மருத்துவப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தேங்காய் சுடும் பண்டிகை


’தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் உடலுக்கு தீங்கு ஏற்படும்… தேங்காயை உணவில் கொஞ்சம் சேர்த்தால் கூட ‘Bad cholesterol’ (கெட்ட கொழுப்பு) அதிகமாகிவிடும்…’ என்று பல வணிக நிறுவனங்கள் தங்கள் லாப நோக்கத்திற்காக சில காலமாக பொய்ப் பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலிலும், தேங்காயின் பெருமையைப் போற்றி அதற்கென ஒரு விழாவே தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. ’தேங்காய்ப் பண்டிகை’ அல்லது ’தேங்காய் சுடும் திருவிழா’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

தேங்காய்ப் பண்டிகை உருவாவதற்கு காரணமாக பல செவிவழி கதைகள் கூறப்பட்டாலும், தேங்காயின் மருத்துவ குணத்தை அனைவருக்கும் தெரிவிக்கவே இப்படி ஒரு விழா உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் ஆடி மாதம் முதல் நாளன்று தேங்காய் சுடும் பண்டிகை விமர்சையாக நடைபெறுகிறது. திருவிழாக்கள் நிறைந்த ஆடி மாதத்தை கோலாகலமாக தொடங்கிவைப்பதில் தேங்காய்ப் பண்டிகைக்கு முக்கிய பங்குண்டு.

தேங்காய் அலங்காரம்:

தேங்காயின் ஒரு கண்ணைத் துளைத்து, அதிலிருக்கும் நீரை வெளியேற்றிவிடுவார்கள். தேங்காய் மேலிருக்கும் நார்களை எடுத்துவிட்டு, தேங்காய் முழுவதும் மஞ்சள் பூச்சு நடைபெறும். தேங்காயை மண்ணில் தேய்த்து, நாரை நீக்கும் பொறுப்பினை சிறுவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். எள், பாசிப்பயிறு, நாட்டுவெல்லம், பச்சரிசி, அவல், பொட்டுக்கடலை போன்றவற்றை அரைத்த கலவையை துளைக்குள் செலுத்தி, வெளியெடுத்த தேங்காய் நீர் சிறிதளவு அதில் சேர்க்கப்படும். (தேங்காய்க்குள் இருக்கும் பொருட்கள் நன்றாக வேக, தேங்காய் நீர் மீண்டும் சிறிதளவு அனுமதிக்கப்படுகிறது). தேங்காயினுள் முக்கால் பாகம் மேற்சொன்ன கலவையும், கால் பங்கு தேங்காய் நீரும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்: சிறுநீரக கற்களை கரைக்கும் யானை நெருஞ்சில்...

பின் ஒரு நீளமான குச்சியைத் தேர்ந்தெடுத்து, அது துளைக்குள் பொருந்துமாறு ஒரு முனையை சீவி, தேங்காயுடன் இணைத்துவிடுவார்கள். குச்சிகளுக்கும் மஞ்சள் அலங்காரம் உண்டு. கிராமங்களில் பொதுவாக அழிஞ்சில் குச்சிகள் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் வாதநாரயணன் குச்சிகளும் தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்கப்படுகிறது.

மருத்துவப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தேங்காய் சுடும் பண்டிகை

தீ மூட்டிக் கொண்டாட்டம்:

பொதுவான ஒரு இடத்தில், காய்ந்த குச்சிகள், சருகுகள், காகிதங்கள் கொண்டு தீ மூட்டி அதை சூழ்ந்து நின்றுக்கொண்டு, ஆரவாரத்துடன் சிறுவர்கள் தேங்காயை சுட ஆரம்பித்துவிடுவார்கள். முற்காலத்திலிருந்தே சிறுவர்களுக்கென நடைபெறும் ‘Camp fire’ நிகழ்வாக இதை வைத்துக்கொள்ளலாம். குச்சியிலிருந்து தேங்காய் நழுவி விழுந்துவிடாமல் இருக்க, கையாளப்பட வேண்டிய பல நுணுக்கங்களை சுற்றி இருக்கும் பெரியவர்கள் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்.

சிறிது நேரத்தில் உள்ளிருக்கும் பொருட்களும் தேங்காயும் நன்றாக வெந்ததை தெரிவிக்கும் வகையில், தேங்காயின் ஓடு கருகுவதுடன் லேசாக தீப்பிடிக்கவும் தொடங்கிவிடும். தேங்காய் ஓட்டில் வெடிப்புகள் உண்டாவதும் தேங்காய் முழுவதுமாக வெந்துவிட்டதற்கான அறிகுறி தான். தேங்காயின் அனைத்து பகுதிகளும் தீயில் படும்படி, குச்சியின் உதவிக்கொண்டு தேங்காயை சுழற்றிக்கொண்டே இருக்க வேண்டும். சில நேரங்களில் தீயில் வேகும் போதே, குச்சியைவிட்டு நழுவி தேங்காய் உருண்டோடுவதை பிடிக்க சிறுவர்கள் பின்தொடர்வதும் சுவாரஸ்யமாக இருக்கும். 

 

இதையும் படியுங்கள்: டயட் புட்ஸ் உண்மையிலேயே டயட் அளிக்குமா?

மருத்துவ குணம்:

பின்னர் நெருப்பிலிருந்து எடுத்து தனியாக வைத்தவுடன், உள்ளிருக்கும் பொருட்களின் மணத்தோடு சேர்ந்து தேங்காயின் மணமும் தீயின் வெப்பதோடு அற்புதமான வாசனையைக் கொடுக்கும். சூடு ஆறியதும் விருப்பக் கடவுளுக்கு படையல் பொருளாக பரிமாறப்படும். அதன்பின் சுடப்பட்ட தேங்காய் பங்கிடப்பட்டு சுற்றமுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் மணமிக்க பிரசாதமாக நுழையும். உள்ளிருக்கும் எள், பாசிப்பயிறு, நாட்டுவெல்லம், அவல், பொட்டுக்கடலை ஆகியவற்றுடன் தேங்காயின் சுவையும் சேரும் போது உண்டாகும் இனிமையான சுவைக்கு ஈடுஇணையில்லை. இந்த ’தேங்காய் உணவு’ வயிற்றுப் புண்களை ஆற்றும். புரதக் கூறுகள் நிறைந்திருக்கும் இந்த உணவு, உடலுக்கு வலிமையைக் கொடுப்பதோடு, தேவையான நெய்ப்புத்தன்மையை அளிக்கும். தேங்காய் சுடுவதற்குப் பயன்படும் அழிஞ்சில் குச்சியும் மருத்துவ குணம் மிக்கது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. திருவிழா நாளன்று மட்டுமன்றி அவ்வப்போது சிற்றுண்டியாகவும் செய்து பிரமாதப்படுத்தலாம்.

குறையும் மோகம்:

நெடுங்காலமாக தவறாமல் கொண்டாடப்பட்டு வந்த இந்த திருவிழாவின் மோகம் இப்போது குறைய ஆரம்பித்துவிட்டது. பல குடும்பங்கள் குழும, சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த விழா, சமீப வருடங்களில் களையிழக்கத் தொடங்கிவிட்டது. வீட்டு வாசலில் தீ மூட்டி தேங்காய் சுட்ட நிகழ்வுகள், இன்று சமையல் அறைக்குள் இருக்கும் கேஸ் அடுப்புகளில் தேங்காய் சுடும் நிகழ்வுகளாக மாறிக்கொண்டே வருகின்றன. சூரியனுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் பொதுவெளியில் வைக்கப்பட்டு வந்த பொங்கல், இன்று கேஸ் அடுப்புகளில் வைக்கப்படுவதைப் போல!

மனநலம், உடல்நலம்:

நவீன வணிக தந்திரங்களைப் பற்றி கவலைக்கொள்ளாத கேரள மக்களின் சமையல் பதார்த்தங்களில் இப்போதும் முதன்மையான பங்கு தேங்காய் எண்ணெய்க்குத் தான். ஆனால் நாம் தான் தேங்காய் எண்ணெயின் மகத்துவத்தை உணராமல், ரீபைண்டு எண்ணெய்களின் இறுக்கமான பிடியில் சிக்கித் தவிக்கிறோம். நாம் கொண்டாடும் ஒவ்வொரு திருவிழாவிற்குப் பின்னும் ஒரு மருத்துவ சூட்சுமம் நிச்சயமாக உண்டு. அவ்வகையில் ‘முடியரசன்’ என பெயர் பெற்ற தேங்காய்காக பிரத்யேகமாக கொண்டாடப்படும் திருவிழாவிற்கும் மருத்துவ தொடர்பு உண்டு. தவறாமல் தொடரப்பட வேண்டிய குதூகலமான திருவிழா. இவை போன்ற திருவிழாக்கள் மனநலத்தையும் உடல் நலத்தையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. அவ்வகையில் ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக, தேங்காயின் மருத்துவ குணங்களை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் உருவான ’தேங்காய் சுடும் பண்டிகை’, சமூகத்தை ஒன்றிணைத்து, சமூக நலத்தை பாதுகாக்கும் விழா என்றால் மிகையல்ல!

-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

  

#CoconutBurningFestival #DenkaiSudumThiruvizla #KonguFestival #AadiFestival 

#HealthyCoconut 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 

 


Comments


View More

Leave a Comments