
சைவமோ, அசைவமோ சுவையை கட்டமைப்பதே முக்கியம்…
அடையாறு ஆனந்தபவன் உணவகத்தின் உரிமையாளர் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் உணவு அரசியல் குறித்த விவாத த்தை மீண்டும் ஒருமுறை எழுப்பியிருக்கிறது. முகநூல், எக்ஸ் வலைதளம் என எங்கெங்கும் சைவ, அசைவ உணவகங்கள் குறித்து கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. முகநூலில் திரு.மித்ரன், திரு.பாலசுப்பிரமணியம் முத்துசாமி ஆகியோர் பகிர்ந்த உணவு, உணவகம் பற்றிய இரண்டு கட்டுரைகளை தொகுத்து அளித்திருக்கின்றோம்.
தமிழ்நாட்டில் உணவின் விலை அதிகம்
சைவமும் அசைவமும் கலந்து உண்ணக்கூடியவர்களே உலகில் அதிகமாக இருக்கின்றனர்.நான் சைவம் மற்றும் அசைவம் இரண்டுவகை உணவிலும் சம விருப்பமுடையவன்.குமரி மாவட்டத்தில் ஆறுநாள் மீன் உணவும் ஞாயிறு அன்று மட்டன் சிக்கன் ஒருவேளை வசதியில்லாத நேரமென்றால் குறைந்தபட்சம் கருவாடாவது சாப்பிட்டு விடுகிறோம்.
இப்படியான ஒரு டிசைனில் உள்ள மாவட்டம் தமிழ்நாட்டில் வேறு எங்காவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை. சில நகரங்களிலுள்ள பெரிய ஹோட்டல்களைவிட அங்குள்ள கையேந்திபவன்கள் நாட்களைச் சிறப்பாக்கிவிடுகின்றன,குறிப்பாக நெல்லை,மதுரை,திருச்சி.
Must Read: அடையாறு ஆனந்தபவனும் சீனிவாச ராஜாவும்… தொடக்கம் முதல் சர்ச்சை வரை!
உணவு என்பது எவ்வகையிலும் நமக்கு கெடுதல் செய்யாமலிருந்தால் போதுமானது.அவ்வகையில் மதுரை சுல்தானியா மனம்கவர்ந்த உணவகமாக நான் உணர்ந்திருக்கிறேன்.சென்னை வடபழனியில் விலை கொஞ்சம் அதிகமென்றாலும் கேம்பஸ் மற்றும் ஸ்ரீராகா நல்ல திருப்திகரமானவை.
திருச்சியில் காமாட்சி உணவகம் அப்படியானது.இன்னும் அசைவத்தைவிட சைவத்தில்தான் அதிக விலையிட்டு கொள்ளையடிக்கிறார்களோ என்று உணர்ந்த தருணங்கள் நிறைய இருக்கிறது.
கேரளாவில் உணவுவகைகள் ரொம்பவும் சிறப்பாக இருக்கும்.தமிழ்நாட்டின் விலையை ஒப்பிடுகையில் விலையும் குறைவு.இதன்காரணமாக அங்கு மேற்கொள்ளும் பயணங்கள் இன்பகரமானவை.அசைவம் சாப்பிட மிகச்சிறந்த இடமும் கூட.குறிப்பாக பீஃப் உணவை நம்பிச் சாப்பிடலாம். இந்தியாவுக்கு வெளியே என்றால் வளைகுடா நாடுகளைவிட அசைவ உணவு சாப்பிட தோதான இடமாக இலங்கையைக் குறிப்பிடலாம்.
நம்முடைய நாட்டைப் பொருத்தவரையில் பெரும்பாலான உணவகங்களில் தரம் பேணப்படுதல்,முறையான தயாரிப்பு முறைகளைப் பின்பற்றுதல் போன்றவைகளில் குறைபாடு நிறைய இருக்கிறது.சென்னையில் எண்பது ரூபாய்க்கு பிரியாணியும் கிடைக்கிறது இருநூறு ரூபாய்க்கு தயிர்சாதம் விற்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆலந்தூரில் மிகப்பெரிய கடையாக இருக்கிற சுக்குபாய் கடை அசைவமும் , வடபழனி துரைசாமி ரோட்டில் சிறிய அளவிலுள்ள சாத்தப்பன் கடை அசைவமும் ஒரு தொல்லையும் செய்யாத ஆரோக்கியமானவைகளாக கண்டிருக்கிறேன்.மனிதர்களின் அடிப்படையான உணவு என்பது இந்த உலகில் ஆகப்பெரும் வியாபாரமாக உருமாறியிருக்கிறது.இன்று உலகின் எல்லா நகரங்களிலும் சர்வதேச நிறுவனங்கள் நங்கூரமிட்டு இறங்கியிருக்கின்றன.
ஆனாலும் நினைவுகளில் பசுமையாக கிடக்கிற ஒன்று. திருவண்ணாமலையருகேயுள்ள வேட்டவலம் என்னும் ஊரில் 2014ல் ஒரு சாதரணக் கடையில்(வீடுபோல இருந்தது)நாலு இட்டிலி சாப்பிட்டுவிட்டு எவ்வளவு என்று கேட்டதும் அந்த அம்மா ஐஞ்சு ரூபா கொடுப்பா என்றது இன்னும் மறக்க முடியவில்லை.
Must Read: ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள்...
எந்த உணவகமாக இருந்தாலும் இன்னும் மறக்கமுடியவில்லை என்ற சொல்லை மனங்களில் உருவாக்குவதே அது காலா காலத்துக்கு நின்று நிலைக்ககூடியது. வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகவேண்டும் என்று சொல்வதைப்போலவே இன்று பெரும்பாலான உணவகங்களின் இருப்பை புரிய முடிகிறது.இன்று பரவலாக பலரும் உணவகங்களை வெற்றிகரமாக நடத்துகின்றனர் என்பதை நாம் ஜனநாயகத் தன்மை மிக்கதாகப் பார்க்கலாம்.
இதன் பின்னணியிலுள்ள கலகக்குரல்களை யாரும் மறுக்க இயலாது என்பதைத்தான் புதிய குரல்கள் வாயிலாக நாம் புரிந்து கொள்கிறோம். ஆனாலும் கூட சொல்ல விரும்புவது தமிழ்நாட்டில் சைவமானாலும் அசைவமானாலும் கேரளா மற்றும் கர்நாடகாவை ஒப்பிடுகையில் உணவகங்களில் விலை அதிகம்.அதிகம் என்பதைவிட கொள்ளை விலை விற்கிறார்கள் என்பதுதான் உண்மை.
சைவ உணவகங்களும், அசைவ உணவகங்களும்
பொதுவாக இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களில், உணவகங்கள் சைவம், அசைவம் எனப் பிரிந்தே உள்ளன. நம் ஊரில் பெரும்பாலான அசைவ உணவு உண்பவர்கள் வாரத்தில் 4-5 முறைதான் அசைவம் உண்கிறார்கள். மற்றபடி சைவ உணவுதான் மிக அதிகமாக உண்ணப்படுகிறது.
அசைவம் உண்பவர்களும் நல்ல நாள், கிழமைகளில் அசைவம் உண்பதில்லை. சில மாதங்கள் (புரட்டாசி, மார்கழி) முழுவதும் அசைவம் தவிர்ப்பவர்கள் உண்டு. சைவ உணவு என்பது பிராமணர்களின் உணவு முறை எனச் சொல்லப்படுகிறது முற்றிலும் உண்மையல்ல. சமணம், பௌத்தமும் சைவ உணவைப் பேசுபவை.
ஒரு உணவகத்தில் அசைவம் பரிமாறப்பட்டால், அது அசைவ உணவகம் என்றே அறியப்படும். இதுதான் இன்றைய நடைமுறை. இன்னும் 25 ஆண்டுகள் கழித்து நிலை மாறலாம். ஆனால், இன்றுவரை இதுதான் வரலாறு. அசைவ உணவகமும், சைவ உணவகமும் வேறு வேறு தொழில்மாதிரிகள். அசைவ உணவகங்களில், பெரும்பாலும் இரு வேளைதான் தொழில் நடக்கும். வெள்ளிக்கிழமை, புரட்டாசி, மார்கழி மாதங்களில் வியாபாரம் குறைவாக நடக்கும்.ஆனால், சைவ உணவகம் அப்படி அல்ல. அங்கே எல்லா நாளும் மூன்று வேளையும் தொழில் நடக்கும்.
Must Read: சாப்பிட்ட உணவு தரம் குறைவா? வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்…
சிறு இனிப்பகமாக, உணவகமாகத் தொடங்கிய அடையார் ஆனந்த பவன், கடந்த 10-15 ஆண்டுகளில், மிகச் சிறந்த உணவகத் தொழில் குழுமமாக அறியப்பட்டுள்ளது. மிக வலுவான வணிகச் சங்கிலியை உருவாக்கி, தரமான உணவு, சுத்தமான வளாகம் என தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. இதே காலகட்டத்தில் சரவணபவன் பலவீனமடைந்ததும் உதவியுள்ளது என்றும் சொல்லலாம்.
அதன் உரிமையாளர், இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு பெரியார் ஒரு காரணம் எனச் சொன்னால், அவர் தனது உணவகத்தில் முட்டை தோசை போடுவாரா என ஒரு அறிவுக் கொழுந்து கேட்டிருக்கிறது. நம் சமூகத்தில் அறிவாளிகள் என அறியப்படும் கொழுந்துகள், நடைமுறையில் இருந்து விலகி எவ்வளவு வறட்டுத்தனமாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே அடையாளம்.
பெரியார் எனக்கு உந்துதல் எனச் சொன்னால், பெரியார் சொன்ன எல்லாவற்றையும் கேட்கவேண்டும் என வாதிடுதல் எல்லாம் புத்திசாலித்தனம் போல.இன்னொரு அறிவாளி, அங்கே உணவு மோசம்.. இதெல்லாம் எப்படி வெற்றிகரமாக நடக்கிறது என்பது பேரதிசயம் எனச் சொல்லியிருக்கிறார்.
முன்னெப்போதையும் விட, இன்று உணவகம், ஜவுளி போன்ற பொதுஜனத் தொழில்களில் போட்டி மிகவும் அதிகம். இனிப்புகளுக்காகப் பெயர் போன ஒரு சைவத் தொழில்குழுமம், ஒரு உணவகம் தொடங்கி பெரும் அளவுக்கு நஷ்டப்பட்டு இழுத்து மூடியது சில ஆண்டுகள் முன்பு நடந்தது.
மிக வெற்றிகரமான நுகர் பொருள் நிறுவனம் உணவகத் தொழிலில் ஈடுபட்டு தோற்றதும் வரலாறு. மோசமான உணவை விற்று இன்று அ.ஆ.பவன் மாதிரியான வெற்றிகரமான பெரும் தொழிற் குழுமங்கள் உருவாகவே முடியாது.
உண்மையில் இந்த அறிவாளிகளின் கருத்துக்கும், உண்மையான பிரச்சினைக்கும் தொடர்பே இல்லை என்பது அடுத்த தமாஷ். அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் பேசியவுடன், சில ட்விட்டர் ஐடிகள், அந்த உணவகத்தை பகிஷ்கரிக்கக் குரல் கொடுத்தனர். பாஜகவும், சில இந்துத்துவக் குரூப்களும் இதில் சேர்ந்து குரல் கொடுத்தனர். பெரியார் பேரைச் சொன்னால், பல பிராமணர்களுக்கும், இந்துத்துவ கும்பல்களுக்கும் கோபம் வரும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த அதிபுத்திசாலிகளுக்கு ஏன் வருகிறது எனப்புரியவில்லை.
மித்ரன் , பாலசுப்பிரமணியன் முத்துசாமி
#A2BRestaurants #foodpolitics #supportA2B #tnfoods
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments