“நுரை ததும்பும் காபியை, சிப் சிப்பாக சுவைக்க வேண்டும்..”


அம்மா தான் எங்களுக்கு காபி குடிப்பதில் வழிகாட்டி. அப்போது காப்பி பொடி அரைக்கும் மெஷின் ஆத்தில் இருந்தது. பாலக்காடு, கொல்லங்கோடு, எங்க மாமா வீடு, எங்க வீடு, இப்படி எல்லோரது வீட்டிலும் காப்பிபொடி அரைக்கும் மெஷின், ஒரு சின்ன டேபிளில் நிரந்தரமாக பிக்ஸ் பண்ணி இருக்கும்.

காப்பிக்கொட்டையை மெஷினில் போட்டு, கையால் அதன் ஸ்டியரிங் மாதிரி இருக்கும் பிடியை பிடித்து, சுற்ற வேண்டும். நைசாக வரவேண்டும் என்றால் அதற்கு ஏற்றாற்போல் ரீபிராசஸ் பண்ண வேண்டும். கோவை கிராஸ்கட் ரோட்டில் இருந்து, தரமான காப்பி பீன்ஸை, Indian Coffee Depot வில் இருந்து, எங்கள் மாமா, மாதாமாதம் தவறாமல் வாங்கி அனுப்பி விடுவார்கள்.

Must Read: மளிகை பொருட்கள் வாங்கும் கலையில் நீங்கள் எப்படிப்பட்டவர்?

தினமும் (Roasted beans) காப்பி கொட்டையை மெஷினில் அரைத்து, அதற்கென்று பிரத்யேகமாக இருக்கும் காப்பிபொடி ஜாரில் போட்டு வைத்து விடுவார்கள். அரைக்கும்போதே அந்த காபிபொடியின் நறுமணம், மனதை மயக்கும்.

பாலக்காட்டில், பெரியவீட்டில் இருக்கும்போது, காலை ஐந்து மணிக்கு முதல் காபி ஆரம்பித்து விடும். இதற்காகவே எல்லோரும் நேரத்தில் எழுந்து, வாக்கிங் முடித்து, கூடத்தில் ஆஜராகி விடுவார்கள். டபரா சத்தம் கேட்டாலே மனது ஆனந்த தாண்டவம் தான். காபி ரெடியாகி விட்டது என்று அர்த்தம். எல்லோருமே ஸ்ட்ராங் காபி தான் குடிப்பார்கள்.

டிகாக்ஷன் பில்டர் பெரிதாக இருக்கும். பொடியை பில்டரில் போட்டு வெந்நீர் விட்டு இதமாக தட்ட வேண்டும். வேகமாக தட்டினால் பொடியுடன் இறங்கிவிடும்.

சர்வதேச காபி தின பதிவு

காபி குடிப்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. ஏம்பா, இதுக்கெல்லாமா இலக்கணம்? காபியில் என்ன அப்படி பொல்லாத இலக்கணம், இலக்கியம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.நிறைய இருக்கிறது. சொல்கிறேன். 

டிகாக்ஷன் நல்ல திக்காக இருக்க வேண்டும். அதை பாலுடன் தேவையான அளவு விட்டு, சர்க்கரை அளவாக போட்டு, டபராவில் விட்டு ஆத்தினால், நுரை தளும்பி மேலே வரவேண்டும். சரியான சூட்டில் நுரை ததும்பும் டபரா காபியை, வாயில் ஒரு சிப் வைத்து, மெதுவாக நுரையை சுவைக்க வேண்டும். பின்பு பொறுமையாக, சிப் சிப்பாக சுவைக்க வேண்டும். காபி குடிக்க ஆரம்பித்து முடியும் வரை எதுவும் பேசக்கூடாது. முடிந்தால் கண்ணை மூடி, காபி தொண்டையில் இறங்கும்போது, ரசிக்க வேண்டும். காபி குடிக்கும்போது அவசரமே கூடாது. கூடவே கூடாது. காபியை சரியாக ரசித்து, ருசித்து குடிக்க வேண்டுமானால், ஒரு ஐந்து நிமிடம் எடுத்து, சூடான காபியை, பொறுமையாக குடிக்க வேண்டும்.

சர்க்கரை அளவாக இருப்பது மிக அவசியம். சர்க்கரை அதிகமானல், காபியின் சுவை மாறி, பானகம் போல் ஆகிவிடும். காபி குடித்தவுடன் அடுத்த சிறிது நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. அப்போது தான் காபியின் சுவை மனதில் இருக்கும்.

