக்கா என்றேன்,இல்லம்மா சிறுநீர் எப்போதும்போல தான் இருக்கு,அது முடியும்போது ரெண்டு சொட்டு ரத்தம் வருது.வேறொன்றும் இல்லை என்றார்.

கருப்பைவாய் பரிசோதனை செய்கிறேன் என்றேன்,வேண்டாம் மேடம்,சாதாரண நீர்கடுப்பிற்கு தானே வந்தேன் உங்ககிட்ட என்றார். நீர்கடுப்பிற்கு மாத்திரை தரேன்,ஆனால் கருப்பைவாய் பரிசோதனை அவசியம் என்றேன். அதோடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வாங்க அவருக்கு எங்கள் செவிலியர்கள் உதவினர்.

Must Read: கொல்லிமலையும் முடவாட்டுக்கால் கிழங்கும்…

எனக்கு எதுக்கு இந்த அட்டை,நீர்கடுப்பு என வந்ததற்கு இதெல்லாமா வாங்க சொல்வீர்கள் என்றார்.இருப்பினும் அந்த அட்டையும் வந்து சேர்ந்தது அவருக்கு. நான் அதே நாளில் பரிசோதித்து எடுத்தனுப்பிய சதை பரிசோதனை முடிவும் "கருப்பைவாய் புற்றுநோய்" என நேற்று வந்தது.

என்னை மீண்டும் சந்தித்த அந்த பெண்மணி எப்படி மேடம் எனக்கு புற்றுநோய் இருக்கும்னு யோசிச்சீங்க,இதை எதிர்பார்த்துதான் முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டை வாங்கி கொடுத்தீர்கள் போல,எப்படி மேடம் இதை கணித்தீர்கள் என்றார்.

கருப்பைவாய் பரிசோதனை முக்கியம்

அவரை மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறேன்.பிழைப்பேனா மேடம் என்றார். பிழைக்கிறோம் பிழைக்காமல் போகிறோம் எதுவரினும் ஏற்கும் மனநிலை வேண்டும்.ஆனால் போராடாமல் சாகக்கூடாது,போராடி விட்டு கூட இறுதியில் தோல்வியை தழுவி சாகலாம்,அதனால் புற்றுநோயுடன் போராட தயாராகிக்குங்க என்றேன்.

கட்டாயம் ஜெயிச்சு மீண்டும் உங்களிடம் வருவேன் மேடம்  என சொல்லிச்  சென்றார். பெண்களே. 30வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்? உங்கள் கருப்பைவாய் பரிசோதனையை தவறாமல் மேற்கொள்ளுங்கள். எந்த தொந்தரவும் இல்லை எனினும் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

Must Read: கோடையில் பூக்கும் இந்த பூக்களின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..

50வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்? மாதசுழற்சி உதிரப்போக்கு நின்றபிறகு மீண்டும் ரத்தக்கசிவு இருக்கா?சிறுநீர் கழித்தபின்னோ,மலம் கழித்தபின்னோ ரத்தக்கசிவு இருக்கா ?அந்த ரத்தம் பிறப்புறுப்பில் இருந்து வரவே வாய்ப்பு அதிகம்,நாம் அதை உறுதிசெய்ய வேண்டும்.தவறாமல் கருப்பைவாய் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த பரிசோதனைகள் இலவசமாக  செய்யப் படுகின்றன.பயன்படுத்திக்கொள்ளுங்கள்.இதுவரை இல்லை எனினும் இன்றேனும் உங்கள் கருப்பைவாய் பரிசோதனை குறித்து முடிவெடுங்கள்.

-மருத்துவர்.அனுரத்னா, தமிழ்நாடு அரசு மருத்துவர்

#cervical #cervicalcancer  #cervicalcheckup #cancertreatment


Comments


View More

Leave a Comments