கொழுப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்பது அதீத அச்சமா?


சமூக வலைதளங்களில் கீழ்காணும் படம் தற்போது வைரலாகி வருகிறது. இதில் இருந்தும் நான் அறிவியலால் முரண்படுகிறேன்.

மாமிசத்துண்டு, பாலாடை ( சீஸ்), அடங்கிய "பர்கர்" இதில் வேறென்ன சேர்க்க ஆசைப்படுகிறீர்கள் என்று பதிவர் கேட்க அதற்கு மருத்துவ சகோதரர் ஒருவர் "ஆஸ்பிரின் 75 மில்லிகிராம், அடோர்வாஸ்டாட்டின் 20 மில்லிகிராம், க்ளோபிடோக்ரெல் 75 மில்லிகிராம், சார்பிட்ரேட் மாத்திரை ( நாக்குக்கு அடியில்)இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்  " என்று கமெண்ட் செய்துள்ளது தான் இந்த பதிவு வைரலாக காரணமாக அமைந்துள்ளது.

இதில் ஆஸ்பிரின் மற்றும் க்ளோபிடோக்ரெல் என்பது ரத்த நாளங்களில் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் மாத்திரை  அடோர்வாஸ்டாடின் என்பது ரத்த கொழுப்பு அளவுகளைக் குறைக்கும் மாத்திரை. சார்பிட்ரேட் - இதயத்தின் ரத்த நாளம் சுருங்கும் போது அதனால் வலி ஏற்படுவதை விரிவடையச் செய்யும் மாத்திரை.

சமூகத்தில் நிலவும் பொதுவான கருத்து யாதெனில் மாமிசம் அடங்கிய சீஸ் / வெண்ணெய் / நெய் / தேங்காய் எண்ணெய் அடங்கிய உணவுகள் சாப்பிட்டால் கொழுப்பு இதயத்தில் அடைத்து இதய நோய் வரும் என்பது  கடந்த எழுபது ஆண்டுகளாக கொழுப்பின் மீது அச்சம் கொண்டு நோக்கும் மருத்துவ உலகிடம் இருந்து வெளிப்பட்டு வருகிறது.

Must Read: தமிழக உணவுகளின் நிரந்தர சூப்பர்ஸ்டார் இட்லி என்பது தெரியுமா? 

இதை "லிபோ ஃபோபியா" என்று அழைக்கலாம். கொழுப்பை சாப்பிட்டால் மாமிசம் சாப்பிட்டால் சீஸ் / நெய் / வெண்ணெய் சாப்பிட்டால் இதயம் அடைத்து சாவு வரும் என்ற கருத்து கொழுப்பின் மீது ஏற்படுத்தப்பட்ட அதீத அச்ச உணர்வின் காரணமாக தோன்றியது.

அதிக கொழுப்பு உணவுகள் ஆபத்தா?

இந்த பர்கரை எடுத்துக் கொள்வோமே இதில் மாமிசம் - புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு சீஸ் - கொழுப்பு நிறைந்த பால் பொருள் அதை இருபக்கமும் நிலை நிறுத்தி இருப்பது "பன்" மைதாவில் செய்யப்பட்ட மாவுச்சத்து அடங்கிய பொருள் .

 சில பர்கர்களில் இத்துடன் காய்கறிகளும் சேர்த்து தரப்படும். இங்கு பர்கர் உண்ணலாமா? வேண்டாமா? என்றால் பர்கரில் உள்ள மாமிசமும் சீஸும் நாம் உண்ணத்தகுந்தவை என்பேன். ஒரு உணவை அதில் உள்ள மாவுச்சத்து கொழுப்புச் சத்து புரதச்சத்து என்று பிரித்துப் பார்த்து இது எத்தகைய உணவு என்று முடிவுக்கு வர வேண்டும்.

இதுவே "உணவு சார்ந்த கல்வியறிவு" என்று கொள்ளலாம். (FOOD LITERACY).  அந்த கல்வியறிவு பெறும் விழிப்புணர்வு நோக்கி நாம் அனைவரும் நடைபோட வேண்டும்.

Must Read: “மீன் அசைவம் என்று சொல்வதால், அதில் உள்ள சத்துகளை பலர் அறிவதில்லை…”

பர்கர் என்பதை ஒரு வேளை உணவாக உண்பதற்கும் . அதை ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. கூடவே பர்கருடன் சர்க்கரை கலந்த குளிர் பானங்கள் சேர்த்து பருகுகிறோமா என்பதும் இந்த பர்கர் நன்மையா தீமையா என்பதை முடிவு செய்கிறது.

நான் கூறும் தகவல்  பலருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும் ஆனால் இது உண்மை. ஐரோப்பா அமெரிக்க கண்டங்களில் உள்ள பூர்வகுடி ஐரோப்பியர்கள் அமெரிக்கர்களை விடவும் அங்கு சென்று வாழும் தெற்காசியர்களுக்கு நீரிழிவு ரத்தக் கொதிப்பு இதய நோய் போன்றவை மிக அதிகமாக ஏற்படுகிறது.

பர்கர் சாப்பிடுவது ஆபத்தா

மேலும் இதய நோயால் மக்கள் இறப்பது அமெரிக்கா , ஐரோப்பாவைக் காட்டிலும் கடந்த பத்து ஆண்டுகளில் சீனா , இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கூடியுள்ளது. இதில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது நாம் முப்பது ஆண்டுகளாக மாமிசம் நெய் வெண்ணெய் சீஸ் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை கொழுப்பு அச்சம் கொண்டு அவற்றை உண்பதை நிறுத்தியோ குறைத்தோ விட்டோம்.

ஆனாலும் இங்கு நீரிழிவு , ரத்தக்கொதிப்பு, இதய நோய் போன்றவை அதிகரித்து வருவதை நாம் எப்படிப் பார்க்கப் போகிறோம்? நீரிழிவு ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டவுடனேயே மாமிசம் உண்பது முட்டை மஞ்சள் கரு உண்பது நெய் / வெண்ணெய் / தேங்காய் எண்ணெய் உண்பதை அனைவரும் நிறுத்தி விடுகின்றனர்.

ஆனாலும் அவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறதே ஏன்? இதை நாம் சிந்திக்கத் துவங்கினால் நமக்கு ஏற்படும் தொற்றா நோய்களுக்கு  நமது அதிக மாவுச்சத்து உண்ணும் உணவுமுறையும் கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை ஒதுக்கும் போக்கும் இருப்பதை உணர்ந்து தெளிய முடியும்.

நீரிழிவு ரத்தக்கொதிப்பு இதய நோய் சிறுநீரக நோய் போன்றவை ஏற்படுவதற்கு நாம் அதிகமதிகம் உண்ணும் சர்க்கரை / தானியங்கள் சார்ந்த அதிக மாவுச்சத்து உணவு முறை / எண்ணெயில் பொரித்த உணவுகள் பண்டங்கள் இவற்றுடன் உடல் உழைப்பின்மை / மன அழுத்தம் / மனப்பதட்டம்/ குடி புகை போன்ற தீய பழக்கங்கள்  இவையே பிரதான காரணங்கள். மாமிசமோ முட்டையோ வெண்ணெயோ அன்று.

சிந்திப்போம் நிச்சயம் சிந்தனை எண்ணங்களாகும் எண்ணங்கள் வினையாகும் செய்வினையால் வளம்பெறும் எதிர்காலம்

-Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர் , சிவகங்கை

#mythonburger #burgerviralpost #cholesterolfoods #meatfoods 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments