
ராணுவ வீரர்கள் உணவு எப்படி இருக்கும் தெரியுமா?
சமீபத்தில் கிளினிக்கில் ஒரு ராணுவ வீரரை சந்தித்தேன்
வருட விடுமுறையில் என்னை சந்திப்பார் அவரிடம் ராணுவம் குறித்த செய்திகளை ஆர்வத்துடன் அறிந்து கொள்வது வழக்கம்
இந்த முறை பேச்சு அவர் உண்ணும் உணவு பக்கம் திரும்பியது
சாதாரணமாக எந்த பிரச்சனையும் போரும் இல்லாத போது அவர்களது முகாமில் இருக்கும் போது வழக்கம் போல சோறு / சப்பாத்தி / பிரியாணி என்று உணவு கிடைக்கும் என்று கூறினார்.
சட்டிஸ்கர் நக்சல் அதிகம் உள்ள கானகப்பகுதிகளில் பணியாற்றும் வீரர்
பல சமயங்களில் அவருக்கு கானகத்திற்குள் சென்று ரோந்து செய்யும் பணி வழங்கப்படுமாம்.
எனக்கு உடனே ஆவல் அதிகமாகிவிட்டது.
"அப்ப என்ன சாப்பிட எடுத்துட்டுப்போவீங்க?"
( நாம் அந்த காலத்தில் டூர் சென்றால் புளியோதரை , லெமன் சாதம் கட்டிக்கொண்டு செல்வோமே அதை நியாபகப்படுத்தி நான் கேட்ட சில்லி கொஸ்டீன் தான்) இருப்பினும் பொறுப்பான ராணுவ வீரர் பதில் தந்தார்
Must Read: மோசமான தூக்கம் காரணமாக ஆண்களுக்கு ஏற்படக்கூடிய 3 உடல்நலப் பிரச்சனைகள்…
ராணுவ வீரர்கள் பதட்டம் அதிகம் உள்ள பகுதிகள் அல்லது கானகங்கள் அல்லது போர் உக்கிரமாக நடக்கும் பகுதிகளுக்கு செல்லும் போது எடுத்துச்செல்லும் உணவுக்கு "Ration" என்று பெயர்.நான் சந்தித்த ராணுவ வீரர் ஒருமுறை கானகங்களுக்குள் சென்றால் நடந்து போய்க்கோண்டே இருப்பார்களாம்
ஒருநாளில் பல மைல் தூரம் நடக்க வேண்டியிருக்கும் கையில் துப்பாக்கி ஏந்திக்கொண்டு அதிக எடையுள்ள உணவுகளை எடுத்துச்செல்ல முடியாது. ராணுவ வீரர்களுக்கு குறைந்த எடையில் அதிக எனர்ஜி மற்றும் தேவையான கலோரிகளை உடனே வழங்குமாறும் பசியை அடக்குமாறும் உணவு தயாரிக்கப்படுகிறது. அதன் பெயர் "Ration" என்று அழைக்கிறார்கள்.
இவர் பணிபுரியும் பகுதியில் காடுகள் அதிகம் இருப்பதால் ஒரு முறை அவரது முகாமை விட்டு வெளியேறினால் சில நாட்களுக்கு ரோந்து முடித்த பிறகு தான் திரும்ப முடியும் ஆதலால் அப்படியான சூழலில் ராணுவ வீரர்கள்
1. நட்ஸ் வகைகள்
( பாதாம் , முந்திரி)
2. சன்னா என்றழைக்கப்படும் கொண்டை கடலை
3. முளை கட்டிய பாசிப்பயறு
4.அந்த மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சத்து மாவு கலவை
5. தண்ணீர்
6. அவசரத்திற்கு மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள்
7. சூடுசெய்வதற்கு கற்பூரம் மற்றும் தீப்பெட்டி
இவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பிப்பார்களாம். ஒரு நாள் முழுவதும் கூட நடந்து கொண்டே இருக்குமாறு சூழ்நிலைகள் இருக்கும் என்று கூறியது எனக்கு மரியாதை கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசால் அரசுப்படும் Ration பற்றி இன்னும் படிக்க வேண்டும் என்று தோன்றியது.
இந்திய ராணுவ Ration இல் பல வகை உண்டு
1. ஆர்மி MRE ration
2. one day compo ration
3. mini compo pack
4. survival ration
5. main battle tank ( MBT) ration
ஒவ்வொன்றைப்பற்றியும் சிறிது விளக்கமாக பார்க்கலாம்
1.ஆர்மி MRE ration; MRE என்றால் Meal Ready to Eat என்று பொருள். அலுமினிய ஃபாயில் பேப்பரில் ஏற்கனவே சமைத்த உணவை சிறிதளவு பார்சல் கட்டி தரும் முறை தான். இதில் உள்ள உணவுகளை மீண்டும் சமைக்க வேண்டியதில்லை. லேசாக சூடு செய்து அப்படியே உண்ணலாம்.
பொதுவாக இந்திய MRE இல் சப்பாத்திகள், ரவை கேசரி (300g), காய்கறி புலாவ் (300g), உருளை மற்றும் பீன்ஸ் குழம்பு (300g), ஒரு சாக்லேட், and 3 கிண்ணம் தேனீர் போடும் அளவு தேனீர் பொடி இவற்றுடன் ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன், டிஸ்யூ பேப்பர் , தீப்பெட்டி, எளிதில் தீப்பற்றும் எரிபொருள் வில்லை .இந்த ரேசன் தான் அனைவருக்கும் பொதுவான உணவாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. பிறகு செய்யப்பட்ட கள ஆய்வில் ஒவ்வொரு படை வீரருக்கும் அவர் வேலை செய்யும் இடம் பொறுத்து உணவும் மாறுபட வேண்டும் என்ற வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது சைவம் மற்றும் அசைவம் என இரு சாராருக்கும் உணவு வழங்கப்படுகிறது
2.One-man Compo Ration (Dehydrated): இதில் ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான உணவுகள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு நாள் மட்டும் வெளியே ரோந்து சென்று திரும்பும் நிலையில் இந்த உணவு கொடுக்கப்படுகிறது
1. அதிகாலை தேனீர்
2.காலை சிற்றுண்டி
3. நண்பகல் தேனீர்
4. மதிய உணவு
5.மாலை நேர தேனீர்
6. இரவு உணவு
இவை அத்தனையும் நீர்ச்சத்து எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு அலுமினிய ஃபாயிலில் அடைக்கப்பட்டிருக்கும். மொத்த எடை 880 கிராமும் 4100 கிலோ கலோரி சக்தி தரும் உணவாக அந்த முழு பொட்டலம் இருக்கும்
.3.Mini Compo Pack; இது முன்னர் சொன்ன one man compo packஇன் சுருங்கிய வடிவம். அந்த வீரருக்கு 1520 கலோரிகளைக் கொடுக்கும். இந்த பொட்டலத்தில் 100 கிராம் இனிப்பு ரவை கேசரியும் 125 கிராம் நீர்ச்சத்து எடுக்கப்பட்ட காய்கறி புலாவும் இருக்கும். கூட தேனீர் , தீப்பெட்டி எல்லாம் சேர்த்து மொத்த எடையே 400 கிராம் தான்.
Must Read: தொண்டை கரகரப்பு வாய்ப்புண்ணை தீ்ர்க்கும் வாய்விளங்கம் சாறு
4.Survival Ration ; உயிர்பிழைக்க வைத்திருக்கும் உணவு இதில் கடலை மிட்டாய் சீனியில் செய்தது 50 கிராம் × 3 எண்ணிக்கை வெல்லத்தில் செய்தது 50 கிராம் × 3 எண்ணிக்கை சாக்லேட் 100 கிராம் × 3 எண்ணிக்கை இந்த சர்வைவல் ரேசன் ஒருவருக்கு 2400 கிலோ கலோரியை வழங்கும். போர் சமயத்தில் இந்த சர்வைவல் பேக்கில் தான் பல நாட்கள் வண்டி ஓடும்.
5.Main Battle Tank (MBT) Ration; முக்கிய போர் பீரங்கிப்படை உணவு பீரங்கிப்படையை இயக்கும் வீரர்களுக்கென பிரத்யேகமான உணவு ரேசனை இந்திய ராணுவம் வடிவமைத்துள்ளது இதில் ஒரு பீரங்கிக்குள் இருக்கும் நான்கு வீரர்களுக்கும் சேர்த்து மூன்று நாட்களுக்கு தேவையான உணவு வைக்கப்படிருக்கும்.
முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு வீரருக்கு 4000 கலோரி வீதம் 2 கிலோ எடையுடன் இருக்கும் கடைசி நாள் வீரர் ஒருவருக்கு 3000 கலோரி கிடைக்குமாறு 1.5 கிலோ இருக்குமாறு பொட்டலம் இருக்கும். உக்கிரமாக நடக்கும் போர் சூழலில் மூன்று நாட்கள் நான்கு வீரர்கள் உயிருடன் வைத்திருக்க இந்த உணவுப்பொட்டலம் உதவும். ராணுவ வீரர்களின் போர்க்கால உணவு முறை குறித்த சிறிய ஆய்வில் கிட்டிய தகவல்கள் இவை. நிச்சயம் நம்மை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நம் ராணுவ வீரர்கள் போற்றுதலுக்கும் நன்றிகளுக்கும் உரியவர்கள்
-Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை
#RationForIndianArmy #RationForForces #FoodRation #ArmyFoodRation
Comments