கோவை மாவட்டத்தின் கறிசோறும், விரதமும்


கோவை குடியானவர்களும், அவர்களைச் சார்ந்து வாழும் பிற சமூகக் குடிகளும் இறைச்சி சாப்பிட தேர்ந்தெடுத்த நாள் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளே.  முக்கியமாக ஞாயிறு மட்டும்தான் கறி நாள். வீட்டுக்கு வீடு கறி மொளகு அம்மி, ஆட்டாங்கல்லில் அரைக்கும் சத்தம் கடமுடா என்று ஏழூருக்கு கேட்கும். 

மொளகு சாறு கொதிக்கும்போது ஊரே மணக்கும். ஊர்க் கண்ணு ஒலகக் கன்ணு பட்டுடும்ன்னு சாறு கொதி வரும் போது அடுப்புல வாக்கணக் கரண்டியை திருப்பிப் போட்டு பழுக்கக் காய்ச்சி கொழும்புல சூடு வைப்பாங்க. அப்ப தள புழன்னு கொழம்பு கூடுதலா கொதிக்கும்போது இன்னும் மணக்கும். எந்தக் காரணம் கொண்டும் கசாப்புக் கடையில போய் கறி எடுக்க மாட்டாங்க. 

Must Read: உடல் நலத்துக்கு தேவையான சத்துகள் கொண்ட வாழை இலை, வாழைப்பூ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

ஏன்னா குறியாட்டு க்கறி, செம்மறியாட்டுக் கறியப் போட்டுருவாங்கன்னு பயம். இவங்க சாப்பிடறது எப்பவுமே வெள்ளாடுதான். அதுக்காக தோட்டங்காட்டுல மேயற, பட்டியில் அடைக்கிற கணக்கான வெள்ளாடு பார்த்து அறுப்பாங்க. ஊருக்குள்ள பங்கும் பங்காளிகளுக்குள்ளே அதை பங்கு போட்டுக்குவாங்க.  அதுக்குப் பேருதான் கூறுக் கறி. சம்பலான ஊட்டுக்கு கறி பத்தலைன்னா, கறிக் குழம்புல ஒரு மூடி தேங்காயை துண்டு துண்டா நறுக்கிப் போடுவாங்க. ஈரக்கொத்து, நுரையீரல், குண்டி, குண்டாமணி, குடல் ரத்தம், கால் தலை... ஆடு அறுத்தவனுக்கு சொந்தம். 

அந்தக் காலத்துல இவங்களுக்கு ஆடு அறுத்து உரிச்சு கூறு கறி வெட்டித் தர்றவங்க குடிகளுக்கு சவரம் செய்யறவங்க, துணி வெளுக்கறவங்க போன்ற எளிய சமூகத்தை சேர்ந்தவங்களா இருப்பாங்க.   தப்பித் தவறி கூட குடியானவர்கள் பன்றிக்கறி, கோழிக்கறி, மாட்டுக்கறி தொட மாட்டாங்க. அதுக்கு பெரிசா சாங்கிய மொறமை எல்லாம் கிடையாது. பன்றியும், கோழியும் மனிதக்கழிவு வவக்-வவுக்குன்னு சாப்பிடும்ங்கறதுனால அதை புறக்கணிச்சாங்க.

 

கோவை விருந்தும் விரதமும்

'எருது மாடு ஏர் கலப்பை பூட்டி நிலத்தை பண்படுத்தற தெய்வம். வண்டி பூட்டி சவாரி செய்யற சுமைதாங்கி. பசுமாடு பால் கொடுக்கிற கோமாதா. தன்னைப் பெத்த தாய்க்கு சமம்'ங்கற எண்ணம் அவ்வளவுதான். மற்றபடி ஆட்டுக்கறி சாப்பிடறது கூட பாவமாத்தான் கருதினாங்க. ஜீவகாருண்யம் பேசினாங்க. கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னாங்க. கறி சாப்பிட்டுட்டு கோயிலுக்குப் போக மாட்டாங்க. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை வீடு, வாசலை பசுமாட்டுச்சாணம் போட்டு (எருமைச் சாணத்தை இதுக்கு தொடக்கூட மாட்டாங்க) மொழுகி விட்டுட்டு, குளிச்சு முடிச்சுட்டு ஒரு சந்தி (விரதம்) இருப்பாங்க. அப்புறம்தான் சாமி கும்பிட்டுட்டு கோயிலுக்குப் போவாங்க. பெண் தெய்வம்ன்னா மாரியாத்தா மட்டும்தான். ஆண் தெய்வம் முருகக்கடவுள்தான். குல தெய்வம்ன்னா கருப்பராயன் கன்னிமார் தான். சிவன் கோயிலுக்கெல்லாம் விசேஷ நாட்கள்ல போறதோட சரி. அப்பவும் சுத்த பத்தம் முக்கியம். வெள்ளி, திங்கள்  சாணம் போட்டு வீடு மொழுகி, குளிச்சு முழிச்சு சாமி கும்பிடறது கூட முந்தின நாள் கறி சாப்பிட்ட தீட்டுக் கழியத்தான். 

Must Read: மாட்டுக்கறி உண்பதற்கு பிறரின் ஒப்புதல் தேவையா?

இப்பவெல்லாம் எல்லாமே கடந்து போச்சு. எல்லா நாளும் கறி, பிரியாணி தான். நினைச்ச நேரமெல்லாம் பிராய்லர் வருவல், சூப்பு தான். தலை, காலு, குடலு, ரத்தம் எல்லாமே ஒரு பிடி பிடிச்சடறது பலருக்கும் வழக்கமாயிருச்சு. ஊர்றது, பறக்கறது, ஓடறது, நடக்கறது எதுன்னாலும் சில பேர் ஒரு கட்டு கட்டிடறாங்க. அதுலயும் நாட்டுக்கோழி, அதுலயும் வெடக் கோழி, அதுக்கும் மேல கட்டுச் சேவல் கோச்சைக் கறின்னா உசிரு. 

அப்படி சாப்பிட்டுட்டு கோயிலுக்குப் போறது கூட பல பேருக்கு தீட்டா தெரியலை. சில பேர் வயிறு ஃபுல்லா கறிய ரொப்பிட்டு, அப்படியே ஒரு குளியல் போட்டுட்டு, கோயிலுக்குப் போய் பயபக்தியா கும்பிட்டு, நெற்றி நிறைய விபூதியப் பூசிக்கிறதும் நடக்குது. கடவுள் இல்லைன்னு சொல்றவங்களை விட கடவுள் உண்டுன்னு சொல்லி சாமியக் கும்பிடறவங்கதான் சாமிய ரொம்பவும் சோதனைக்குள்ளாக்கி மனசை சஞ்சலப் படுத்தறாங்க. இந்துத்வா - பிரியாணி மேளா செய்தியெல்லாம் கேட்டதுல எனக்கு இது எல்லாம் எழுதத் தோணுச்சு. இதுல ஏதாச்சும் தப்பிருந்தா மனுஷக் குத்தம் இருந்தா கடவுள் நிந்தனை இருந்தா பெரிய மனுசு பண்ணி பொறுத்துக்குங்க மக்களே

கட்டுரை, படம் நன்றி; கா.சு. வேலாயுதன் முகநூல் பக்கம்

#KovaiNonvegFeast  #KovaiKariChoru   #KovaiFoods


Comments


View More

Leave a Comments