கொல்லங்கோடு ஆலம்பள்ளம் அக்ரஹாரத்தில் காலையில் 10 மணி சாப்பாடு முடிந்ததும், ஒவ்வொருவராக மணி மாமா ஆத்து திண்ணையில் ஆஜர் ஆவார்கள. அரட்டை கச்சேரியும், சிலப்போ சீட்டு கச்சேரியும் ஆரம்பமாகும்.

அப்போது 12 மணிக்கு காபி பிரேக் விடுவது வழக்கமான ஒன்று. மணி மாமா தான் தினமும் ஸ்பான்சர். பெரிய இடம்.மாமி காபி போட்டதும், காபி வாசனை தெரு வரை வந்து கமகமக்கும்.

சர்வதேச காபி தின பதிவு

"ஏண்டா, ஷர்மா! காப்பியை  நிறுத்தப்போறேன்னு சொல்லிண்டு இருந்தியே, விட்டாச்சா?"

"இவனாவது காப்பியை விடறதாவது!  கொடுத்து பாருங்கோ. ரெண்டு டம்ளர் குடிச்சுடுவன்" - இது சேஷா மாமா.இந்த மாதிரி அலப்பறைகள் கேட்கவும் பார்க்கவும் ஆனந்தம் தான். 

அம்மாவுக்கு காலங்காத்தால 5 மணிக்கு பர்ஸ்ட் டிகாக்ஷன் காபி குடிக்கனும். அப்புறம் டிபன் முடிச்சுட்டு 10 மணி காபி. அப்புறம் சமையல் முடிச்சுட்டு 12 மணிக்கு ஒரு காப்பி. பின்பு சாயங்காலம் 4 மணிக்கு ஒரு காபி. அப்புறம் 6மணிக்கு ஒரு காபி. அப்புறம் இடையில் யாராவது வந்தான்னா,  அவாளுக்கு கலக்கும் போது ஒரு வாய். இப்படி காபியுடன் நாள் முழுதும் பயணம். வீட்டில் காபி பொடியும் பாலும் எப்போதும் ரெடியாக இருந்து கொண்டே இருக்கும்.

எனக்கும் காலை நடைப்பயிற்சி முடித்தவுடன், சூடாக ஸ்ட்ராங் பில்டர் காபி, டபரா செட்டில் வைத்து குடித்த பிறகு தான், அந்த நாள் ஆரம்பமாகும். அப்புறம் அம்மா மாதிரி தான். எசமானி 10 மணிக்கு குடுத்தால் ஆஹா. 12 மணிக்கு குடுத்தால் ஓகோ. தான்.

Must Read: இந்த மூலிகை பானங்கள் உங்கள் தலைவலிக்கு மருந்தாகும்..

முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு. காப்பி சாப்பிடுவது உடம்புக்கு கேடு என்ற செய்திகளை நாங்கள் விரும்பி படிப்பது இல்லை என்ற விஷயம தான்."சார் காபி நிறைய குடிப்பீங்களா? கொஞ்சம் குறச்சுக்குங்க. அதுக்கு பதிலா டீ சாப்பிடுங்க"

சில நண்பர்களின் அறிவுரைகள் மனதில் வாங்கி கொள்வதோடு சரி. பின்பற்றுவது கடினமாக இருக்கிறது.காபிக்கு ஒரு "ஓ" போட்டு, நாம் நம் பயணத்தை இனிமையாக தொடரலாம்.காபி பிரியர்களுக்கு ஒரு 'ஓ' போடலாம்.

வெளியூர் பயணங்களில் பில்டர் காபி கிடைத்தால் மட்டும் குடிப்போம். இன்ஸ்டன்ட் காபிக்கு எப்பவுமே நோ தான். அதற்கு மாற்றாக அப்போது மட்டும் ஸ்ட்ராங் டீ சாப்பிடுவது வழக்கம். ஊட்டி மாதிரி இடங்களில டீ தான் பிரதானம். அதுவும் பயணங்களுக்கு சுவை கூட்டியது என்றால் மிகையாகாது.சரி. போறும். இத்துடன் காபி புராணத்தை இதோடு முடித்து கொள்வோம். இனி ஒரு வாய் காபி சாப்பிட்டு விட்டு தான் மற்றவை எல்லாம்.

நன்றி; கண்ணன் நஞ்சுண்டசாமி

#InternationalCoffeeDay  #FillterCoffee  #Coffee  


Comments


View More

Leave a Comments