இலங்கை தமிழர்கள்; போரின் வலியும் புதிய வாழ்வும்


திரு, பாமயன் அவர்கள் அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு இடங்களில் நடைபெற்ற  உழவர்களுக்கான நிகழ்வுகளில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன் தொகுப்பை அவருடைய வார்த்தைகளிலேயே இங்கு படிக்கலாம். 

இலங்கையில் போருக்குப் பின்னால் ஏற்பட்ட துயரங்கள் பெரும் வலியையும் வேதனையும் தருபவை. போர் என்றாலே மண்ணும் பெண்ணுமே அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். மன்னார் பகுதியில் கை கால்கள் இழந்து கண்கள் முகங்கள் சிதைந்து மீண்டும் மறுவாழ்வை நோக்கிப் போராடிக் கொண்டிருக்கும் எண்ணற்ற மக்களைக் காண முடிகிறது. 

Must Read: இன்றைய இயற்கை வேளாண் சந்தை

அவர்களின் ஒருவர் வெற்றிச்செல்வி மன்னார் மாவட்டத்தில் உள்ள அடம்பன் என்ற பகுதியில் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் உருவாக்கியுள்ள ஆற்றல் நுண்கலைக் கல்லூரி அருமையான முயற்சி. சிறுவர்கள், இளம் பெண்கள், இளம் பையன்கள் போன்றவர்களை ஆற்றுப் படுத்தும் பணியும் கலைகளைக் கற்றுத் தரும் பணியும் செய்து வருகிறார். 

அதில் ஒன்றாக தற்சார்பு வேளாண்மையும் உள்ளது. அவர் நல்ல எழுத்தாளரும் கூட. நிறைய நூல்களை எழுதியுள்ளார். நூல்களை எங்களுக்கு வழங்கினார். அவரது வலது கை துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவரது மனவலிமை வியக்கத்தக்கது. அவரது துயரம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகளை மிக இயல்பாக சிரித்துக் கொண்டே பகிர்கி றார். 

இலங்கை போருக்கு பின்னர் விவசாயிகள் வாழ்க்கைஎனக்கு மிகவும் வேதனையாகவும் வியப்பாகவும் இருந்தது. இதற்கு மேல் என்ன இருக்கிறது ஐயா? என்று கூறுகிறார். தன்னுடைய தாயார் நிலத்தை ஒரு பயிற்சிப் பண்ணையாக மாற்ற முயன்று வருகிறார். அங்கு தான் குடும்பங்களைச் சந்தித்து உரையாடினோம். பல்வேறு இயற்கை வேளாண்மை நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

ராபர்ட் என்ற அன்பர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். அவருக்கு ஒரு கையும் ஒரு காலும் இல்லை. இந்த மக்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியுள்ளது. அதை ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெரிய கனவு உள்ளது. வலியில் இருந்து நல்ல வாழ்வை நோக்கி பயணப்படும் இம்மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும்

ஒரு காந்தியக் கனவு

மன்னார் செல்லும் வழியில் கிளிநொச்சிக்கு வெளியே காந்தி நிலையம் என்ற மாணவர் விடுதிக்குச் சென்றோம். இதன் நிறுவனர் தம்பிப்பிள்ளை ஐயா அவர்கள். 90 வயது கடந்த மூத்த காந்தியவாதி . இந்த நிலையத்திற்கு காந்தியடிகள் வருகை தந்துள்ளார். 

Must Read:பொடுகை விரட்ட... சில யோசனைகள்!

இலங்கைக்குக் காந்தியடிகள் பலமுறை வந்துள்ளதாக வல்வை அனந்தராஜா ஐயா தெரிவிக்கின்றார். வல்வெட்டித்துறைக்கு வந்த போது காந்தியடிகளிடம் 925 ரூபாய்கள் நிதி திரட்டி மக்கள் கொடுத்தனுப்பியதாகக் கூறினார். காந்தியடிகள் வந்ததன் நினைவாக மேதகு பிரபாகரன் குடும்பத்திற்குரிய சிவன் கோயில் கோபுரத்தில் காந்தியடிகளின் சிலை இடம்பெற்றுள்ளது.

