மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தூதுவளை மிகப்பெரிய பொக்கிஷம்


பெருமானாரின் மூலிகை குண அட்டவணையில் 485 மூலிகைகளைப் பற்றி எடுத்துரைத்துள்ளார்.  இந்த 485 மூலிகைகளில் முதன்மையான இடத்தில் இருப்பது கரிசாலையும் தூதுவளையும். கரிசாலையின் முக்கியத்துவத்தையும் அதன் பயன்பாட்டையும்  எம்மால் இயன்ற வரை உங்கள் அனைவருக்கும் பன்முறை எடுத்துரைத்துள்ளேன்.

அடுத்ததாக பாமரனிலிருந்து படித்த மேதாவிகள் வரை யாவரும் அறிந்த ஆனால் பயன்பாட்டை மறந்த  கரிசாலைக்கு நிகரான தூதுவளையை பற்றி இங்கனம் எடுத்துரைக்க முனைகிறேன். 

ஞான மூலிகை என்று அழைக்கக்கூடிய தூதுவளை கரணங்களை ஒடுக்கக்கூடியது. கரணங்கள் என்பது மனம், புத்தி, சித்தி, அகங்காரம்.  ஒரு மனிதனின் எண்ண அலைகளை தூண்டக்கூடிய இந்த கரணங்களின் செயல்பாட்டை சீரமைக்கும் வல்லமை தூதுவளைக்கு மட்டுமே உள்ளது என்கிறார் பெருமானார். 

தூதுவளையின் சிறப்புகள்

அபூர்வமான செயல்பாட்டை செய்யக்கூடிய இந்த தூதுவளை கரணங்களை ஒடுக்கி சுவாசத்தை குறைக்க செய்கிறது அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன் 15 முறை உள்மூச்சு வெளிமூச்சு என்ற சுவாசத்தை 12 ஆக குறைக்கிறது.

இங்கனம் ஒரு மனிதனின் சுவாசத்தின் வேகம் எந்த அளவு நிதானப் படுகிறதோ அந்த அளவு அவன் ஆயுள் கூடும் என்பது யோக சூத்திரம். சுவாசத்தின் வேகம் நிதானப் படும்போது கொஞ்சம் கொஞ்சமாக எண்ண அலைகள் ஒடுங்கும். வாழ்நாட்கள் வளமானதாக மாறும்.

இதனால்தான் பெருமானார் தூதுவளையை கப நாசி, அதாவது கபத்தை நாசம் செய்யக் கூடியது என்கிறார். உள்ளிருக்கும் கபத்தை வேரறுக்கும் வல்லமை கொண்ட ஒரே மூலிகை தூதுவளை. தூதுவளையின் பெருமை அதோடு முடிந்து விடுவதில்லை.

Must Read: இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ளவர்கள் தவறவிடக்கூடாத கட்டுரை…

பெருமானார் தூதுவளையை அறிவு விருத்தி என்கிறார். தூதுவளை என்றாலே வெறும் சளிக்கு கொடுக்கக்கூடிய ஒரு மூலிகை என்று மட்டுமே உலகத்தார் அறிந்திருக்கக் கூடும்.  ஆனால் தூதுவளை அறிவை விருத்தி செய்யும் ஆற்றல் வாய்ந்தது, எனவேதான் வள்ளல் பெருமானார் தூதுவளையை  எவ்விதத்திலாவது குழந்தைகள் முதல் கிழடு தட்டிய முதியவர் வரை யாவருக்கும் உள்ளுக்கு தூதுவளையை  பொடியாகவோ, லேகியமாகவும், துவையலாகவோ அல்லது ரசமாகவோ எவ்விதத்திலாவது கொடுக்க அறிவு விருத்தியாகும்  என்கிறார் பெருமானார்.

