ஃபோர்க்குடன் குழந்தையின் கண்ணில் தெரியும் மிரட்சி நாகரீகமல்ல


TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குஜொமாட்டோ அடாவடி,  தேன்சாப்பிடும் முறை

அடுப்பங்கரையில் தொலைத்தவை பற்றி ஏராளம் பேசியிருக்கின்றோம். தொலைந்ததில் கவித்துவமான ஒன்று பரிமாறல். கொஞ்சம் கூடுதலாய் ஆணாதிக்கத் திமிர் ஒட்டியிருந்த இடம்தான் அது. "எங்க தாத்தா தட்டுல கைகழுவும் வரை அவர் பக்கத்துலயே நிக்கணும். அவர் முளகாப்பொடிய இட்லிக்கு ஒத்தி ஒத்திச் சாப்பிடறப்ப பாத்து பாத்து எண்ணெய் ஊத்தணும். இல்லேன்னா அவ்ளோதான்" என பழம் பெருமையாய் பேசும் பெண்ணடிமைத்தனத்தை கொஞ்சம் விளக்குமாறில் கூட்டி குப்பையில் போட்டது நம்மரபின் மிகச்சிறந்த அவசிய நகர்வுதான்.

அதே சமயம் ஒக்கலில் வைத்திருக்கும் குழந்தைக்கு, " அடிச்சட்டி ஆனை போல" என கடைசி உருண்டை மோர்ச்சோறை வழித்து வாயில் திணித்த காலம் காணாமல் போனது வலிக்கிறது. உசத்தியான ஸ்டூலில் ஏப்ரன் போட்டு ஃபோர்க்குடன் உட்கார்ந்திருக்கும் குழந்தையின் கண்ணில் தெரியும் மிரட்சி நாகரீக நகர்வாய்த் தெரியவில்லை.

உணவகங்கள்

 

" எந்துச்சிடாதீங்க எந்துச்சீடாதீங்க..கல்லுல இருக்குற ஒரு தோசை உங்களுக்குத்தான். முருகலா வந்துருக்குப்பா" என்கிற குரலில் உள்ள குழைவு தக்காளிச் சட்னியைவிட தளதளப்பானது. அங்கே தோசைக்கு எதை தொட்டுக் கொள்ளணும் என்பதைப் புத்திசாலிகள் முடிவு செய்வர். இப்போது அந்தக் குழைவுச் சத்தம் சுத்தமாய்க் காணோம். சுட்டுச் செத்த தோசைகள்,  விரைப்பாய் உக்ரைன் நாட்டு எடுக்க யாருமில்லாத பிணங்கள் போல காத்திருப்பது, பசி நீக்கி வலிக்கும்.

Must Read: சென்னை, திருப்பூரில் தவறவிடக்கூடாத இயற்கை வேளாண் நிகழ்வுகள்

எச்சில் இல்லாமல் ஆரஞ்சுமிட்டாயை இரண்டாய் கடித்துத் தந்த அன்றைய பாளையங்கோட்டை ஐய்யப்பனும், "ரவாகிச்சடி ஒன் பை டூ, மசால் தோசை ஒன் பை டூ" என எல்லாத்தையும் ஒன் பை டூ வாக்கி சுவைக்க பட்லருடன் சேர்ந்து பரிமாறும் இன்றைய கோவை நடராஜனும் ஏழாம் சுவை பரிமாறும் நண்பர்கள். அவனவன் வீட்டில், அவனவன் போனில், ஆனால் ஒண்ணா உட்கார்ந்து கூகுளில் குரூப்பாய் இங்கலீஷ் படம் பார்க்கும் பீமர்களுக்கு( நம்மை 'பூமர் அங்கிள்ஸ்' என நக்கலடிப்பதால்  அவர்கள் பீமரானார்கள்) இந்த பகிர்தல் புரியாது.

 பக்கத்து சீட்டில் இருந்து,  பரிமாறப்பட்ட பாதி சாக்லேட் பரவசம், மீதி வாழ்க்கையெல்லாம் ஒட்டிய சுவை என்பதும் தெரியாது. நட்சத்திர விடுதியில், விலையுயர்ந்த எடுப்புச்சோற்றுப் பந்தியில்(அதாங்க பஃபேயில்)  கையேந்தி நகர்ந்து கொண்டே, பார்ப்பதை எல்லாம் அள்ளிப் போடும் விருந்தை விட, காரைக்குடி மெஸ்ஸில் "ஏங்க நண்டு ரசம் வாங்கலை? ஒரு உருண்டைக்கு ஊத்திப் பிசைந்து சாப்பிட்டுப் பாருங்க,"  எனச் சொல்லும் அழுக்குச்சேலை கட்டிய ஊழியரின் பரிமாறல் அலாதி அழகு. 