இலங்கை காந்தி நிலையம்

காந்தி நிலையத்தில் 16 க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று படிக்கின்றனர். இது தவிர தம்பிப்பிள்ளை ஐயாவிற்கு இயற்கை வேளாண்மை பற்றிய பெரும் கனவு உள்ளது. காந்தியடிகளின் வேலைத்திட்டங்கள் இதுவும் ஒன்று என்கிறார். தமிழ்நாட்டிற்கு வந்த போது அவரை நான் சந்தித்து உள்ளேன். 

2018 ஆம் ஆண்டு வந்த போது கிராஞ்சி என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற மையத்தில் மரங்கள் நட்டு வந்தோம். அதையும் இவர் நடாத்தி வருகிறார். இவருக்கு நிறையத் தன்னார்வலர்கள் தேவை என்று கூறுகிறார். இயற்கை வேளாண்மையிலும், காந்தியப் பணியிலும் ஆர்வமுள்ள இளைஞர்கள் இவருடன் இணையலாம். இவரது மகன் நந்திவர்மன்  ஒரு  நல்ல கவிஞர். ஆஸ்திரேலியாவில் இருந்து இவருக்கு உதவி வருகிறார்.காந்திக் கிராமம் ஒன்றையும் ஐயா உருவாக்கி வருகிறார். ஐயாவின் காந்தியக்கனவு நிறைவேற நாம் முடிந்த வரை ஒத்துழைக்க வேண்டும்.

ஆர்வம் குறையாத உழவர்கள்

மட்டக்களப்பு கடலால் சூழப்பட்ட ஓர் அழகிய நகரம். இலங்கையின் முத்துக்களில் ஒன்று. மீன்பிடிப்பு மிக முகாமையான தொழில். நெல் சாகுபடியும் நடைபெறுகிறது. படித்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அனுராஜன் என்ற நண்பரின் கடற்கரை ஓர விடுதியில் தங்கினோம். ஒருபுறம் கடல். மறுபுறம் கழிமுகம் அதாவது ஆறும் கடலும் சேருமிடம். அதைக் காயல் என்று கூறலாம். ஆங்கிலத்தில் Lagoon என்று கூறுகிறார்கள். இறால் மீன் பிடிப்பு இயற்கையாகச் செய்கிறார்கள்.

Must Read: இலங்கை விவசாயிகளுக்கு சாகுபடி செலவைக் குறைக்க அறிவுறுத்தல்

3.1.2023 ஆம் நாள் மட்டக்களப்பு அரிமா சங்க அலுவலக அரங்கில் பயிலரங்கம் நடைபெற்றது. 250 பேர்களுக்கு மேல் வந்திருந்தார்கள். நிறைய கேள்விகள், விரிவான விவாதங்கள் நடந்தன. பல பேர் இயற்கை வழி வேளாண்மையை முயற்சி செய்து பார்த்துள்ளார்கள். 

இலங்கை விவசாயிகள் கருத்தரங்கு

சரியான பயிற்சியும் வழிகாட்டுதலும் இல்லாததால் ஆதங்கமாகப் பேசினார்கள். யூடியூப் வழியாகப் பார்த்து அரைகுறையாகப் புரிந்து கொண்டு தோல்வி கண்டவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். தனிப்பட்ட முறையில் வந்து பேசினார்கள். 

மாலை 5 மணி வரை அவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. மட்டக்களப்பு நூலகத்தில் இயற்கை வேளாண்மை நூல்களை (தமிழகத்தில் இருந்து நிறைய சேகரித்து வந்திருந்தோம்) நவஜீவன் பரிசளித்தார். இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

-பாமயன் 

#SrilankaAgricultureEvent #OrganicAgriculture #AgricultureInSrilanka 

 

Comments


View More

Leave a Comments