 அறிவு விருத்தியாகும் போது மனம் ஒருநிலைப்படும்.  மனமானது ஒரு நிலை பட்டாலே அதுவே வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாகும்.  அறிவு என்பதுதான் ஞானம் அப்படிப்பட்ட ஞான தெளிவை கொடுக்கவல்ல மூலிகைகளில் கரிசாலைக்கு நிகராக தூதுவளையே முன் நிற்கின்றது. ஞான நிலை அடைவது என்பது நம்மைப் போன்ற மானிடர்களுக்கு  எட்டாக்கனி என்றே நம்மில்  பலரும் எண்ணுவதுண்டு.

 முதலில் ஞானம் என்பது எதையும் பகுத்து ஆராயும் வல்லமை தரவல்லது. தெளிவான மன நிலையை நிலையாக பெறுவதற்கு இந்த ஞான மூலிகை எனக்கூடிய  தூதுவளை நமக்கெல்லாம் இறைவன் கொடுத்த ஒரு வரமாகும். ஆம் சுந்தரருக்கு ஞானம் வழங்கிட  சிவபெருமான் வழங்கிய மாபெரும் அற்புத மூலிகை தூதுவளையே.

சிங்கவல்லி என சித்தர் பெருமக்களால் வழங்கப்பட்ட தூதுவளை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மிகப்பெரிய பொக்கிஷமாகும்.  மனநிலை பாதிப்படைந்த குழந்தைகளுக்கு எவ்வித மூலிகை சித்தியாகும் என்று ஆராயும் பொழுது எமக்கு பெருமானார் உணர்த்தியது தூதுவளை என்னும் ஞான மூலிகை. 

(Hyper active & Autism) கட்டுக்கடங்காத  மனநிலையோடும், வாயில் உமிழ்நீர் வழிந்தபடி நிலையற்ற தன்மையில் நிலையில்லாமல் வாழும் சித்தம் பேதலித்த குழந்தைகளுக்கு தூதுவளையை ஏதாவது ஒரு வகையில் நெய்யாகவோ, லேகியமாகவோ, தூதுவளை கிருதமாகவோ ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து கொடுத்து வர நல்ல ஒரு அற்புத மாற்றத்தை காணலாம் இது எமது அனுபவத்தில் யாம் கண்ட உண்மை.

1960 மற்றும் 1970களில் மூலிகை சக்ரவர்த்தி கண்ணப்பருடைய இந்த தூதுவளையால் செய்யப்படும் துவையல் முறையானது  பல பேருடைய ஆஸ்மா என்னும் மூச்சுத்திணறல் பிரச்சினையை முழுவதுமாக குணப்படுத்தி உள்ளது. ஆஸ்துமா நோய்க்கு அரு மருந்தாகவும் தூதுவளை துவையல் விளங்குகிறது. 

தேவையான பொருட்கள்

செக்கு நல்லெண்ணெய், உளுத்தம்பருப்பு, ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி, உங்கள் தேவைக்கேற்ப தூதுவளை இலைகள், மிளகு அரை ஸ்பூன், வர மிளகாய் காரத்திற்கு ஏற்ப, பெருங்காயம் கால் ஸ்பூன்.

செய்முறை

சுத்தமான நல்லெண்ணெயில் இரண்டு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு சிவக்க விட்டு அதில் மிளகு அரை ஸ்பூன் சேர்த்து  வரமிளகாய் காரத்திற்கு ஏற்ப சேர்த்து பின்பு   கால் ஸ்பூன்  பெருங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் ஒவ்வொரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகளையும் நன்கு வதக்கிய பின்பு தூதுவளை இலைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பின்பு சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து அம்மியில் இட்டு நன்கு மசிய துவையல் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

உட்கொள்ளும் முறை

இவ்வாறு அரைத்த துவையலை பகல் வேளையில் சூடாக வடித்த சாதத்தில் நெய் விட்டு அதனுடன் தூதுவளை துவையலையும் சேர்த்து உட்கொள்ளவும். மிகுந்த சுவையோடு இருப்பது மட்டுமல்லாமல் உடலுக்கும் பல்வேறு விதத்தில் நற்பலன்களை தரவல்லது தூதுவளை துவையல்.