இப்போதெல்லாம் சென்னை ஓட்டல்களில் புதிதாய் வந்த திரிபுரா தம்பி " ஜேம்பாரா? ஜட்டியா?" என கேட்கும் போது கொஞ்சம் விக்கலும் வருகிறது. "அப்பா அப்பா நான் ஊற்றட்டா?"  என குழம்புக் கரண்டி உயரம்கூட இல்லாத வீட்டுப் பொடுசு, கொஞ்சம் குழம்பை வெளியில் சிந்தி, பருப்பையும் முருங்கையும் மட்டும் சோற்றில் போட்ட சாம்பாரின் சுவையில் இன்னும் ஏதோ ஒட்டியிருக்கும். இடதுபக்க இதயத்துக்கு எடுத்துச் செல்லும் அந்தச் சத்து பற்றி உணவு அறிவியல் இன்னும் முழுசாய் அறியவில்லை.

உணவு பரிமாறல்

குழந்தைகளுக்கு பரிமாறக் கற்றுக் கொடுக்க வேண்டும். அது நீட் ஜேயீயீவிட வாழ்வில் அதிக சம்பாத்தியத்தை சந்தோஷத்துடன் குழைத்துக் கொடுப்பது. அளவாய், அழகாய்ப் புன்னகை முகமொழியுடன், பரிமாறும் குடும்பங்களில் சர்க்கரை இரத்தக் கொதிப்பு கட்டாயம் குறைவாய்த்தான் இருக்கும். 

விஞ்ஞானிகள் இனி இதனைக் கொஞ்சம் தாமதமாய்த்தான் கண்டுபிடிப்பர்.நெல்லைப் புத்தகக் கண்காட்சிக்கு வழக்கமான நலப் பரிமாறல் உரைதான். "வ உ சி மைதானத்தில் பேச்சு என்றால் வரிஞ்சுகட்டிக்கிட்டு ஓடுவீங்களே" என்கிற வீட்டு அசரீரீகளைத் தாண்டி நெல்லைக்கு ஓடினேன். 

Must Read:உணவு எண்ணெயில் வைட்டமின் இருக்கு என்பதெல்லாம் உடான்ஸ்…

ரயிலிறங்கிய கணம் முதல் பல பணிகள். கூடவே படித்த பாளை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சில திட்டக்குழுப் பணிகளுக்காகவும் கலந்துரையாடிவிட்டு, " அம்மா 15-20 நிமிஷம்தான் கிடைக்கும்னு நினைக்கிறேன். உன்னைப் பாத்துட்டு போகத்தான் வாரேன். நீ எதுவும் சமைக்க வேணாம் . சரியா?" என்றேன்.

 "சாப்பிடற நேரம்டா. ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம். உனக்கும் ராமசுப்புக்கும் சேத்தே சமைச்சு வைக்கிறேன்" எனச் சொல்லி 53 வயசில் எனக்குப்பிடித்த கூட்டாஞ்சோறை 77 வயதில் தனியாய்ச் செய்து பரிமாறி , மோர்ச்சோறுக்கு நார்த்தங்கா உனக்குப் பிடிக்கும்லா..ஒரு துண்டு போடட்டா? எனச்சொல்லிக் கொண்டே தட்டில் போட்டது வ உ சி மைதானத்து புத்தககண்காட்சி உரைக்கு உற்சாகம் கொடுத்த ஒன்றாயிற்று. கூட்டாஞ்சோறோ, காதலோ பரிமாறுவோம். ஏனென்றால் எப்போதும் அங்கே பசி மட்டும் அடங்காது!

நன்றி; சித்தமருத்துவர் கு.சிவராமன் அவர்களின் முகநூல் பதிவு

#foodservingart  #tamilcookingculture #gsivaramanwriting #maruthuvarsivaraman

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குஜொமாட்டோ அடாவடி,  தேன்சாப்பிடும் முறை


Comments


View More

Leave a Comments