டாடி ஆறுமுகம் போல 94 வது வயதில் உணவு தொழிலில் கலக்கும் பாட்டி


ஒருவருக்கு எந்த வயதில் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும் என்று சொல்வது கடினம். தமிழகத்தைச் சேர்ந்த டாடி ஆறுமுகம் முதிய வயதில்தான் யூடியூப்பில் சமைப்பது எப்படி என்று கலக்கல் வீடியோக்களை பதிவிட்டு ஹிட் ஆனார். சன் தொலை காட்சி வரை ஷோக்களில் இடம் பெற்று பிரபலம் ஆனார். 

மதுரையில் டாடி ஆறுமுகம் உணவகம் என்ற ரெஸ்டாரெண்ட் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். டாடி ஆறுமுகத்தைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கையில் இந்த முதியவயதில்தான் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. இதே போல சண்டிகரை சேர்ந்த 94 வயது முதிய பெண்மணியான ஹர்பஜன் கவுர் என்பவர் இந்த வயதிலும் விதம் விதமான உணவு வகைகளை செய்து விற்பனை செய்து அசத்துகிறார். 

ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற அமைப்பின் வாயிலாகத்தான் ஹர்பஜன் கவுரின் வாழ்க்கை வெளி உலகத்துக்குத் தெரியவந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஏதேனும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என ஹர்பஜன் கவுர் யோசித்திருக்கிறார். 

94 வயதில் உணவு சமைக்கும் தொழிலில் அசத்தும் பாட்டி

இப்படி ஒரு யோசனை வந்தபோது அவரது வயது 89. அவருக்குத் தெரிந்தது நன்றாக சமைப்பது மட்டும்தான். தனது யோசனையை அவர் மகளிடம் சொன்னார். அப்போது அவரது மகள் ஏன் பர்ப்பி செய்து விற்க க் கூடாது என்றார். 

இதையும் படியுங்கள்;கையால் சாப்பிடுவது கெட்ட பழக்கமா?

அதன் விளைவாக ஹர்பஜன் கவுர் பர்ப்பி செய்ய ஆரம்பித்தார். அவர் செய்த பர்பி ஒரு சில மணி நேரங்களில் ஆன்லைனில் விற்றுத் தீர்ந்தது. முதல் நாளில் அவர் ரூ.2000 சம்பாதித்தார். இதனைத் தொடர்ந்து அவரது சுவையான பர்ப்பிக்கு மொத்த ஆர்டர்கள் வர ஆரம்பித்தன.  இந்த முதிய வயதில் அவரின் சாதனை பலரை வியக்க வைக்கிறது. 2020ம் ஆண்டுக்கான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். 

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் ஹர்பஜன் கவுருக்கும் தொற்று தாக்கியது. ஆனால் விரைவிலேயே கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டார். 

அவரது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் 12,000 பேர் பின் தொடர்கின்றனர். அவரது பேத்திகள்தான் ஹர்பஜன் கவுர் சமைக்கும் வீடியோவை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுகின்றனர். அண்மையில் டேன்ஜரின் ஸ்குவாஷ் என்ற பழரசம் தயாரிப்பது குறித்து வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில் பல்வேறு வைட்டமின்கள், நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த பழரசத்தை அருந்துங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். 

ஹர்பஜன் கவுரின் வீடியோவை பார்க்க https://www.youtube.com/watch?v=9AgQXeDH9D8

-பா.கனீஸ்வரி 

#HarbhajanKaur  #HarbhajanKaurAt95  #ChefHarbhajanKaur

 

Comments


View More

Leave a Comments