பணம் கொடுத்து வாங்கினாலும் உணவை வீணாக்கக்கூடாது…
பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் போது சில குழந்தைகள் காய்கறிகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைப்பார்கள்.சிலர் வெங்காயம்,தக்காளியைக் கூட தூக்கிப் போடுவார்கள். ஏன் கடுகைக் கூட பொறுக்கி எடுத்துவிட்டு சாப்பிடுபவர்களையும் பார்த்திருக்கிறேன்.
அவ்வப்போது ஒவ்வொரு காய்கறியிலும் உள்ள சத்து,அது குணப்படுத்தும் நோய்,அதைச் சாப்பிடாவிட்டால் ஏற்படும் நோய்கள் பற்றி கூறுவேன்.அப்படி ஒரு நாள் யார் யாருக்கு என்ன காய் பிடிக்கும்,பிடிக்காது என்று கேட்க,ஏறக்குறைய அனைத்துக் குழந்தைகளின் பிடிக்காத லிஸ்ட்டில் இருந்த காய் பாகற்காய்.
Must Read:தவறவிடக்கூடாத இயற்கை வேளாண்மை, வாழ்வியல் பயிற்சிகள்…
அடுத்த நாள் ஒரு கிலோ பாகற்காய் வாங்கி பொரியல் செய்து கொண்டு போய் என் வகுப்புக் குழந்தைகள் அனைவருக்கும் கொடுத்தேன்.ரொம்ப டேஸ்ட்டா இருக்கு டீச்சர் என்று சொல்லி விரும்பி சாப்பிட்டார்கள்.இப்போ சொல்லுங்க ..பாகற்காய் பிடிக்குமா..பிடிக்காதா..? எல்லோரும் பிடிக்கும் டீச்சர்னு சொல்ல யஷ்வந்த் மட்டும் அமைதியா இருந்தான்.
ஏண்டா..இப்பவும் உனக்கு பாகற்காய் பிடிக்காதா? எங்க அம்மா இப்படி செய்ய மாட்டாங்க டீச்சர்.கசப்பா இருக்கும்.நீங்க செய்யறது மட்டும் தான் பிடிச்சுருக்கு என்றான்.அதுக்கப்புறம் எப்போ பாகற்காய் செய்தாலும் அதிகமாகவே செய்து கொண்டு போய் யஷ்வந்த்க்கு மட்டும் இல்லை..எல்லாருக்கும் கொஞ்சம் கொடுக்கறத வழக்கப்படுத்திக்கிட்டேன்.

அதோட அவங்க இதுவரை சாப்பிட்டுப் பாக்காத புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை..இப்படி சில உணவு வகைகளையும் செய்து கொண்டு போய் அப்பப்போ சாப்பிட வைப்பது வழக்கம்.
உணவில் பலரின் உழைப்பு இருக்கிறது
எங்கள் வீட்டில் சாப்பிடும் போது எங்கள் தட்டுகளிலோ, தட்டைச் சுற்றியோ, சாப்பிடும் இடத்திலோ..சாதம், குழம்பு , காய்கறிகள் சிதறிக் கிடக்காது. தட்டிலும் ..சாதம் மீதி வைப்பது,பிடிக்காது என காய்கறிகளை ஒதுக்கி வைப்பது..போன்ற வழக்கமும் கிடையாது.
விருந்து,விசேஷங்களிலும் தேவையான அளவு மட்டுமே வாங்கி உண்போம். இலைநிறைய..போடுவதை எல்லாம் வாங்கி வீணாக்குவதில்லை. என் குழந்தைகள் உட்பட. பள்ளியிலும் மாணவர்களுக்கு அடிக்கடி உணவு உற்பத்தி,உணவின் முக்கியத்துவம், உழவர்களின் பங்கு,உணவிலுள்ள சத்துக்கள் பற்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூறுவேன்.
Must Read: அதிக இனிப்பு அதிக ஃப்ரக்டோஸ் உணவுகளை உண்டால் ஆபத்து ஏன் தெரியுமா?
நாம் பணம் கொடுத்து வாங்கி விட்டோம் என்பதாலேயே ஒன்றை வீணாக்குவது தவறு.அதில் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்று அறிந்தால்..ஒரு துளியைக் கூட வீணாக்க மாட்டோம்.உணவு வீணாவதோடு நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ.. கண்டதையும் வாங்கிக் கொடுத்து குழந்தைகளைக் கெடுத்து வைத்திருக்கிறோம்.
ஆரோக்கியத்திற்கும்,பசிக்கும் சாப்பிடுவதை விடுத்து சுவைக்காக சாப்பிடும் போக்கு அதிகரித்து விட்டது.சமீத்திய ஆய்வுகள் நம் குழந்தைகள் ஆரோக்கியமாக இல்லை என்று கூறுவது கவலை அளிக்கிறது. "உடலை வளர்த்தேன்..உயிர் வளர்த்தேனே" என்பது திருமூலர் வாக்கு. சுவரில்லாமல் சித்திரம் இல்லை அல்லவா? குழந்தைகளுக்கு நல்லவற்றை கற்பிப்போம்.
#dontwastfood #foodwasteawareness #foodwaste

Comments
View More