முக்கிய குறிப்பாக தூதுவளை துவையலில் புளி மற்றும் தேங்காய் சேர்க்க வேண்டியதில்லை.  மேற்கூறியவற்றை மட்டும் சேர்த்து வதக்கி துவையலாக பயன்படுத்தவும்.

Must Read:இயற்கை வாழ்வியல், உணவு கட்டுப்பாடு மூலம் சர்க்கரை நோய் குணமாகுமா?

மனிதர்களின் உடலை பேணுவதில் ஒரு மிகச்சிறந்த E.N.T. Doctor போல செயல்படும் மூலிகை எதுவென்றால் அது எமது அனுபவத்தில் தூதுவளை மட்டுமே என்பேன். காது, மூக்கு, தொண்டை இந்த மூன்றும் சார்ந்த எப்பேர்பட்ட பிரச்சனைகளுக்கும் ஒற்றை மூலிகையான தூதுவளையே அற்புதமான மருத்துவ குணம் வாய்ந்தது என்பேன். 

வயோதிக காலத்தில் ஏற்படக்கூடிய காது மந்தம் காது கேளாமை காதில் இரைச்சல் ஏற்படுதல் இப்படிப்பட்ட நோய்கள் யாவற்றுக்குமே   தூதுவளையை துவையலாகவோ லேகியமாகவும் கஷாயமாகவோ ஏதேனும் ஒருவகையில் உள்ளுக்குள் எடுத்துக்கொண்டு வந்தால் எப்பேர்பட்ட பிரச்சனைக்கும் மருத்துவரை தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை என்பேன். 

தூதுவளையின் பயன்கள்

இறுகிப்போன மார்பு சளியையும், தொடர்ந்து வரும் இரும்பலையும் முக்குற்றங்களான வாதம், பித்தம், கபத்தையும்  நீக்கக்கூடியது தூதுவளையின் பழங்கள். அதுமட்டுமல்லாமல் தூதுவளையின் பழங்களை தேனில் ஊறவைத்து தினம் தோறும் இரவு படுக்கைக்கும் முன் ஒரு பழமும் ஒரு டம்ளர் அளவு பசும் பாலும் உண்டுவர தேகம் வலுப்பெறும். 

அதுமட்டுமின்றி தூதுவளையின் காய்களைப் பறித்து அதை வற்றல் செய்து அதை உணவோடு உட்கொண்டுவர ஆயுள் நீட்டிப்பு உண்டாகும். நுரையீரல் சார்ந்த அனைத்து நோய்களுக்கும்    அருமருந்தாகும்.  

தூதுவளையின் இலை பூ காய் என்பன மட்டும் அல்லாமல் அதன் வேர்ப் பகுதியும் நமது பற்களுக்கு வலுவூட்ட கூடியது. தூதுவளை வேர்ப்பகுதியை எடுத்து அதை நன்கு காய வைத்து பொடி செய்து அதை பற்பொடியுடன் கலந்து பல் துலக்கி வர பற்களில் ஏற்படும் இரத்த கசிவு, கூச்சம், பல் ஈறுகளில் வீக்கம், துர்நாற்றம் போன்றவை நீங்கும். 

இப்படி தூதுவளையின் அனைத்து பாகங்களுமே பிணிகளற்ற நல்வாழ்வு வாழ உறுதுணையாகக் கூடிய அற்புத மூலிகைகளில் பொக்கிஷம் என்பேன்.  இதனால் தான் பெருமானார் தூதுவளையை உயிரை வளர்க்கும் ஞான மூலிகை என்கின்றார். அப்படிப்பட்ட இந்த தூதுவளையை பெற்றோர் பெருமக்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு இந்த அற்புத ஞான மூலிகையான தூதுவளையை நன்முறையில் தொடர்ந்து கொடுத்து நற்பயன்களை அடைய வேண்டும். 

-ஜமுனா ராஜேஷ்

#thuthuvalaibenefits #thuthuvalaiformentalhealth #Solanumtrilobatum #thuthuvalai

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்


Comments


View More

Leave a Comments