மதுரையின் சிறப்பு பெற்ற பன்பரோட்டா சாப்பிட்டிருக்கிறீர்களா?
சொக்கநாதனாக மதுரையில் வசிக்கும் சிவபெருமான் அவரது மனைவியின் ஆட்சி அங்கு நடப்பதால், அவளிடம் தன் பருப்பு வேகாது என்று தன் திருவிளையாடல்களை தன் பக்தர்களிடம் காட்டி சோதிப்பார்! பிட்டுக்கு மண் சுமந்து, நரியை பரியாக்கி, தருமிக்கு பொற்கிழி கொடுத்து என மதுரையில் அவர் நடத்திய விளையாட்டுகள் இன்றளவும் முறியடிக்க முடியாத ரெகார்டுகள்!
பிட்டுக்கு மண் சுமந்த ஈசன் மட்டும் மனது வைத்திருந்தால் பிள்ளைக் கறியே கேட்ட பித்தன் அவன் மதுரை அசைவ உணவுகள் மீது பித்தம் கொண்டு கறி தோசை, அயிரை மீன் குழம்பு, நண்டு ஆம்லெட், பன் பரோட்டா என மதுரையின் புகழ் பெற்ற உணவுகளுக்காக தனது விளையாடல்களில் நடமாடும் பொக்லைன் இயந்திரம் போல மாறி மண் சுமந்து இருப்பான்!
Must Read: யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்புவோர் கவனத்துக்கு…
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்று செண்பகப் பாண்டியனிடம் வாதிட்டவன்.. பன் பரோட்டாவிற்கு சிறந்தது குருமாவா சால்னாவா என பட்டிமன்றம் நடத்தி இருப்பான். அத்தகைய சிறப்பு பெற்ற பன்பரோட்டாவை பற்றி பார்ப்போம்.
மதுரையில் பன் பரோட்டாவின் பிறப்பிடம் பேரறிஞர் அண்ணாவிற்கும் கலைஞர் கருணாநிதிக்கும் சேர்த்து..புகழ் தருவது போல அமைந்தது! ஆம் மதுரையில் அண்ணா நகருக்கும் கே.கே. நகருக்கும் மிகச்சரியாக நடுவில் இளவயது கலைஞரின் தலை வகிடு போல அமைந்த சாலையில் மதுரை ஆவின் அருகே இருக்கிறது!
இந்த பரோட்டாவில் பசும் பால் சேர்க்கும் பாரம்பரியம் இதனால் தான் வந்தது என யாராவது நாளை வாட்ஸப்பில் வடை சுடலாம்.ஆனால் காரணம் அதுவல்ல!
பரோட்டா மாவை புளிக்க வைக்கத்தான் பால் சேர்க்கப்படுகிறது! முட்டை, சர்க்கரை, பால் சேர்த்து மாவை பிசைந்து நான்கு மணி நேரம் ஊற வைத்து புளிக்க வைத்து பிறகு ஆயில் + டால்டா கலந்து அதில் ஒரு அரைமணி நேரம் ஆயில் பாத் எடுக்கவிட்டு பிறகு அதை லாவகமாக விசிறி மாவினுள் காற்று இருக்கும்படி மடித்து அதை ரோஜாப்பூ போல சுருட்டி பன் போல ஆக்குவார்கள்!
அந்த பச்சை மாவே உங்களுக்கு புரோட்டா சாப்பிடும் இச்சையை தூண்டும். மதுரையில் நக்கீரன் வழி வந்த அதி தீவிர புரோட்டா வல்லுநர்கள் இருக்கிறார்கள்! புரோட்டாவின் நிறத்திலேயே அதன் ஜாதகத்தையே எழுதிவிடுவார்கள். சால்னாவை வைத்து எந்தக் கடை என்று கண்டுபிடித்துவிடுவார்கள்!
அவர்களிடம் அரை குறை புரோட்டாக் கடைகளில் வாங்கிய புரோட்டாக்களை காட்டினால்.சிவனிடம் கூடப் போகாமல் அவர்களது சொந்தக் கண்களையே நெற்றிக் கண்ணாக்கி நம்மை எரித்து சாம்பலாக்கிவிடுவார்கள்.
பன் புரோட்டாவை அண்ணாநகரில் வாங்கு.. யானைக் கல்லில் வெங்காயக் குடல் வாங்கு.. தல்லா குளத்தில் நெய் பரோட்டா நெல் பேட்டையில் பீஃப் மசாலா.. பெரியார் கிட்ட சூடான பொரிச்ச பரோட்டா.. ஜெய்ஹிந்துபுரத்துல மட்டன் சுக்கான்னு.. விதவிதமா பட்டியல் போட்டு மகாகவி பாரதியார் போல “சென்றிடுவீர் மதுரையின் எட்டுத் திக்கும் - பரோட்டா செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்று திசைக்கு ஒரு கடையில் வாங்கி அதை ருசிப்பார்கள்!
அவர்களிடம் பன் பரோட்டாவை எப்படி சால்னா ஊற்றி சாப்பிடுவது எனக் கேட்டால் அதற்கு ஒரு டிரெயினிங் கோர்ஸே தரும் அளவுக்கு சொல்வார்கள். நல்ல பன் பரோட்டா என்பது அதன் ஓரங்களிலும் மேல் புறத்திலும் மொறு மொறுன்னும் நடுவில் பன் போல மென்மையிலும் காணப்படுவதே! தள தளன்னு இருக்கும் சால்னா எனில் சூடான பரோட்டாவின் மேல் ஊற்றி ஊற வைத்து சாப்பிடலாம்.
Must Read: தலையில் பொடுகு போன்ற அரிப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை...
திக்கான மட்டன்/ நாட்டுக்கோழி க்ரேவி, சுக்கா வருவல் எனில் அதை ஓரமாக ஊற்றி பரோட்டாவை பிய்த்து அதில் நன்கு தோய்த்து. சாப்பிடுவது நன்று. ஒவ்வொரு தோய்ப்பிலும் ஒரு மட்டன் அல்லது ஒரு சிக்கன் கறித்துண்டு இருப்பதும் அதனினும் நன்று! பன் பரோட்டாவோடு முட்டை எனில் ஆஃப்பாயில் சாப்பிடுவது ஓர் அற்புதம்! அரை வேக்காடாக இருக்கும் அந்த மஞ்சள் கருவில் பரோட்டாவை நனைத்து அதில் சால்னாவையும் குழைத்து.. அட போங்கப்பா!! ஆம்லெட் எனில் கரண்டி ஆம்லெட் சாப்பிடுவது. சாலச் சிறந்தது!
தற்போது மதுரையில் பன் புரோட்டாவானது பலூன் பரோட்டா, வெல்வெட் பரோட்டா (நெய் பரோட்டா), க்ரேப் பரோட்டா, கேக் பரோட்டா, பர்கர் பரோட்டா, முட்டை பன் பரோட்டா, சாண்ட்விச் பரோட்டா என தனது வெர்ஷனில் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது! மதுரையில் சமீபத்தில் ஒரு கடையில் பார்த்து வியந்த ரெஸிபி “ஆண்ட்ராய்ட் புரோட்டா” ரெடி!
இப்படி விதவிதமான பெயர்களில் அறிமுகமாகும் உணவுகள் மதுரையில் ஏராளம் (உதாரணம் மாஸ்க் பரோட்டா) ஆனால் அதில் ஏதாவது ஒன்று ஹிட்டாகி உலகப் புகழ் அடையும்! மதுரை இன்னும் என்னென்ன புதிய வகை உணவு வகைகளை தரவிருக்கிறது அது உலகம் முழுவதும் எப்படி பேசப்பட போகிறது என்பதெல்லாம் அந்த சொக்கநாதரும் அன்னை மீனாட்சியும் மட்டுமே அறிவார்!
#maduraibunparotta #bunparotta #maduraifoods
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments