கலவைக் கீரை செய்யறது ரொம்ப ஈஸி….
கீரையின் முக்கிய பயன்கள்
- மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
- இதயநோய்கள் நேரிடாமல் தடுக்கலாம்
- மலச்சிக்கலை தீர்க்கும்
காய்கறிகளில் மிகவும் விலை மலிவானவை கீரைகள்தான். ஆனால், அதன் மருத்துவ குணங்கள் அளவிடமுடியாதவை. கீரைகள் உண்பதால் நமது உடலில் இருக்கக் கூடிய ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு இன்றி சமநிலையில் செயல்பட உதவுகின்றன.
வாழ்வியல் நோய்கள்
நமது தற்கால வாழ்க்கை முறையில் நம்மை பாடாய் படுத்தும் மலச்சிக்கல் கோளாறுகளுக்கு எளிய தீர்வு கீரை வகைகளை உண்பதுதான். பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள், எலும்பு தேய்மான பிரச்னைகளில் இருந்து விடுபட கீரை வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
லைப்ஸ்டைல் நோய்கள் எனப்படும் நீரழிவு, மாரடைப்பு போன்றவை நம்மை அணுகாமல் இருக்க அடிக்கடி கீரை சாப்பிட வேண்டும். கீரை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறையும்.
கொரோனாவால் விழிப்புணர்வு
எல்லாவகைக் கீரைகளிலும் சத்துகள் நிறைந்தே இருக்கின்றன. சந்தையில் கிடைக்கும் எந்த வகை கீரை என்றாலும் அதனை வாங்கி சமைத்து சாப்பிடலாம். கிராமத்து மனிதர்களின் அன்றாட உணவுகளில் கீரைக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. அதனால்தான் அவர்கள் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: மருத்துவப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தேங்காய் சுடும் பண்டிகை
கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகுதான் நகரத்து மனிதர்களிடமும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இப்போதுதான் ஆரோக்கியமாக இருக்க என்ன உண்பது, கீரைகளின் பலன்கள் என்ன என்று கூகுளில் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
தானா வளரும் கீரைகள்
கிராமங்களில் பெரும்பாலும் அனைத்து வகை கீரைகளும் விளையும் என்பதால் அடிக்கடி கலவைக்கீரை கூட்டு வைத்துச் சாப்பிடுவார்கள். கலவைக்கீரை... பொதுவா மழைக்காலங்கள்ல கிராமங்கள்ல வீட்டைச்சுத்தி வளரக்கூடிய குப்பைக்கீரையில தொடங்கி கண்ணுல, கையில என்னென்ன கீரை சிக்குதோ எல்லாத்தையும் பிடுங்கி கீரை வைப்பாங்க, பாட்டிமார்.
இன்னைக்கி அந்தப்பழக்கம் ரொம்ப குறைஞ்சு போச்சு... சென்னை மாதிரி இடங்கள்ல சில பாட்டிமார் கலவைக்கீரை விக்கிறாங்க.தமிழ்நாட்டுல பரவலா மழை பெய்ஞ்சிருக்கிறதால அங்கங்க செடி, கொடிகள் வளர்ந்து பச்சைப்பசேல்னு காட்சியளிக்கி. இந்த நேரத்துல வளர்ந்து நிக்குற கண்ணுல பட்ட கீரைகளை பறிச்சி சமைச்சி சாப்பிடலாம்.
எளிய சமையல் முறை
அண்மையில் குப்பைக்கீரை, முள்ளிக்கீரை, குப்பைமேனிக்கீரை, முடக்கத்தான், கானாவாழை, அம்மான்பச்சரிசி, நாய்வேளை, மூக்கிரட்டை, சாரணைக்கீரை, கோவைக்கீரை, காட்டு பொன்னாங்கண்ணி, தும்பை, பொன்னாவிரை போன்ற கீரைகளை பறிச்சிட்டு வந்து வெள்ளைப்பூண்டு, சின்னவெங்காயம், புளி, மிளகு, சீரகம் சேர்த்து வேகவச்சி நல்லா கடைஞ்சி உப்பு சேர்த்து சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்டோம். நல்ல சுவை.
இதையும் படியுங்கள்: சத்துமிக்க இயற்கை அவல் எங்கே கிடைக்கும் தெரியுமா?
இந்தமாதிரி கலவைக்கீரை சாப்பிடுறதால எல்லா சத்துகள் சரிசமமா கிடைக்கும். ஆனா, கொஞ்சம் ஹெவியா இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினைல இருந்து பல பிரச்சினைகள் சரியாகும். கழிவுகள் நீங்கும். வாதம், பித்தம், கபம்னு எல்லாம் சமநிலைக்கு வரும்.
உடல் நலம் பெற உதவும் கீரை
சென்னை மாதிரி இடங்கள்ல எங்க போறதுன்னு கேக்காதீங்க. கொஞ்சம் மெனக்கெட்டா கிடைக்கும். ஆனா அடையாளம் கண்டு கீரைகளை பறிச்சி சாப்பிடுங்க.
முந்துங்கள்... சலுகைக்கட்டணம் இன்றோடு முடிவடைகிறதுன்னு விளம்பரம் பண்ணும்போது எப்பிடி முண்டியடிச்சிட்டு ஓடுவோமோ அதுமாதிரி நோய்கள்ல இருந்து நம்மை தற்காத்துக்கிட இதுவே சரியான நேரம். தாவரங்கள் செழிச்சி வளர்ந்திருக்கு. இந்தக்கீரைகள் மட்டுமில்லாம் இன்னும் சில கீரைகளையும் பறிச்சி சமைச்சி சாப்பிடலாம். எல்லோரும் நலம் பெறுக!
-எம்.மரியபெல்சின் ( திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். )
#Greens #Keerai #Spinach #KeeraiBenefits #HealthySpinach
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments